ஹலோ With காம்கேர் -11 : உங்களுக்கு திருவாதிரை களி செய்யத் தெரியுமா?

ஹலோ with காம்கேர் – 11
ஜனவரி 11, 2020

கேள்வி: உங்களுக்கு திருவாதிரை களி செய்யத் தெரியுமா?

மிக நேர்த்தியாக வீட்டு வேலைகள் செய்வதில் என் அப்பாவை மிஞ்ச யாராலும் முடியாது என்ற கர்வம் எனக்கு எப்பவுமே உண்டு.

சமைக்கும் முன்னர் அதற்குத் தேவையானதை தயார் செய்து வைத்துக்கொள்ளும் நேர்த்தியாகட்டும், சமைக்கும்போது ஊரைக்கூட்டும் வாசனையுடன் தயார் செய்வதாகட்டும், சமைத்தப்பின்  சமையல் செய்த சுவடே தெரியாத அளவுக்கு சமையல் மேடையை சுத்தம் செய்வதாகட்டும், சமைத்ததை  அழகாக டைனிங் டேபிளில் எடுத்து வைப்பதாகட்டும் அப்பாவுக்கு நிகர் அப்பாதான்.

சமைப்பதுகூட பெரிதல்ல. சாப்பாடு போடுவதே ஒரு கலை. அப்பாவின் சமையலுக்கும் விருந்தோம்பலுக்கும் எங்கள் குடும்பத்தில் ஏகப்பட்ட ஃபேன்ஸ்.

சமைப்பது மட்டுமல்ல. வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்வார். முழு ஈடுபாட்டுடன் அவர் செய்வதைப் பார்க்கும்போதே நமக்கும் ஓர் உத்வேகம் வரும்.

எங்கள் சிறுவயதில் ஆண்கள் வீட்டு வேலைகள் செய்வதை பற்றி பத்திரிகைகளில் காமெடியாக ஜோக்குகள் வெளிவரும்.

எங்கள் குடும்பங்களில் எங்களைச் சுற்றி இருக்கும் ஆண்கள்,  பெண்களுக்கு இணையாக வீட்டு வேலைகள் அத்தனையையும் செய்துகொண்டே இருப்பார்கள். எனவே எங்களுக்கு அது வெகு சாதாரண விஷயம்.

பள்ளிக்கு அப்பா செய்த டிபனை எடுத்துச் செல்லும்போதெல்லாம் ‘இது எங்க அப்பா செய்தது’ என்றால் சக மாணவர்கள் ஆச்சர்யப்படுவார்கள். சிலர் நமுட்டுச் சிரிப்பு சிரிப்பார்கள்.

கல்லூரி படிக்கும் காலங்களில் உன் அம்மாவும் வேலைக்குச் செல்வதால் அப்பா வீட்டு வேலைகளை செய்துதானே ஆக வேண்டும் என சப்பைக் கட்டுக் கட்டிப் பேசுவார்களே தவிர ஆண்கள் வேலை செய்வதை பாராட்டவே மாட்டார்கள்.

அப்போது உடனடியாக என்னால் பதில் சொல்ல தெரியாது. ஆனால் நிறைய யோசிப்பேன். வீட்டுக்கு வந்ததும் அப்பா அம்மாவுடன் பேசுவேன்.

எனக்கு இரண்டு பெரியப்பா. ஒரு பெரியப்பா பள்ளி ஆசிரியர். பெரியம்மா வேலைக்குச் செல்லவில்லை. ஆனாலும் பெரியம்மாவுடன் விடியற்காலையிலேயே  எழுந்து சமைத்து வீட்டு வேலைகளை செய்துவிட்டு பள்ளிக்குக் கிளம்புவார். இவரிடம் நான் கற்றது சுறுசுறுப்பை.

மற்றொரு பெரியப்பா கிராமத்தில் வசித்தார். நடுத்தர வயதிலேயே பக்கவாதம் வந்துவிட்டது. ஆனாலும் இடது கையாலேயே பூரியை எண்ணெயை பொரிப்பது, சப்பாத்தியை திருப்பிப் போட்டு எடுப்பது, பண்டிகை தினங்களில் பலகாரங்கள் செய்வது என பெரியம்மாவுக்கு ஈடாக அத்தனையையும் செய்வார். இவரிடம் நான் பார்த்தது தன்னம்பிக்கையை.

வீட்டு வேலைகள் செய்வது என்பது இயல்பாக வர வேண்டிய குணம். ஊருக்கு உழைக்க வேண்டாம், தங்கள் குடும்பத்துக்கு தங்கள் வீட்டுக்கு தங்கள் உறவுகளுக்குத் தேவையானதை மட்டுமாவது செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

என் சகோதரியின் மகன் ஆகாஷ். வயது 14. அமெரிக்காவில் வசிக்கிறான். அவனது 7 வயதில் இருந்து அவன் புளியோதரை செய்வதில் எக்ஸ்பர்ட். ரெடிமேட் புளிகாய்ச்சல் பயன்படுத்த மாட்டான். தானாகவே புளிகாய்ச்சல் செய்து சாதத்துடன் கலந்து பக்குவமாக தயார் செய்யும் அழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

அமெரிக்கா சென்று சென்னை திரும்பும் போதெல்லாம் ஃப்ளைட்டுக்கு அவன் தயார் செய்துகொடுக்கும் புளியோதரையும் உண்டு.

இன்று ஆண்கள் சமைப்பதும் வீட்டு வேலைகள் செய்வதும் பெருமையான விஷயங்களாக மாறிவருகிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்தான்.

நம் வீட்டுக்கு நாம் வேலை செய்வது பெருமைப்படும் விஷயமும் அல்ல. சிறுமைப்படும் சமாச்சாரமும் அல்ல. நம் ஒவ்வொருவரின் கடமை. அவ்வளவே.

கீழ் படத்தில் அப்பா தயார் செய்யும் திருவாதிரைக் களி, மேல் படத்தில் ஆகாஷ் தயார் செய்யும் புளியோதரை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 68 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon