ஹலோ With காம்கேர் -33: எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளிடம் பார்ஷியாலிட்டி இல்லாமல் நடந்துகொள்கிறார்களா?

ஹலோ with காம்கேர் – 33
February 2, 2020

கேள்வி: எல்லா அம்மாக்களும் தங்கள் குழந்தைகளிடம் பார்ஷியாலிட்டி இல்லாமல் நடந்துகொள்கிறார்களா?

பொதுவாகவே வளைகாப்பு முடிந்தபின்னர் அம்மா வீட்டுக்கு வரும் பெண்கள் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் வரை தங்குவார்கள். இன்று வேலைக்குச் செல்லும் பெண்கள் பெருகியதால் பெண் வீட்டில் அம்மாக்கள்  தங்குவது சகஜமாகி வருகிறது. நல்ல மாற்றம்தான் தவறேதும் இல்லை.

இப்படி பெண்களின் அம்மாக்கள் அவர்களுடைய குழந்தைகளுடன் நிறைய நாட்கள் இருப்பதால் அந்த பேரன் பேத்திகளிடம் தனிப்பாசம் தொற்றிக்கொண்டுவிடுகிறது.

‘என் மாமியார் பெண் வயிற்று பேரன் பேத்திகளிடம் மட்டும்தான் பாசமாக இருக்கிறார்… எங்கள் பிள்ளைகள் மீது பாசமாக இல்லை…’ என தன்னுடன் வசிக்கும் மாமியார் பற்றி சொல்லிக்கொண்டிருந்தார் என் அலுவலகத்தில் பணிபுரியும் ஒரு பெண்.

‘பாசமாக இல்லை என எதை வைத்து சொல்கிறீர்கள்?’

‘பள்ளியில் இருந்து வந்தால் பால் கூட வைத்துக் கொடுக்க மாட்டார்…’

‘ஏன் என கேட்டிருக்கிறீர்களா?’

‘அவர்களுக்கு நான் செய்துகொடுத்தால் பிடிப்பதில்லை என்பவர்களை என்னவென்பது?’

ஒருசில அம்மாக்கள் தாங்கள் பெற்ற பெண்களிடமே பாசமாக இருப்பதில்லை. இது முன்னதைவிட மோசமல்லவா?

என்னிடம் பணிபுரியும் மற்றொரு பெண்ணின் கதையே வேறு. அவருடைய சின்ன வயதில் இருந்தே அவரின் சகோதரன் சகோதரிகளிடம் பாசமாக இருக்கும் தன் அம்மா இவரிடம் ஓரவஞ்சனையுடன் இருப்பதை சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். அவர்களுக்குப் பிடித்த உணவுபண்டங்களை பார்த்துப் பார்த்து செய்யும் அம்மா இவருக்கு மட்டும் செய்ய மாட்டாராம். அந்த வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து இன்று இவருடைய பிள்ளைகள் வரை தொடர்கிறதாம்.

ஒரு ஞாயிறன்று தொலைக்காட்சியில் சேனல் மாற்றிக்கொண்டே வந்தேன். ஒரு சேனலில் சீரியல் நடிகர்களுக்கு விருது வழங்கும் விழா. அதில் ஒரு நடிகை விருது பெற்ற பிறகு அழுதுகொண்டே சொல்கிறார்.

‘அம்மா நான் சிறந்த நடிகை என விருது வாங்கிவிட்டேன்… இப்போதாவது என்னை பாராட்டுவாயா?’ என்று கூற தொகுப்பாளினி ‘அம்மாவிடம் ஏதாவது கேட்க விரும்பினால் கேளுங்கள்’ என சொன்னார்.

‘நானும் அக்காவும் ஒரே நேரத்தில்தான் வேலைக்குக் கிளம்புவோம். அவள் ஆஃபீஸுக்கும், நான் ஷூட்டிங்குக்கும்… ஆனால் அவளுக்கு மதிய சாப்பாட்டுக்கு டிபன் பாக்ஸில் டிபன் செய்து கொடுக்கும் நீ, என்னை மட்டும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவாய்… ஏன் அம்மா இப்படி…’ என  அழுதுகொண்டே சொல்லுவார்.

இப்படி பல வீடுகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

‘அம்மாவுக்கு வீட்டு வேலைகளில் உதவ வேண்டும் அதுதான் அம்மா  நம்மிடம் காட்டும் அன்புக்கு நாம் காட்டும் நன்றியாகும்’ என்று நான் எழுதியிருந்த ஒரு பதிவுக்கு வந்திருந்த பின்னூட்டம் கொஞ்சம் அதிர்ச்சியளித்தது. எழுதியவர் ஒரு நடுத்தர வயது ஆண்.

‘எல்லா அம்மாக்களும் அன்புடன் இருப்பதில்லை… என்னுடைய சின்ன வயதில் இருந்தே அம்மாவுக்கு நான் வீட்டு வேலை, பத்து பாத்திரம் தேய்த்தல், வீடு பெருக்குதல் என எல்லா வேலைகளையும் செய்வேன். ஆனால் என் அம்மா சின்ன குறை இருந்தாலும் கத்திக்கொண்டே இருப்பார். ஒருமுறை தீபாவளி அன்று வீடு பெருக்கிக்கொடுத்தேன். அப்போது என் அம்மா என்னை அடித்த அடி இன்னும் நினைவிருக்கிறது… என் அம்மாவைப் பார்த்து எனக்கு பெண்கள் மீது வெறுப்பு வராமல் இருந்ததே அதிசயம்…’ என்று பின்னூட்டமிருந்தவருக்கு அன்பான மனைவியும், அழகான மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். மூன்றுமே ஒரே பிரசவத்தில் பிறந்தனவாம்.

இதுதான் இயற்கையின் கருணை. வேறென்ன சொல்வது?

அம்ம்ம்ம்ம்மாமாமாமாமா……………..

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 62 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon