ஹலோ with காம்கேர் – 28
ஜனவரி 28, 2020
கேள்வி: சமீபத்தில் எனக்கு நிஜத்திலும் கனவிலும் ஏற்பட்ட இன்ப அதிர்வலைகள் என்ன தெரியுமா?
நேற்று இரவு 9.30. நேற்று அந்த நேரத்தில் மெசஞ்சரில் ஒரு ஃபேஸ்புக் நட்பிடம் இருந்து ஸ்கேன் செய்யப்பட்ட போட்டோக்கள் வந்திருந்தன.
சிவகாசி ஸ்ரீஷெண்பகவிநாயகர் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஏழாம் வகுப்புப் படிக்கும் எஸ்.சந்தியா என்ற மாணவி சோஷியல் சயின்ஸ் பாடத்துக்காக தமிழ்நாட்டை சேர்ந்த 10 தலைசிறந்த பெண் சாதனையாளர்களை தொகுத்து ஒரு ப்ராஜெக்ட் செய்திருப்பதாக அவரது அம்மா தகவல் கொடுத்திருந்தார்.
அந்த ப்ராஜெக்ட்டில் முதலாவதாக அரசியலில் சாதனையையும் புரட்சியையும் ஏற்படுத்திய இரும்புப் பெண்மணி டாக்டர் ஜெ. ஜெயலலிதா அவர்கள், இரண்டாவதாக சாஃப்ட்வேர் துறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தி புதுமைகளைப் புகுத்திய தொழில்துறை வல்லுநராக காம்கேர் கே. புவனேஸ்வரி (நானே தான்!!!), மூன்றாவதாக 99 வயதிலும் யோகாவை விடாமல் செய்து வந்ததுடன் பத்து இலட்சம் மாணவர்களை உருவாக்கி சாதனை செய்த என். நானம்மாள் அவர்கள் என அந்தப் பட்டியலில் பத்து சாதனைப் பெண்கள் அணிவகுத்திருந்தார்கள்.
சாதனைப் பெண்களின் புகைப்படத்தை ஒட்டி அவர்களின் பெயர் மற்றும் அவர்கள் சார்ந்திருக்கும் துறையை தன் அழகான கையெழுத்தால் எழுதி ப்ராஜெக்ட்டாக தொகுத்திருந்த சந்தியாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
முக்கியமாக தன் மகளுக்கு இந்த ப்ராஜெக்ட்டை செய்ய உதவிய அவரது தாய் சரண்யாவைத்தான் பாராட்ட வேண்டும். காரணம் ப்ராஜெக்ட் செய்து பள்ளியில் மகளுக்கான கிரேடை உயர்த்தியதோடு நின்றிருக்கலாம். ஆனல் ப்ராஜெக்ட்டில் இடம்பெற்றிருந்த எனக்கும் மரியாதை நிமித்தம் தகவல் கொடுத்த அவரது பண்புதான் எல்லாவற்றையும்விட உயரத்தில் நின்றது.
மாணவி சந்தியா கொடுத்த இந்த இன்ப அதிர்வலை அக்மார்க் முத்திரையிடப்பட்ட நிஜம்.
‘ஸ்பாயிலோபியா’ என்ற வியாதி மேற்கத்திய நாடுகளில் பரவி கும்பல் கும்பலாக மனிதர்களையும் பிற விலங்குகளையும் கொன்று குவித்து வந்தன. நம் நாட்டிலும் அந்த வியாதி பரவ ஆரம்பித்தது. ஓரிரு இடங்களில் வீட்டில் ஒருவருக்கு வந்தால் அந்த குடும்பத்தில் வசிக்கும் மற்றவர்களும் சேர்ந்து இறக்க ஆரம்பித்தார்கள். நம் நாட்டு மக்களுக்கு ‘எதையெல்லாம் செய்யக் கூடாது’ என பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் மூலமாக விழிப்புணர்வு கொடுக்க ஆரம்பித்தார்கள்.
- பொது இடங்களில் எச்சில் துப்பக் கூடாது.
- சாலையோரங்களில் சிறுநீர் கழிக்கக் கூடாது.
- வாயை மூடிக்கொள்ளாமல் தும்மக் கூடாது.
- கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
- ஒருவர் எச்சில்படுத்திய உணவை மற்றவர்கள் உண்ணக் கூடாது.
- சிகரெட் பிடிக்கக் கூடாது.
- பிறர் ஊதும் சிகரெட் புகையை சுவாசிக்கக் கூடாது.
- மது அருந்தக் கூடாது.
- வீட்டை தூசி இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தூசி மூச்சுக் குழாயில் சென்றால்கூட ஆபத்து.
- சாலைகளையும் சுத்தமாக குப்பை இல்லாமல் வைத்துக்கொள்ள வேண்டும்.
- திறந்தவெளி சாக்கடைகள் இருந்தால் உடனடியாக மூட வேண்டும்.
இப்படி ஏகப்பட்ட அறிவுரைகள். மக்களும் இறப்புக்கு பயந்து அறிவுரைகளை பின்பற்ற ஆரம்பித்தார்கள். நடுரோடில் எச்சில் துப்ப வாயை திறப்பவர்களும், சாலையோரத்தில் சிறுநீர் கழிப்பவர்களும் அந்த உணர்வை அடக்கிக்கொண்டார்கள். வீட்டைப் போலவே வெளியிடங்களையும் சுத்தமாக வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். தெருக்கள் சுத்தமோ சுத்தம்.
நம் நாட்டில் இறப்பு விகிதம் கணிசமாக குறைந்தது. ஒரு கட்டத்தில் அந்த வியாதி வந்த சுவடே தெரியாமல் நம் நாட்டை விட்டு ஓடிவிட்டது.
உலக நாடுகள் நம் நாட்டை உதாரணம் காட்டி பேசத் தொடங்கின.
ஒருவித பெருமித உணர்வுடன் ஆனந்த களிப்பிலான மனோநிலையில் இருந்த நான் சட்டென விழித்துக்கொண்டேன்.
அத்தனையும் கனவு. அக்மார்க் முத்திரையிடப்பட்ட கனவு.
உண்மை செய்தியை கலப்படமாக்கிக் கொண்டிருக்கும் இந்த நாளில், ஒரு நல்ல விஷயத்துக்காக நடக்காத ஒரு விஷயத்தை உண்மைபோல சொல்லி மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரலாமே என்றெண்ணிக்கொண்டேன்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software