ஹலோ with காம்கேர் – 29
ஜனவரி 29, 2020
கேள்வி: ஆடி அசையும் பேருந்தில்கூட அனிமேஷன்களை உருவாக்க முடியுமா?
மரங்கள் சூழ்ந்த அழகிய கிராமத்தில் இயங்குகின்ற தொடக்கப்பள்ளியில் பள்ளிநேரம் முடிவடைகிறது. மாணவ மாணவிகளை வீட்டுக்கு அனுப்பிய பிறகு தலைமை ஆசிரியரும், மற்ற ஆசிரியர்களும் வீட்டுக்குக் கிளம்புகிறார்கள்.
ஓரிருவர் ஸ்கூட்டியில் கிளம்பிச் செல்கிறார்கள். மற்றவர்கள் பேருந்து நிறுத்தத்தில் பஸ்ஸுக்காகக் காத்திருக்கிறார்கள்.
பேருந்து வந்ததும் கூட்டத்தில் ஏறி கிடைக்கின்ற இடத்தில் அமர்ந்து கொள்கிறார்கள்.
‘அன்றெல்லாம் பஸ்ஸில் ஏறினால் நாங்கள் புத்தகம் படிப்போம்… இப்பவெல்லாம் யார் புத்தகம் படிக்கிறார்கள். சதா மொபைலை நோண்டுகிறார்கள்…. காதில் ஹெட்செட் போட்டு வீடியோ பார்கிறார்கள்… ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என அவையே கதி என கிடக்கிறார்கள்’ என பலரும் ஆதங்கப்படுவதை பார்த்திருப்போம்.
இப்படி சொல்பவகளிடம் நான், ‘உங்கள் காலத்தில் ஸ்மார்ட் போன் இருந்திருந்தால் நீங்களும் இப்படித்தான் இருந்திருப்பீர்கள். இன்று மாணவர்கள் வீடியோ, ஆடியோ, ஃபேஸ்புக், வாட்ஸ் அப்புக்காக மட்டும் ஸ்மார்ட்போனை பயன்படுத்தவில்லை. அதில் பாடங்களை படிக்கிறார்கள். வகுப்பு மாணவர்களுடன் தேர்வுக்கான கேள்வி பதில்களை பெறுகிறார்கள். அமேசானில் புத்தகம் வாங்குகிறார்கள். இப்படி அவர்கள் பெரும்பாலான தேவைகளை ஸ்மார்ட் போனிலேயே முடித்துக்கொள்கிறார்கள்…’ என்று புரிய வைப்பதுண்டு.
இந்தப் பேருந்தில் ஏறிய ஓர் ஆசிரியர் என்ன செய்தார் தெரியுமா?
ஸ்மார்ட் போனில் அன்று வகுப்பில் எடுத்த புகைப்படங்களையும், ஆடியோ, வீடியோக்களையும் வைத்து ஃபோட்டோ கிரிட், வீடியோ ஷோ போன்ற ஆப்களைப் பயன்படுத்தி அனிமேஷன் தயார் செய்துகொண்டே போகிறார். வீடியோவில் தேவையான மாற்றங்களை செய்கிறார். விருப்பமான இசையை சேர்க்கிறார். அவ்வப்பொழுது சில தகவல்களையும் டைப் செய்கிறார். பின்னர் அவற்றைத் தொகுத்து அனிமேஷனாக்கி யாருக்கோ அனுப்பி வைக்கிறார்.
அந்த ஆசிரியர் பெயர் செல்வி. திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஒன்றியம் ஊராட்சி கொண்டாநகரம் ஒன்றிய துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார்.
யாருக்கோ அனுப்பி வைக்கிறார் என்று சொன்னேனே, அது வேறு யாருக்கோ அல்ல. எனக்குத்தான். அவர் அனுப்பிய அனிமேஷனைத்தான் இன்றைய பதிவில் இணைத்துள்ளேன்.
இவரைப்போலவே பல ஆசிரியர்கள் தொழில்நுட்பத்தில் கலக்கி வருகிறார்கள்.
சிறிய கிராமத்தில் ஆடி அசைந்து ஓடிக்கொண்டிருக்கும் பேருந்தில் இருந்து ஓர் ஆசிரியர் வீடியோ தொகுப்பை தயார் செய்து பரபரப்பான சென்னையில் இயங்குகின்ற ஒரு சாஃப்ட்வேர் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுவே தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்துக்கான சாட்சி.
எனக்கு எதற்கு அனுப்பினார்?
அரசு பள்ளி மாணவர்களுக்காக அறம் வளர்ப்போம் என்ற வாட்ஸ் அப் குழுமத்தை 2020 – ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கினோம். வருடத்தின் 365 நாட்களும் தினமும் காலை 6 மணிக்கு அறநெறி கருத்துக்களை அதில் பகிர்வேன்.
இந்த அறநெறி கருத்துக்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக என்றாலும் இதிலுள்ள கருத்துக்கள் ஆசிரியர்களுக்குமே பயன்படும் வகையில்தான் எழுதி வடிவமைத்துத் தருகிறேன்.
ஆசிரியர்கள் அவற்றை தங்கள் பள்ளி மாணவர்களுக்கு சொல்லிகொடுத்து அவற்றை வீடியோ எடுத்துப் பகிர்வார்கள்.
ஆசிரியர்கள் அனுப்புகின்ற வீடியோக்கள் அறம் வளர்ப்போம் குழுவின் யு-டியூப் சேனலில் வெளியிடுகிறேன்.
பெரும்பாலும் சிறு நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் இயங்குகின்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களே இந்தக் குழுவில் இணைந்திருக்கிறார்கள்.
25 வருடங்களுக்கு முன்னர் தொழில்நுட்பத்தின் பக்கம் மக்களின் கவனத்தை ஈர்க்கவும், அதன் பயன்பாடுகளை புரிந்துகொள்ள வைப்பதற்கும் பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்தது.
கடந்த பத்து வருடங்களாகவே உச்சத்தில் இருக்கும் தொழில்நுட்பம் ‘இனி இந்த மக்கள் நம்மை என்னவெல்லாம் செய்து ஆட்டுவிக்கப் போகிறார்களோ?’ என்று எண்ணும் அளவுக்கு அதன் வீச்சு அங்கிங்கெனாதபடி பரவியுள்ளது.
அசாத்திய வளர்ச்சி. அசர வைக்கும் உச்சம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software