ஹலோ with காம்கேர் – 50
February 19, 2020
கேள்வி: பெண்கள் சாதனையாளர்கள் ஆகிட திருமணம் ஒரு தடை கல்லா? ஊக்கமருந்தா?
இந்தக் கேள்வியில் இரண்டு விஷயங்களை தெளிவுபடுத்த நினைக்கிறேன்.
ஒன்று யார் சாதனையாளர். மற்றொன்று சாதனைக்கும் திருமணத்துக்கும் என்ன தொடர்பு.
சாதனை என்பது நம் செயல்பாடுகளை சரிவர செய்வதால் கிடைக்கும் அங்கீகாரம்.
திருமணம் என்பது ஒரு வாழ்க்கைமுறை. வாழ்க்கைமுறையையும் நம் செயல்பாடுகளையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்ப்பதே தவறல்லவா. வாழ்க்கையில் நாம் எந்தப் பாதையை தேர்ந்தெடுத்திருந்தாலும் அதில் நமக்கான பணிகளை எப்படி செயல்படுத்துகிறோம் என்பதுதானே சாதனை.
யார் பிரபலம் என்பதைப் போல் யார் சாதனையாளர் என்பதும் பலருக்கும் குழப்பமான ஒரு கேள்வியே. பெண்கள் என்று வரும்போது சாதனையையும் திருமணத்தையும் ஏன் முடிச்சு போடுகிறார்கள் என்பது மற்றொரு கேள்வி.
ஆண்கள் சாதனை செய்தால் அவருடைய திருமணம் குறித்த விவாதங்கள் எல்லாம் பெரிய அளவில் வருவதில்லை. அப்படியே வந்தாலும் அவை பெரிய அளவில் முக்கியத்துவம் பெருவதில்லை.
பெண்கள் சாதனை செய்தால் அவர் திருமணம் ஆனவரா, ஆகி இருந்தால் எத்தனை குழந்தைகள், ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை என ஏகப்பட்ட கேள்விகள். அதன் அடிப்படையில் ஒப்பீடுகள். மதிப்பீடுகள்.
சாதனை என்பது என்ன.
பத்திரிகைகளில் நிறைய எழுதுவதா, நிறைய புத்தகங்கள் வெளியிடுவதா, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அடிக்கடி தலை காட்டுவதா, சினிமாவில் நடிப்பதா, அரசியலில் பரபரப்பாக இயங்குவதா?
இப்படி கேள்விகளை நீங்களே ஒருமுறை படித்துப் பாருங்கள். உங்களுக்கே பதில் புரிபடும். இவை எல்லாமே அவரவர்களின் பணிகள் அல்லவா.
இன்னும் நன்றாக ஊன்றிப் படியுங்கள். அவரவர் பணியை அவரவர் நேர்மையாக சரியாக செய்யும்போது அதுவே தனிப்பட்ட முறையில் மனநிறைவை கொடுப்பதுடன் பொதுவெளியில் சாதனையாக போற்றப்படுகிறது. அவ்வளவுதான் என்ற உண்மை தெளிவாகும்.
இதில் ஆண் என்ன பெண் என்ன. ஏன் இந்த பாகுபாடு.
தாங்கள் வகிக்கும் பதவியில் தாங்கள் செய்ய வேண்டிய பணிக்கு லஞ்சம் வாங்காமல் பணி செய்ய வேண்டியது ஒருவரது கடமை. அதனை ‘ஆஹா, அவர் ரொம்ப நேர்மையானவர்… லஞ்சமே வாங்கவே மாட்டார்’ என பாராட்டுகிறோம். ஒருவர் தன் பணியை நேர்மையாக செய்ய வேண்டும் என்பது அவரவர் கடமை எனும்போது அந்த நேர்மை ஏன் போற்றப்படுகிறது. நேர்மையாக செயல்படுவது என்பது அத்தனை அரிய செயலாகிவிட்டது என்றுதானே பொருள். எது அதிகம் கிடைக்கவில்லையோ அதுவே டிமாண்ட் ஆவதைப் போல நேர்மை குறைந்துவிட்ட சூழலில் அதுவே டிமாண்ட் ஆகி அதுவே பெரிய சாதனைபோல போற்றப்படுகிறது.
புத்தகம் எழுதுவருக்கு எழுத்துதான் அவர் ஜீவனம். சினிமாவில் நடிப்பவர்களுக்கு நடிப்பு அவர் வேலை, ஐடிதுறையில் பணி செய்பவர்களுக்கு சாஃப்ட்வேர் அவர் துறை. டாக்டருக்கு மருத்துவம் தொழில். வக்கீலுக்கு அது அவர் பணி. ஆசிரியருக்கு கற்பித்தல் வேலை. ஒவ்வொருவருக்கும் அவர் படிப்பு திறமை சார்ந்த பணி இருக்கிறது.
தாங்கள் எடுத்துக்கொண்ட பணியை நேர்மையாகவும், மனசாட்சிக்கு விரோதமில்லாமல் சரியாகவும், முழு ஈடுபாட்டுடனும், கவனமுடன் செய்பவர்களின் செயல்பாடுகள் தெய்வீகதன்மை பெறுகின்றன. அதுவே தன்னளவில் மனநிறைவின் உச்சமாகவும், பிறரளவில் சாதனையாகவும் போற்றப்படுகிறது, பொதுவெளியில் சேவையாகவும் கொண்டாடப்படுகிறது.
வேலையாகட்டும், தொழிலாகட்டும் அது சாதாரணமாகட்டும் அல்லது சாதனையாகட்டும் அத்தனையும் எதற்காக. அவரவர்களின் வாழ்வாதாரத்துக்காகத்தானே.
சம்பாதிப்பதை வைத்துக்கொண்டு எப்படி நிம்மதியாக வாழ்கிறோம் என்பதில்தான் அவரவர் சாதனை உள்ளது.
அந்த வகையில் திருமணம் செய்தாலும் செய்யாவிட்டாலும் ஆண்களைப் போலவே பெண்களும் அவரவர் துறைகளில் சாதனை செய்துகொண்டுதான் உள்ளனர். இன்னும் சொல்லப் போனால் ஆண்களை விட திடமான மனதுடன் செயல்படும் பெண்களை நான் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
சாதனைப் பெண்களுக்கு திருமணம் என்பது தடைக்கல்லா அல்லது ஊக்க மருந்தா என்ற கேள்வியே எனக்கு வினோதமாக உள்ளது.
திருமணம் என்பது எல்லோர் வாழ்க்கையிலும் நடக்கின்ற ஒரு சாதாரண விஷயம். அதற்கு ஏன் இத்தனை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
இன்று பெண்கள் வேலைக்குச் செல்ல ஆண்கள் ‘ஹவுஸ் ஹஸ்பெண்டாக’ வீட்டையும் குழந்தையையும் பார்த்துகொண்டு வாழ்ந்துவரும் அழகான புரிதலுடனான சூழல் உருவாகி வருகிறது.
ஆண்கள் சாதனையாளர்கள் ஆகிட திருமணம் ஒரு தடை கல்லா ஊக்கமருந்தா? என்று கேள்வியை மாற்றிக்கேட்க வேண்டிய காலகட்டத்தில் உள்ளோம். இதுவே இன்றைய கேள்விக்கான உறுதியான பதில்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
இன்றைய கேள்வியை கேட்டவர்
என் பதிவுகளை தொடர்ந்து படித்துவரும்
உயர்திரு. சங்கரநாராயணன் பாலசுப்ரமணியன்