ஹலோ with காம்கேர் – 32
February 1, 2020
கேள்வி: இன்றைய இளம் தலைமுறையினர் எப்படி இருக்கிறார்கள்?
எங்கள் அலுவலகத்தில் சிறிய மரவேலை. வந்திருந்த கார்ப்பென்டர் எனக்கு ஏற்கெனவே அறிமுகம்.
சென்ற வருடம் எங்கள் நிறுவனத்தில் சில மாற்றங்கள் செய்து சீரமைத்தோம். அப்போது மரவேலை முழுவதையும் அவர்தான் செய்துகொடுத்திருந்தார்.
அப்போது அவருடைய மகன் ப்ளஸ் டூ முடித்திருந்தார். அவர் மகனை எந்த குரூப்பில் சேர்க்கலாம் என என்னிடம் ஆலோசனை கேட்டு ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.ஸி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்த்தார்.
அதன்பிறகு இப்போதுதான் பார்க்கிறேன். அவர் மகன் எப்படி படிக்கிறார் என்று கேட்டபோது சிரித்துக்கொண்டே ‘இரண்டு சப்ஜெக்ட்டில் அரியஸ்’ என்றார்.
‘ஏன் சரியா படிக்க மாட்டேங்கிறாரா?’ என்றேன்.
‘ஆமாம் மேடம். ராத்திரி 1 மணிவரை செல்போனை நோண்டிக்கொண்டிருந்தால் படிப்பில் இப்படி கோட்டை விட வேண்டியதுதான்…’ என்று சொல்லிக்கொண்டே தன் வேலையிலும் கவனமாக இருந்தார்.
‘காலேஜில் பேரண்ட்ஸ்-டீச்சர்ஸ் மீட்டிங் கண்டிப்பா அப்பா அம்மாவை போயாகணும். அதுவும் பரிட்சை மார்க் ஷீட் கொடுக்கும்போது அப்பா அம்மாவையும் அழைத்துவரச் சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்…’
‘ஓ… அப்படியா… என்ன பேசுவார்கள் அந்த மீட்டிங்கில்…’ என்றேன்.
‘என்னத்த சொல்ல மேடம். திட்டுதான்…’
‘யாருக்கு உங்கள் மகனுக்கா…’ என்றேன்.
‘இல்ல மேடம். அப்பா அம்மாக்குத்தான்… பசங்களை செல்ஃபோன் பயன்படுத்தச் சொல்லாதீங்க… வீட்டுக்கு இரவு 8 மணிக்குள் வரச்சொல்லுங்க… அப்படி இப்படின்னு எங்களுக்கு அட்வைஸ்… யார் சொன்னா கேட்கிறாங்க…’
மெளனமாக அவர் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தேன்.
‘இவ்வளவு குறைவா மார்க் வாங்குறான் உங்கள் மகன்…. இனிமே இவனை படிக்க வைக்க வேண்டாம்… ஏதாவது எடுபுடி வேலைக்கு அனுப்புங்க…’ என்று ஒரே திட்டுதான்.
‘ஐயையோ… மனசு உடைஞ்சு போய் வருத்தமடைஞ்சுடுவாங்களே இந்த பசங்க…’ என்றேன் பதட்டமாக.
‘அட நீங்க வேற மேடம்… அதெல்லாம் நம்ம காலத்தோட போயாச்சு… புரொஃபசர் பேசப் பேச அவரை இவன் மொறைக்காத குறைதான்… வெளியில் வந்து ஏம்பா இப்படி நீயும் திட்டு வாங்கி, எங்களுக்கும் திட்டு வாங்கி வைக்கிறாய்…’ என்று நானும் என் மனைவியும் சொன்னால், ‘அப்பா… இதையெல்லாம் இந்தக் காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுடணும்… அவங்க என்னை மட்டுமா திட்டறாங்க… எல்லா மாணவர்களையும்தானே திட்டறாங்க…’.
இந்த காலத்து இளைஞர்களை நினைத்து ஒரே ஆச்சர்யம்தான்.
ஒன்று எதற்குமே கவலைப்படாமல் எல்லாவற்றையும் துடைத்தெறிந்துவிட்டு இப்படி விட்டேற்றியாக இருக்கிறார்கள். இல்லையெனில் முணுக்கென்றால் ரோஷம், கோபம், கொந்தளிப்பு, தற்கொலை என சென்றுவிடுகிறார்கள்.
யாராக இருந்தாலும் சமநிலை மனப்பக்குவம் அவசியம். அது இல்லையென்றால், நமக்குள் உண்டாகும் அழுத்தத்துக்கு ஏற்ப நம் மனம் எப்படி வேண்டுமானாலும் முடிவெடுக்கும்.
விட்டேற்றியான மனநிலைக்கும் கொந்தளிக்கும் மனநிலைக்குமான மையப்புள்ளிக்கு இடைவெளி மிகக்குறைவுதான்.
நம் மனம் ஒரு ரோபோ மாதிரி. நாம் என்ன கற்றுக்கொடுக்கிறோமோ அப்படி செயல்படும் அற்புத ஆற்றல் கொண்டது. நம் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே மனதை இயக்கும் ஆற்றலை கற்றுக்கொடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.
அதற்கு முன் பெரியவர்களுக்கு மனத்தெளிவு வேண்டும். பழகுவோம். பழக்குவோம்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software