ஹலோ with காம்கேர் – 49
February 18, 2020
கேள்வி: கூடடைவதற்கு மட்டுமல்ல வீடு. பிறகு எதற்கு?
சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சியில்(2019) கிராமத்து ஓட்டு வீடு மற்றும் ஓலை வீட்டின் மாடல்கள், அங்குள்ள பெட்டிக் கடை, கன்றுக்குட்டியுடன் கூடிய மாடு, மாட்டு வண்டி என அத்தனைக்கும் மாடல் வைத்திருந்தார்கள். கூடவே நிஜ மாடு கன்றுக்குட்டியுடன், நிஜ யானை என அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். மேலும் அந்த மாடல் வீட்டை பார்வையாளர்கள் சுற்றிப் பார்க்கவும் அனுமதித்திருந்தார்கள்.
அதுபோன்ற வீடுகள் எனக்குப் புதிதல்ல. என் அப்பாவின் கிராமத்து வீடு என் மனக்கண்ணில் அப்படியே உள்ளது.
ஆளோடி, திண்ணை, வாசற்பக்க ரேழி, முற்றம், அதைச் சுற்றி தாழ்வாரம், அதை அடுத்து கூடம், கூடத்தில் சமையல் அறை, சாமானகள் வைக்கும் அறை, சுவாமி வைக்கும் சிறிய அலமாரி. கூடத்தை கடந்து சென்றால் கொல்லைப்பக்க ரேழி, அதை அடுத்து தோட்டம், கடைசியில் கழிப்பறை.
வாசலில் அதிகாலையில் சாணி தண்ணீர் தெளித்து அரிசி மாவில் கோலமிடுவார்கள். சாணி தண்ணீர் கிருமி நாசினி. அரிசி மாவு கோலம் எறும்புகளுக்கும், காக்காய், குருவி போன்றவற்றுக்கு உணவாகும்.
வாசலில் இருந்து வீட்டுக்குள் நுழையும்போது வீட்டின் அகலத்துக்கு ஆளோடி இருக்கும். அங்குதான் ஏதேனும் காய வைப்பதென்றால் காயவைத்துக்கொள்வார்கள். குழந்தைகள் விளையாடும் இடமும் அதுவே.
அதை அடுத்து திண்ணை. திண்ணையில் வீட்டுப் பெரியவர்கள் அமர்ந்திருப்பார்கள். அந்த நாட்களில் வயதானவர்கள் ஆலோசகர்களாக மட்டுமே இருப்பார்கள். சமையல் மற்றும் வீட்டு நிர்வாகத்தில் தலையிட மாட்டார்கள். அவர்கள் திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் வீட்டு வாசலை தாண்டாமல் பார்த்துக்கொள்வார்கள். வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மீதும் கவனமாக இருப்பார்கள். வீட்டில் அந்நிய மனிதர்கள் செல்ல மாட்டார்கள். திண்ணையிலேயே வைத்துப் பேசி அனுப்பி விடுவார்கள். பஸ், ரயில் வசதிகள் அதிகம் இல்லாத காலங்களில் வழிபோக்கர்கள் இரவில் தங்கிச் செல்லவும் திண்ணைகள் பயன்பட்டதுண்டு.
வாசற்பக்க ரேழியில் செருப்பு, குடை போன்றவற்றை வைத்துக்கொள்வார்கள்.
அதைத்தாண்டி உள்ளே சென்றால் முற்றம் இருக்கும். அதன் ஆழம் முக்கால் முழங்கால் அளவு இருக்கும். பாதுகாப்புக்கு முற்றத்தின் மேலே கிரில் போட்டிருப்பார்கள். வீடு முழுவதற்கும் நல்ல காற்றோட்டம் கொடுக்கும் இடம் இது. மழை காலத்தில் பெரிய பெரிய அண்டாக்களில் தண்ணீர் சேமித்து வைத்திருப்பார்கள்.
மழை காலத்தில் மழைநீர் வீடு முழுவதும் வராமல் இருக்க முற்றத்தின் மேலே சற்றே மேடாக தாழ்வாரம் கட்டியிருப்பார்கள். தாழ்வாரத்தை அடுத்து முற்றத்தைச் சுற்றி நான்கு பக்கமோ அல்லது மூன்று பக்கமோ நீளமாக கூடம் இருக்கும். அதில் சமையல் அறை, சாமானகள் வைக்கும் அறை, சுவாமி வைக்கும் சிறிய அலமாரி என வரிசையாக இருக்கும். சுவரில் வரிசையாக வீட்டுப் பெரியவர்களை போட்டோ ஃபிரேம் செய்து மாட்டியிருப்பார்கள்.
அடுத்து கொல்லைப்பக்க ரேழி. இங்கு நெல் பாதுகாக்க பத்தாயம், குதிர் போன்றவை இருக்கும்.
அடுத்து கொல்லைப்புறம். அங்கு கிணறு, தோட்டம் இருக்கும். மழை காலத்தில் கிணறு மழைநீர் சேமிப்பானாக செயல்படும். வாழை மரமும் தென்னை மரமும் இல்லாத வீடுகளே இருக்காது. தோட்டத்து செடி கொடி மரங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்துகொண்டே இருக்கும்.
வீட்டு வாசலில் இடப்புறம் அல்லது கொல்லையில் மாட்டுக்கொட்டாய் இருக்கும். வைக்கோல் போர் இருக்கும். மாட்டின் கழிவுகளை சேமிக்க உரக்குழி இருக்கும். அதுவே தோட்டத்து மரம் செடி கொடிகளுக்கு உரமாகும்.
கடைசியில் கழிப்பறை.
வீட்டு ஆளோடியில் நின்றுகொண்டு பார்த்தால் கொல்லைக் கடைசி வரை தெரியும் வகையில் அமைத்திருப்பார்கள். இதைத்தான் இன்று வாஸ்து என்கிறார்கள்.
காற்றோட்டமான ஓட்டு வீடு. ஓட்டைத்தாங்கிப் பிடிக்க மூங்கில் அல்லது மரத்தில் ஆன சட்டங்கள். வீட்டைத் தாங்கிப் பிடிக்கும் உத்திரம், தூண்கள் அனைத்துமே மரத்தினால் ஆனவை. உஷ்ணமே தெரியாமல் குளுகுளு சூழலுக்கு உத்திரவாதம்.
சுண்ணாம்பு கல்லையும், மணலையும் கலந்து தயாரித்த காரையால் பூசப்பட்ட செங்கல் சுவர்கள். சிமெண்ட்டைவிட பலமடங்கு உறுதியானவை காரைப்பூச்சு.
இப்படிப்பட்ட அருமையான வீடுகளை கட்ட அன்று யாரும் சிவில் இன்ஜினியரிங்கும் படிக்கவில்லை, வாஸ்த்தும் படிக்கவில்லை, கட்டிடக்கலை வல்லுநராக பட்டமும் பெறவில்லை.
‘கொத்தனார்’ தான் அத்தனையையும் செய்வார். அவர்தான் இன்ஜினியர், வாஸ்து நிபுணர், அவர்தான் கட்டிடக்கலை வல்லுநர். அவர்தான் All in all.
வீடு என்பது வெறும் கட்டிடம் மட்டுமல்ல.
அங்கு பாதுகாப்பு இருக்க வேண்டும், காற்றோட்டம் இருக்க வேண்டும், தண்ணீர் சேமிப்புக்கு இடம் இருக்க வேண்டும், குளுமையாக இருக்க வேண்டும், சுவாசிக்க போதுமான ஆக்ஸிஜன் வந்துகொண்டே இருக்க வேண்டும்.
இவை அத்தனையும் அமையப்பெற்ற வீடுகள் நல்ல உயிரோட்டத்துடன் இருக்கும்.
அதனால்தான் சொல்கிறேன் வீடு என்பது நாம் கூடடைவதற்கான இடம் மட்டும் அல்ல.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
கட்டிட வடிவமைப்பில் ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கும்
கல்லூரி பேராசிரியை கோமகள் அவர்களுடன்
நேற்று பேசிக்கொண்டிருந்தபோது
நான் கொடுத்த சில ஆலோசனைகள் இவை.