ஹலோ with காம்கேர் – 20
ஜனவரி 20, 2020
கேள்வி: மனிதன் மனிதனாக வாழ்வதற்கான ஃபார்முலா என்ன?
ஒருமுறை ‘மனிதன் மனிதனாக வாழ எப்படிப்பட்ட இலட்சியத்தை கடைபிடிக்க வேண்டும்?’ என கேள்வி கேட்ட ஆஸ்திரேலிய ஆராய்ச்சி மாணவனுக்கு காஞ்சி மஹா பெரியவர் ஸ்ரீமத் பாகவதத்தில் இருந்து ஒரு கருத்தை எடுத்துச் சொல்லி விளக்கியிருக்கிறார்.
பிரகலாதன் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி கர்வத்துடன் ஆட்சி புரிந்து வந்தான்.
மிகச் சிறந்த விஷ்ணு பக்தனான பிரகலாதனுக்கு, அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன்தான் கடவுள் என்று போதித்தார்.
ஆனால் பிரகலாதன் ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் தன் கடவுள் என்று கூறினான்.
இதனால் ஆத்திரமடைந்த இரணியன் மகனென்றும் பாராமல் கொடூரமான முயற்சிகள் மூலம் கொல்ல முயற்சித்து தோல்வியில் துவண்டு மாற்று வழியை யோசித்தான்.
மந்திரங்கள் மூலம் பிரகலாதனை அழிக்கலாம் என முடிவு செய்து, வேத வித்துக்களை அமர்த்தி மந்திரங்களை மகன் மீது ஏவ வைத்தான். பிரகலாதனின் விஷ்ணு பக்தியால் அந்த மந்திரங்கள் அவனை நெருங்கமுடியாமல் தவித்தன. ஏவப்பட்ட மந்திரங்கள் யார் மீது ஏவப்பட்டதோ அவரை அழிக்கும், முடியவில்லை என்றால் அவை ஏவி விட்டவர்களையே அழித்துவிடும்.
அப்போது பிரகலாதன், ‘என் தந்தையின் சொல்லை தட்ட முடியாமல்தான் வேத வித்துக்கள் அந்த மந்திரங்களை என் மீது ஏவினர். அவர்களுக்கு கெட்ட எண்ணம் கிடையாது. என் மனதில் அன்பு இருப்பது உண்மை என்றால் அந்த மந்திரங்கள் ஒன்றுமில்லாமல் போகட்டும்…’ என விஷ்ணுவிடம் பிராத்தனை செய்தான்.
அப்போது குரு சுக்கிராச்சாரியாரிடம் படிக்கின்ற சக மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பிரகலாதனை பார்க்க, அவர்களுக்கு பிரகலாதன் மனிதர்களின் வாழ்க்கை இலட்சியம் என்ன, மனிதன் மனிதனாக வாழ என்ன செய்ய வேண்டும் போன்றவற்றுக்கு விளக்கம் கொடுத்தான்.
‘நாம் அசுரர்களாக இருக்கலாம் அல்லது வேறு எந்த குலத்தில் பிறந்தவர்களாகவும் இருக்கலாம். எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாக இருப்பதும், தயையுடன் இருப்பதும், இரக்கத்துடன் இருப்பதும்தான் மனுதர்களாகப் பிறந்ததின் பயன்… இரக்கமா இருப்பதுதான் தேவ குணம், குரூரமா இருப்பதுதான் அசுர குணம்… சக மனிதர்களிடம் மட்டும் இல்லாமல் எல்லா ஜீவராசிகளிடமும் அன்பாக இருக்கணும்…’
ஆம். அன்பும் ஒரு அறம்தான். அன்பு, தான் இருக்கின்ற இடம் முழுவதும் தன் வைப்ரேஷனை பரப்பி அந்த இடத்துக்கு வருகின்ற உயிரினங்கள் அனைத்தையும் அன்பால் செயல்பட வைக்கும்.
அதனால்தான் அந்த காலத்தில் ரிஷிகள் வாழும் இடங்களில் சிங்கமும் மானும் ஒன்றாக தண்ணீர் குடித்தன, கீரியும் பாம்பும் ஒற்றுமையாக இருந்தன என படித்திருப்போம். பிறவியிலேயே விரோதிகளாக படைக்கப்பட்ட உயிரினங்கள்கூட ஒன்றுடன் ஒன்று அன்பாக இருந்ததற்கானக் காரணம் ரிஷிகளின் அன்பின் தாக்கம் அந்த சூழலையே அன்பு மயமாக மாற்றிவிடுவதுதான்.
சொல்லாலும் செயலாலும் மனதாலும் நல்லது செய்வது அனைத்துமே அறம். அந்த அறமே அன்பு.
அன்பும் அறனும் பின்னிப் பிணைந்த பண்பே மனிதன் மனிதனாக இருப்பதற்கான அச்சாணி.
இதுதான் மனிதன் மனிதனாக வாழ்வதற்கான ஃபார்முலா!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software