பீட்டா வெர்ஷன் மனிதர்கள்
சாஃப்ட்வேர்களில் ஒரிஜினல் வெர்ஷன் ரிலீஸ் செய்வதற்கு முன்னர் பீட்டா வெர்ஷனை வெளியிடுவார்கள். அதிலுள்ள பிழைகள், மாற்றங்கள், அசெளகர்யங்கள் போன்றவற்றை கண்டறிவதற்காக இந்த வெர்ஷன் உதவுகிறது. உதாரணத்துக்கு விண்டோஸ், மைக்ரோசாஃப்ட் போன்ற சாஃப்ட்வேர்கள் முதலில் பீட்டா வெர்ஷனாகவே வெளிவரும்.
குறிப்பிட்ட காலகட்டங்களுக்கு பீட்டா வெர்ஷனில் இயங்கும் சாஃப்ட்வேர்களில் உள்ள பிழைகள் நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட ஒரிஜினல் வெர்ஷன் வெளியிடப்படும்.
இளைஞர்களுக்கு படிப்பு, நட்பு, பொழுதுபோக்கு, திறமைகளை வளர்த்தெடுத்தல் என தங்கள் நலன் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தும் கல்லூரிவரையிலான காலகட்டத்தை அவர்களுக்கான பீட்டா வெர்ஷனாகக் கொள்ளலாம்.
வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள் என அத்தனைபேரின் வழிகாட்டுதலுடன் கீழே விழுந்து எழுந்து நல்லது கெட்டதுகளை கற்றுக்கொள்ளும் அருமையான காலகட்டம் அது.
அந்த காலத்தை சரியாகப் பயன்படுத்தும் இளைஞர்கள் படித்து முடித்து கல்லூரிக்கு வெளியே வந்து வேலையில் சேர்ந்த பிறகான காலகட்டத்தில் பீட்டா வெர்ஷனில் உள்ள சின்னச் சின்ன குறைகளை நிறைகளாக்கிக் கொண்டு வெகுவிரைவில் ஒரிஜினல் வெர்ஷனுக்கு மாறிவிடுகிறார்கள்.
ஒருசில குறைகளுடன் பீட்டா வெர்ஷனிலேயே இயங்கும் சாஃப்ட்வேர்கள் கம்ப்யூட்டர் / லேப்டாப்பின் இதர இயக்கங்களையும், அது சார்ந்து இயங்கக் கூடிய சாஃப்ட்வேர்களையும் தாறுமாறாக செயல்பட வைக்கும் வல்லமை பெற்றது. எவ்வளவு சீக்கிரம் பீட்டா வெர்ஷனில் உள்ள குறைகள் நீக்கப்பட்டு ஒரிஜினல் வெர்ஷனுக்கு மாற்றப்படுகிறதோ அப்போதுதான் அந்த சாஃப்ட்வேர் பயனாளர்களிடம் சென்று சேரும். இல்லையெனில் அது Failure Product ஆகிவிடும்.
ஒரிஜினல் வெர்ஷனுக்கு மாறாமல் பீட்டா வெர்ஷனில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் நிலையும் அதுபோலதான்.
‘இன்னும் நீங்கள் பீட்டா வெர்ஷனிலேயே இருக்கிறீர்களா… சீக்கிரமாக ஒரிஜினல் வெர்ஷனுக்கு மாறிவிடுங்கள்… இல்லையென்றால் வாழ்க்கையில் பின்தங்கி விடுவீர்கள்…’ என்பதே காலம் கொடுக்கும் எச்சரிக்கை OTP.
கிடைத்த வேலையா பிடித்த வேலையா?
இருபது வருடங்களுக்கு முன்னர் எங்கள் நிறுவனத்துக்கு ரெகுலராக ஸ்டேஷனரி வாங்கிக்கொண்டிருந்த கடைக்கு சில தினங்களுக்கு முன்னர் நானே நேரில் சென்றிருந்தேன். ஏதேனும் பழைய முகம் தென்படுகிறதா என பார்த்தேன்.
‘வாங்க காம்கேர் மேடம் எப்படி இருக்கீங்க…’ என்றபடி ஒருவர் விசாரிக்க அவர் முகத்தை உற்று நோக்கினேன். வயோதிகத்தினால் முகம் மாறியிருந்தாலும் அடையாளம் தெரிந்தது.
‘நீங்க எப்படி இருக்கீங்க… ஓனர் எப்படி இருக்கிறார்…’ என பொதுவான விசாரிப்புக்குப் பிறகு எனக்குத் தேவையானதைச் சொன்னேன்.
காலம் ஓடியிருந்தாலும் அவர் செய்துகொண்டிருந்த வேலை மட்டும் மாறவே இல்லை. அதே வேலை. கஸ்டமர் கேட்கும் பொருட்களை தேடி எடுத்துக்கொடுக்கும் சேல்ஸ் மேன் பணி. சேல்ஸ் மேனஜராகக் கூட உயரவில்லை.
அவரைவிட வயதில் மிகவும் குறைந்த ஒரு மேனேஜர் அவரிடம் சேல்ஸ்மேனிடம் பேசும் தொனியில் ஏதோ கடுமையாகப் பேசினார்.
பொருளும் பில்லும் வந்ததும் பணம் கொடுத்துவிட்டு விடைபெற்றேன்.
நீண்ட காலம் ஒரே நிறுவனத்தில் பணிபுரியலாம். மகிழ்ச்சியான விஷயம். ஆனால் ஒரே வேலையை செய்துகொண்டிருப்பதுதான் சோகம்.
எல்லோருக்குமே தாங்கள் விரும்புகின்ற துறையில் வேலை கிடைத்துவிடுவதில்லைதான். அப்படி கிடைத்துவிட்டால் அவர்கள் பாக்கியசாலிகள்.
கிடைக்கின்ற ஏதேனும் ஒரு வேலையில் அதன் போக்கிலே செய்துகொண்டு வாழ்க்கையை ஓட்டுபவர்கள் முதல் பிரிவினர். இவர்கள் குட்டையில் தேங்கிய நீர்போல வாழ்பவர்கள். நான் பார்த்த சேல்ஸ் மேன் இந்தப் பிரிவுதான்.
கிடைத்த வேலையில் தங்களுக்கான ஆர்வமான பிரிவு எங்கிருக்கிறது என கண்டறிந்து அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு முன்னேறுபவர்கள் இரண்டாவது பிரிவினர். இவர்கள் நதிபோல ஓடிக்கொண்டிருப்பவர்கள்.
ஒரு நண்பர். திறமை என்று எதுவும் குறிப்பாகக் கிடையாது. ஆனாலும் எதையுமே ஆர்வமாகக் கற்றுக்கொள்வார். ஆஃபீஸ் அசிஸ்டெண்ட்டாக பணியில் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் டைப்பிங், லே அவுட் செய்தல், கிராஃபிக்ஸ் என கற்றுக்கொண்டு இன்று ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸின் மேனேஜராக பணியில் உயர்ந்திருக்கிறார். இவர் இரண்டாவது பிரிவின்கீழ் வருவார்.
கிடைத்த வேலையை செய்துகொண்டு வேலை நேரம் போக மீதி நேரத்தில் தங்களுக்குப் பிடித்த பணியை செய்பவர்கள் மூன்றவாது பிரிவினர். இவர்கள்தான் மனநிறைவுடன் வாழத் தெரிந்தவர்கள். அலுவலக நேரம்போக வெளியே தங்களுக்குப் பிடித்ததை மனதுக்கு நிறைவாக செய்வதினால், அந்த மனநிறைவு அலுவலகத்தில் அவர்கள் பணி செய்யும் துறை அவர்களுக்குப் பிடிக்காத துறையாக இருந்தாலும் அதைகூட ஈடுபாட்டுடன் செய்ய வைக்கும்.
எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவருக்கு ஆர்வமும் ஈடுபாடும் ஹோமங்கள், பூஜைகள் என ஆன்மிகத்தில். கிடைத்த வேலையோ பணி பத்திரிகைத்துறையில்.
ஆனாலும் இவர் ஹோமங்கள் செய்வதில் முறையாக ஒரு குருவிடம் பயிற்சி எடுத்துக்கொண்டு அவருடனேயே சிஷ்யராக பல ஹோமங்களுக்குச் சென்று அவற்றை நடத்தி வைத்து இன்று அவராகவே தனியாக அலுவலக நேரம்போக மீதி நேரத்திலும், விடுமுறை தினங்களிலும் ஹோமங்கள் நடத்தித் தருகிறார். ஆத்மார்த்தமாக இவர் விரும்பும் ஆன்மிகப் பணியை செய்வதால் அலுவலகத்தில் தனக்குக் கிடைத்த பணியையும் திறம்பட செய்கிறார். இவர் மூன்றாவது பிரிவின்கீழ் வருவார்.
இந்த மூன்று பிரிவில் நீங்கள் எந்தப் பிரிவு என்பதை உற்று நோக்குங்கள். தேங்கிய குட்டை நீராய் உங்கள் வாழ்க்கை மாறிவிடாமல் இருக்க உங்களை அப்டேட் செய்துகொள்ளுங்கள். இதுவே வாழ்க்கையை சுவாரஸ்யம் குன்றாமல் நடத்திச் செல்ல உதவும் OTP.
உங்கள் பாதையை நீங்கள் தீர்மானியுங்கள்!
‘எப்போது நீ நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உனக்கு மேலே ஒன்று வேலை செய்கிறது என்று அர்த்தம். அதன் பெயர்தான் விதி. வீரன் வெற்றி பெற்றால் வீரத்தால் விளைந்தது. கோழை தோல்வியடைந்தால் கோழைத்தனத்தால் வந்தது. வீரன் தோல்வியுற்றாலோ, கோழை வெற்றி பெற்றாலோ விதியின் பிரவாகம். எடுத்து வைத்த அடியெல்லாம் வழுக்குகிறது. என்ன செய்வது என்றே தெரியவில்லையா. நின்றுவிடு. முடிவை கடவுளிடம் விட்டுவிடு. அவன்மீது நம்பிக்கை இல்லை என்றால் காலத்திடம் விட்டுவிடு. நடுக்கடலில் தத்தளிக்கும் ஆளே இல்லாத படகுகூட என்றோ ஒருநாள் ஏதோ ஒரு கரையைச் சேரும்…’
‘அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகத்தை எடுத்துக்காட்டி நடிகர் சிவகுமார் பேசியதுதான் இந்தக் கருத்து.
வேலையில் ஏற்றம் எதுவுமே இல்லாமல் பின் தங்கிவிட்ட ஒரு நண்பர் என்னிடம் தன் நிலையைச் சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டார்.
உணவு உடை இருப்பிடம் இந்த மூன்றுக்காகவே நாம் அனைவரும் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
அந்த ஓட்டத்தின் வேகம் நாம் படித்த படிப்புக்கும், நம்முடைய திறமைக்கும் ஏற்ப நாம் செய்கின்ற வேலையைப் பொருத்து அமையும். ஒரு சிலர் வேகமாக முன்னேறுவார்கள், சிலர் கொஞ்சம் கொஞ்சமாய் மெதுவாய் ஏற்றம் பெறுவார்கள், இன்னும் ஒருசிலர் பின்தங்கி விடுகிறார்கள்.
வாழ்க்கையில் முன்னேற படிப்பும், திறமையும் மட்டும் போதாது. Street Smartness அவசியம் தேவை. அது என்ன Street Smartness?
புத்திசாலித்தனத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று Book Smartness, இரண்டாவது Street Smartness.
கல்வி அறிவை வைத்துக்கொண்டு அதன்படி நான் இப்படித்தான் என்று தன்னைச் சுற்றி ஒரு வரையறை அமைத்துக்கொண்டு வாழும்போது வாழ்க்கையின் ஓட்டம் கடினமாகவே இருக்கும். இந்த மாதிரியான புத்திசாலித்தனத்துக்கு ‘புக் ஸ்மார்ட்னெஸ்’ என்று பெயர். ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது’ என சும்மாவா சொன்னார்கள் நம் பெரியோர்கள்.
இருக்கும் இடத்துக்கு ஏற்றாற்போல அவர்களின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப சூட்சுமத்துடன் வாழத் தெரிந்தவர்களிடம் ‘ஸ்ட்ரீட் ஸ்மார்ட்னெஸ்’ அதிகமிருக்கும். ஓரளவுக்கு அடித்துப் பிடித்து மேலே வந்துவிடுவார்கள் இவர்கள்.
ஓரிடத்தில் பணிக்கு சேருவதற்கு முன்பே அந்தப் பணி குறித்து ஆராய்ந்துவிட்டே சேர வேண்டும். அப்படி சேர்ந்த பிறகு அதில் உங்களைப் பொருத்திக்கொள்ள தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி தகுதிகளை வளர்த்துக்கொண்டும் உங்களால் மேலே வரமுடியவில்லை என்றாலும் உங்களை விட தகுதியானவர்கள் மேலே சென்று கொண்டிருக்க நீங்கள் கீழே சென்றுகொண்டிருந்தால் எங்கோ தவறிருக்கிறது என்பதை உணர்ந்து அதை கண்டறிந்து களைய முற்பட வேண்டும்.
எதுவுமே ஒத்துவரவில்லை என்றால் காலம் தாழ்த்தாமல் அந்த இடம் உங்களுக்கானது அல்ல என்பதை உணர்ந்து வெளியே வந்து உங்களுக்கான மாற்றுப் பாதையை கண்டறிய வேண்டும். காலம் தாழ்த்தத் தாழ்த்த உங்கள் வயதும் ஏறிக்கொண்டே வரும். குடும்பமும் பெரிதாகி இருக்கும். குழந்தைகளும் வளர்ந்து அவர்களின் எதிர்காலமும் பாதிக்கப்படும்.
அமெரிக்காவுக்கு எம்.எஸ் படிக்கச் சென்ற ஒருவர் படிப்பை பாதியிலேயே விட்டு இந்தியா வந்தடைந்தார். அவருக்கு ஈடுபாடு ஆன்மிகத்தில். அதை நோக்கிய பாதையில் தன்னை வடிவமைத்துக்கொண்டார். யோகாவில் பட்டம் பெற்று பேராசிரியராக பணியில் சேர்ந்து, தனியாக யோகா வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
எல்லோரும் அவர் அமெரிக்காவில் இருந்து படிப்பை பாதியில் விட்டு இந்தியா வந்த போது அவர் மீது பரிதாபப்பட்டார்கள். ‘பிழைக்கத் தெரியாதவன்’ என்றார்கள். ஆனால் அவர் தெளிவாகவே இருந்தார். தனக்குப் பிடித்தப் பாதையை தானே அமைத்துக்கொண்டார்.
முடிந்தால் உங்கள் பாதையை நீங்களே வடிவமையுங்கள். முடியவில்லையா? ஏற்கெனவே இருக்கும் பாதையில் உங்களுக்கானதை தீர்மானிக்கவாவது கற்றுக்கொள்ளுங்கள். இதுவே வெற்றிகரமான வாழ்க்கைக்கான OTP.
இந்தா பிடிங்க உங்களுக்கான OTP…
குறிப்பிட்ட காலத்துக்குள் பீட்டா வெர்ஷனில் இருந்து ஒரிஜினல் வெர்ஷனுக்கு மாறுவது, நமக்கான பாதையை நாமே வடிவமைக்கவோ அல்லது தீர்மானிக்கவோ செய்யும் திறனைப் பெறுவது, நம்மை தொடர்ச்சியாக அப்டேட் செய்துகொள்வது இவையே வாழ்க்கையில் எதிர்படும் இன்னல்களை தகர்த்தெறிந்து முன்னேற்றம் காண்பதற்கான OTP.
எழுத்தும் ஆக்கமும் காம்கேர் கே. புவனேஸ்வரி
புதிய தலைமுறை – பெண் மாத இதழ்
வாழ்க்கையின் OTP – 18
ஜனவரி 2020