ஹலோ with காம்கேர் – 36
February 5, 2020
கேள்வி: நம்முடைய செயல்பாடுகளின் மேன்மைக்கு சூழலும் ஒரு காரணமாகுமா?
நாம் தினமும் செய்யும் செயல்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கும்போது அதனால் மற்றவர்கள் பயனடைவது நம் கவனத்துக்கு வரும்போது நமக்குள் ஓர் உத்வேகமும் உற்சாகமும் பொறுப்புணர்வும் கூடுவதுதானே இயல்பு.
இதே உணர்வு ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் உண்டாகிறது என்றும் அவர்களின் குணநலன்களிலும் பழக்க வழக்கங்களிலும் நல்ல மாற்றம் ஏற்படுகிறது என்றும் ஆசிரியர்களே சொல்லும்போது அதைவிட பெறும்பேறு வேறுண்டா என எண்ண வைக்கிறது.
ஜனவரி 1, 2020 முதல் நான் நடத்திவரும் ‘அறம் வளர்ப்போம்’ வாட்ஸ் அப் குழுவில் இணைந்துள்ள ஆசிரியர்கள் அதில் தினந்தோறும் நான் எழுதிவரும் அறநெறி கருத்துக்களுக்கு மாணவர்கள் காட்டும் ஈடுபாடு குறித்து அவ்வப்பொழுது கொடுக்கும் ‘ஃபீட் பேக்’ மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. விவரிக்க வார்த்தைகள் இல்லை. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு…
படிப்பில் ஆர்வம் காட்டாத மாணவர்கள்கூட ‘அறம் வளர்ப்போம்’ குழுவில் சொல்லித்தரப்படும் அறநெறி கருத்துக்களை ஆர்வமாக கற்றுக்கொள்கிறார்களாம்.
அவர்கள் சொல்வதை வீடியோ பதிவாக்கும்போது போட்டிப் போட்டுக்கொண்டு முன்வருகிறார்களாம்.
மாணவர்களின் பெயர்களை சீட்டுகளில் எழுதி குலுக்கிப்போட்டு அதில் ஒன்றை எடுத்து யாருடைய பெயர் வருகிறதோ அந்த மாணவன் / மாணவி சொல்லும் அறநெறியை அன்று வீடியோ எடுக்கிறார்களாம்.
பாடத்திட்டத்தில் உள்ளவற்றை கற்றுக்கொடுக்கும்போது இத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் சின்ன சின்ன அறநெறிகளை மிக எளிய விளக்கத்துடன் சொல்லித்தரும்போது மாணவர்களுக்குள் ஆர்வம்தானாக ஏற்படுகிறதாம்.
மாணவர்களை விட்டே அறநெறியை சொல்லச் சொல்லும்போது அவர்களின் பேச்சில் நயம் கூடுகிறதாம். முகத்தில் பொலிவும், உடல் மொழியில் கம்பீரமும் உண்டாகிறதாம்.
மாணவர்களுக்கு மட்டுமில்லாமல் ஆசிரியர்களின் மனதிலும் நிறைய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதாம்.
தினம் ஒரு அறநெறி கருத்தின் வாயிலாக வகுப்பை தொடங்கும்போது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு சிறிய பாசப்பிணைப்பு உண்டாகிறதாம்.
பொதுவாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அவ்வப்பொழுது அறிவுரைகள் சொல்வார்கள். ஆனால் அவை அறிவுரை என்ற அளவில் மட்டுமே இருக்கும். இப்படி ஒரு குழுவின் மூலம் ஒரு தலைமையின் வாயிலாக நேர்த்தியுடன் அறநெறிகள் சொல்லித்தரப்படுவதாலும், தொழில்நுட்பம் வாயிலாக இணைக்கப்பட்டு பொதுவெளியிலும் பகிரப்படுவதாலும் இது மாணவர்களிடையே நிறைய மாற்றங்களை உண்டாக்கியுள்ளதாம்.
‘அறம் வளர்ப்போம்’ குழுவைப் பற்றி ஆசிரியர்கள் கொடுக்கும் இதுபோன்ற உற்சாக டானிக்குகள் எனக்குள்ளும் மகிழ்ச்சியையும் பொறுப்புணர்வையும் நிரப்பி மாணவர்களுக்காகவும் ஆசிரியர்களுக்காகவும் இன்னும் என்னவெல்லாம் செய்யலாம் என சிந்திக்க வைக்கிறது.
ஒரு செயல்பாட்டின் வெற்றி என்பது அதை திறம்பட செய்பவர்களையும் அதனால் பயனடைபவர்களையும் ஒருசேர மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவதில்தான் கிடைக்கிறது. அதுவே அந்த செயல்பாட்டுக்கான ஆகச்சிறந்த வெகுமதியும் ஆகும்.
எனக்கு வெற்றியும், வெகுமதியும் தாரளமாக கிடைத்து வருகிறது. இந்த வெற்றியையும் வெகுமதியையும் ‘அறம் வளர்ப்போம்’ குழுவில் இணைந்துள்ள ஆசிரியர்களுக்கும் அவர்கள் வாயிலாக அவர்கள் பள்ளி மாணவர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software