ஹலோ with காம்கேர் – 47
February 16, 2020
கேள்வி: முதியோர் இல்லங்கள் பெருகுவதேன்?
பிப்ரவரி 8. அம்மாவின் பிறந்த நாள். காலையில் கோயிலுக்குச் சென்றுவிட்டு எங்கள் இருப்பிடத்துக்கு அருகில் இருக்கும் ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்றிருந்தோம். அன்றைய உணவுக்கு ஸ்பான்சர் செய்திருந்தோம்.
நாங்கள் சென்றதும் பாட்டிகள் எங்களை சூழ்ந்துகொண்டனர். ‘எப்படி இருக்க கண்ணு’ என்று வாஞ்சையுடன் பேசினார்கள்.
புதிதாக சேர்ந்திருந்த ஒரு பாட்டி எங்களையே பார்த்துக்கொண்டிருந்தார். நான் அருகில் சென்று ‘என்ன பாட்டி, எப்படி இருக்கீங்க’ என்றேன்.
நான் எப்போது கேட்பேன் என காத்திருந்ததைப் போல கண்களில் தேக்கி வைத்திருந்த கண்ணீரை துடைத்துக்கொண்டு பேசத் தொடங்கினார்.
ஒரே மகன். வசிப்பது சிங்கப்பூரில். கணவன் இறந்த பிறகு பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் இந்த இல்லத்தில் சேர்ந்துவிட்டதாகவும் சொன்னார்.
பள்ளியில் படிக்கும்போது அவர் மகன் 12 வருடங்களும் விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவன் என்ற விருது பெற்றதாகச் சொன்னார். படிப்பிலும் ஸ்போர்ட்ஸிலும் முதல் பரிசுதானாம்.
‘வீட்டில் யாரேனும் விருந்தினர்கள் வந்தால்கூட அவன் உண்டு அவன் வேலை உண்டு என அவன் அறையில் படித்துக்கொண்டே இருப்பான். உறவினர்களின் பிள்ளைகள் ஜாலியாக சினிமா பீச் பார்க் என செல்லும்போதுகூட இவனை அழைத்தாலும் அவர்களுடன் செல்ல மாட்டான். நன்றாக படித்து சயின்டிஸ்ட்டாக ஆக வேண்டும் என்பதே அவன் இலட்சியம். அத்தனை சமர்த்தாக வளர்ந்தான். அவன் ஆசைப்பட்டபடியே சயின்டிஸ்ட்டாகினோம். திருமணம் செய்து வைத்தோம். 8, 10 வயதில் பேரன் பேத்திகள் இருக்கிறார்கள்.
வேலைக்காக சிங்கப்பூர் சென்று 10 வருடங்களாகிறது. எங்களை இதுவரை சென்னைக்கு வந்து பார்த்தது இரண்டு முறை மட்டுமே. என் கணவர் சென்ற வருடம் இறந்த பிறகு வீட்டை விற்று என் அக்கவுண்ட்டில் கொஞ்சம் பணத்தை டெபாசிட் செய்துவிட்டு இந்த இல்லத்தில் சேர்த்துவிட்டான்’ என சொல்லிவிட்டு புடவை முந்தானையால் முகத்தை மூடி தேம்பினார்.
படிப்பு படிப்பு என்று படித்துக்கொண்டே இருப்பது, உறவினர்கள் வந்தால்கூட தான் உண்டு தன் வேலை உண்டு என அறைக்குள்ளேயே அமைதியாக தன் வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது, தன் வயதை ஒத்த பிள்ளைகளுடன் பொதுவெளியில் எங்கும் செல்லாமல் அமைதியாக இருப்பது இதெல்லாம் ஒரு பெற்றோருக்கு பெருமையான விஷயங்கள்தான். சந்தேகமே இல்லை
தொந்திரவு கொடுக்காத, வம்பு தும்புக்குச் செல்லாத, வம்பை விலைக்கு வாங்காத சர்க்கரை கட்டியான பிள்ளைகளின் ‘சமர்த்துத்தனம்’ இளம் வயதில் வேண்டுமானால் பெற்றோருக்கு மகிழ்ச்சியான விஷயமாக இருக்கலாம்.
ஆனால் இப்படி வளரும் குழந்தைகள் தங்களுக்குள் வாழ்க்கைக்கான டெம்ப்ளேட்டை எப்படி வடிவமைத்திருப்பார்கள் தெரியுமா?
உறவுகளுடன் சேராமல் தனித்திருத்தல் (தன் வீட்டு நாய்க்குட்டிகளுடன் கொஞ்சிக்கொண்டு), தங்களுக்குத் தேவையானவர்களை தவிர பிறரை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளுதல் (தன் மனைவி பிள்ளைகளைத் தவிர), பிரயோஜனமில்லாததை ஒதுக்கித் தள்ளுதல் (அது பெற்றோர்களே ஆனாலும்) என ‘பக்கா’ சுயநலவாதிகளாகவே வளர்வார்கள்.
விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கு செல்வதால் விருது வாங்குவது பெருமைதான். ஆனால் அந்த விருதினால் என்ன பயன். ‘அம்மாவை முதியோர் இல்லத்தில் சேர்த்துவிட்டு உன் வேலையைப் பார்’ என்ற விட்டேற்றியான மனோபாவத்தையல்லவா கற்றுக்கொடுத்துள்ளது.
உறவினர்களின் வீட்டு நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்ளுதல், வீட்டுக்கு உறவினர்கள் வந்தால் அவர்களுக்கும் மரியாதைகொடுத்து வரவேற்று அவர்களுடன் சகஜமாகப் பேசுதல், தன் வயதை ஒத்த பிள்ளைகளுடன் அவ்வப்பொழுது வெளியில் சென்றுவருதல் என மனிதர்களுடன் கலந்துகட்டி வாழப் பழகும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் தன் பெற்றோரின் உணர்வுகளைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பார்கள்.
மதிப்பெண்ணும் பரிசுகளும் விருதுகளும் மட்டுமே வாழ்க்கை என்ற நோக்கத்தை உங்கள் பிள்ளைகளுடைய மனதின் டெம்ப்ளேட்டில் புரோகிராமாக எழுதி விடுகிறீர்கள். பின்னாளில் வேலைக்குச் செல்லும்போது சம்பாத்தியம் ஒன்றே வாழ்க்கை என்றும், தன் மனைவி குழந்தைகள் மட்டுமே குடும்பம் என்றும் அந்த டெம்ப்ளேட் தானாகவே அப்டேட் ஆகிக்கொள்கிறது.
என் சகோதரன் சகோதரி வெளிநாட்டில்தான் வசிக்கிறார்கள். இருவரும் வருடா வருடம் குடும்பத்துடன் வந்துவிடுவார்கள். அவர்கள் வரும்போது எங்கள் உறவினர்கள் எங்களை வந்து பார்க்க வேண்டும் என காத்திருக்காமல் விருந்தினர்கள் வீடுகளுக்குச் சென்று அவர்களை சந்திப்பது, அவர்களின் நண்பர்களை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பது, குல தெய்வ வழிபாடு, சொந்த ஊர் செல்வது என ஒரு மாதம் கலகலப்பாகச் செல்லும்.
வேலை, சம்பாத்தியம், கார், சொந்த வீடு, இலட்சியம், குறிக்கோள் எல்லாம் தேவைதான். அதைவிட முக்கியம் மனிதர்கள் என்பதை குழந்தைகள் மனதில் விதைக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
பாட்டிகள் சாப்பிட்டதும் நாங்கள் கிளம்ப ஆயத்தமானோம். ஒரு பாட்டி என்னை அணைத்துக்கொண்டு ரகசியமாய் ‘நீ எப்போ சாப்பாடு போடப் போறேம்மா…’ என்று சொல்லி கைகளை அழுத்தினார்.
நான் சிரித்தபடி விடைபெற்றேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software