‘பாதுகா பட்டாபிஷேகம்’ கூத்தை வீடியோவில் பார்க்க: ‘பாதுகா பட்டாபிஷேகம்’
ஹலோ with காம்கேர் – 48
February 17, 2020
கேள்வி: உங்கள் எழுத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறதா?
என் எழுத்துக்கள் சர்ச்சைக்கு உள்ளானதில்லை. ஆனால் ஒரு கட்டுரைக்கு நான் வைத்த தலைப்பு சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.
தலைப்பு ‘குலத்தொழில் போற்றுவோம்’.
எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள். வாழ்க்கை மட்டுமல்ல எழுத்தும் கூட எண்ணம் போல்தான். என்னுடைய 10 வயதில் இருந்து தினந்தோறும் எழுதி வருகிறேன். யாரையும் புண்படுத்தும் விதமாகவோ கண்ணியக் குறைவாகவோ எழுதியதே இல்லை. என்னைப் பொறுத்தவரை எழுதுவதும் ஒருவகை தியானமே.
2016 ஆம் ஆண்டு நான் எழுதி வெளியிட்ட ‘குழந்தைகள் உலகில் நுழைய பெற்றோருக்கான பாஸ்வேர்ட்’ என்ற புத்தகத்தில் ஒரு கட்டுரைக்கு நான் வைத்திருந்த தலைப்பு ‘குலத்தொழில் போற்றுவோம்’. அந்தத் தலைப்பை ஏன் வைத்தேன் என அந்த கட்டுரையின் சாராம்சத்தைப் படிக்கும்போது உங்களுக்கே தெரியும்.
நீங்களும் படியுங்களேன்!
அண்மையில் ஓசூரில் இயங்கிவரும் அன்பு இல்லம் என்ற பெண் குழந்தைகள் நலகாப்பகத்தின் விழாவிற்கு சிறப்பு விருந்தினராகச் சென்றிருந்தேன். அந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டாக ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற கூத்துநிகழ்ச்சி நடைபெற்றது.
அந்த கூத்தை நடத்தியது கட்டிடத் தொழிலாளிகள். அடிப்படையில் அவர்கள் அனைவரும் நாட்டுப்புறக் கலைஞர்கள். மாறிவரும் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் வாழ்வாதாரத்துக்காக தங்கள் குலத்தொழிலை விட்டு, கட்டிட வேலைக்கு மாறியவர்கள்.
ஆனாலும் தங்கள் குலத்தொழில் அழிந்துவிடாமல் இருப்பதற்காக வருடம் ஒருமுறை இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை கூத்து நிகழ்ச்சியாக தங்கள் சொந்த செலவில் நடத்துகிறார்கள். இதன் மூலம் அவர்களுக்கு வருமானம் எதுவும் கிடைப்பதில்லை. பணத்துக்காகவும் அவர்கள் இதைச் செய்வதில்லை. பார்வையாளர்கள் விருப்பப்பட்டுக் கொடுக்கின்ற பணத்தை வேண்டாம் என்று சொல்வதில்லை. ஆனால் கூத்து நிகழ்ச்சிக்காக ஆகும் செலவுக்கு அவை போதாது.
கூத்தில் ஈடுபடுகின்ற முப்பது, நாற்பது கலைஞர்களின் ஆடை, அலங்காரப் பொருட்கள், வண்ணச் சாயங்கள், இசைக் கருவிகள், பின்னணி வடிவமைப்பு, மேடை மற்றும் நாடகத்துக்குத் தேவையான பொருத்தமான அலங்காரம் போன்றவற்றை தயார் செய்வதற்கு சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை செலவு ஆகிறதாம். வருடம் முழுவதும் அந்தக் கலைஞர்கள் கட்டிடத் தொழிலில் சம்பாதிப்பதை போட்டு அந்த நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆச்சர்யமாக உள்ளது.
தாங்களே செலவு செய்து கூத்து நிகழ்ச்சியை நடத்தினாலும், அதில் ஒரு கலைஞர்கூட ஏனோ தானோ என்று செயல்படவில்லை. மேடையில் கூத்தில் நடித்த அத்தனை பேரும் முழு மனதுடன் தங்களை அர்ப்பணித்து நடித்தார்கள். குறிப்பாக பரதனாக நடித்தவர் தன் தாய் கைகேயினால்தான் அண்ணன் இராமன் காட்டுக்குச் செல்ல நேர்ந்ததை தெரிந்து கொண்டு தாயிடம் ஆக்ரோஷமாய் சண்டைபோட்ட காட்சியில் அவரது உணர்ச்சி வேகத்தைப் பார்த்த பார்வையாளர்களின் கைதட்டல் விண்ணை முட்டியது. ஒட்டுமொத்த கூத்தின் பெருமையை உச்சாணிக் கொம்பிற்குக் கொண்டு சென்றார்.
அடுத்த வேளை சாப்பாட்டை உழைத்தால்தான் சாப்பிட முடியும் என்ற நிலையில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கின்ற இந்தக் கலைஞர்கள்கூட தங்கள் குலத்தொழில் அழியாமல் இருப்பதற்காக குருவி போல காசை சேகரித்து நிகழ்ச்சியை நடத்தி காப்பாற்றி வருகிறார்கள்.
நம் ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் ஒரு பாரம்பரிய பணி இருந்திருக்கும். அதையே நாம் செய்ய வேண்டும் நம் பிள்ளைகளும் செய்ய வேண்டும் என்பதில்லை, குறைந்தபட்சம் நம் குடும்ப பாரம்பரிய பணி என்ன அதன் பின்னணி என்ன என்றாவது தெரிந்து வைத்துக்கொள்வதில் தவறில்லையே.
இந்த கட்டுரையின் ஹைலைட்டே இந்த கடைசி பத்திதான்.
‘அது எப்படி குலத்தொழில் என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம், எல்லோரும் அவரவர்கள் குலத்தொழிலைத்தான் செய்ய வேண்டுமா, அதையே செய்து ஏழ்மையில் உழல வேண்டுமா, நீங்கள் படித்து ஏசியில் அமர்ந்து சொகுசாக பணிபுரிவீர்கள், நாங்கள் எல்லாம் காலத்துக்கும் கஷ்டப்பட வேண்டுமா…’ என்று ஒரு வாசகர் போன் செய்து கோபத்துடன் பேசிக்கொண்டே போனார்.
நான் பொறுமையாக, ‘கடைசி பத்தியில் நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை நன்றாக படித்துப் பார்த்து புரிந்துகொள்ள முயற்சியுங்கள்’ என்றேன். ஆனால் கோபத்தில் கொந்தளிப்பவர்களின் காதுகள் மட்டும் அல்ல, மனதும் இறுக மூடிக்கொண்டுவிடுவதால் நான் சொல்வதை அவர் மனது புரிந்துகொள்ளும் சக்தியை இழந்துவிட்டிருந்தது.
ஒரு செயலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதற்கும், ஒரு தகவலை தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்குமான வித்தியாசத்தை புரிய வைக்க முயன்றேன்.
புரிந்து கொண்டாரா இல்லையா என எனக்குத் தெரியாது, ஆனால் புரிய வைக்க வேண்டிய என் கடமையை சரியாக செய்தேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
இன்றைய கேள்வியை கேட்டவர்
என் எழுத்துக்களை தொடர்ந்து படித்துவரும்
உயர்திரு. கே.ஆர்.வெங்கடராமன் அவர்கள்.
இவர் எங்கள் காம்கேரில்
சேல்ஸ் & பர்சேஸ் துறையில் மேனஜராக பணிபுரிகிறார்.