ஹலோ with காம்கேர் – 56
February 25, 2020
கேள்வி: இலக்கிய படைப்புகள் தயாரிப்பதில் ஆர்வமுள்ள நீங்கள் ஏன் இலக்கிய கூட்டங்களில் கலந்துகொள்வதில்லை?
என்னிடம் பலரும் கேட்கும் பல கேள்விகளில் இதுவும் ஒன்று.
தினமும் 10.30-11.00 மணிக்கு உறங்கி 3.00-3.30 மணிக்கு எழுந்து நிறுவனத்தின் அன்று முடிக்க இருக்கும் ப்ராஜெக்ட்டுக்களுக்குத் தேவையான கான்செப்ட்டுகளை தயார் செய்தல், பத்திரிகைகளுக்கு எழுதிக்கொடுக்க வேண்டிய கட்டுரைகளை எழுதுதல், அன்றைய தினம் அலுவலக மீட்டிங்கிற்குத் தேவையான பிரசன்டேஷன்களை வடிவமைத்தல், ஒத்துக்கொண்ட மேடை நிகழ்ச்சிகளுக்கு கருத்துக்களை சேகரித்தல் என காலை 7 மணி வரை கண் இமைக்கும் நேரத்தில் கடந்துவிடும்.
இதற்கிடையில் வீட்டு வேலை, வாக்கிங் இத்யாதி இத்யாதி.
காலை 7.30 – 8.00 மணிக்குள் அலுவலகம் சென்றுவிடுவேன்.
என் நிறுவனப் பணிகள் முழுக்க முழுக்க ஆராய்ச்சிகள் அடிப்படையில் செய்யப்படுபவை. அவை அனைத்தும் எங்கள் காம்கேர் பிராண்டில் தயாரிக்கப்படும் சாஃப்ட்வேர்கள் என்பதால் நிறைய R & D (Research and Development) செய்ய வேண்டும். ஒரு சாஃட்வேர் உருவாக்குவதற்கு முன் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். முடித்த பின்னரும் பீட்டா வெர்ஷன் வெளியிட்டு ஆராய்ச்சிகள் தொடரும்.
ஒரே நேரத்தில் 5 முதல் 6 பிராஜெக்ட்டுகள் தயாராகிக்கொண்டிருக்கும். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தொழில்நுட்ப வல்லுநர்களை ஈடுபடுத்தியிருந்தாலும் அவை அத்தனையையும் என் தலைமையில்தான் இயங்கும்.
சாஃப்ட்வேர் மற்றும் ஆப் தயாரித்தல் மட்டுமில்லாமல் அனிமேஷன் மற்றும் ஆவணப்படங்களும் நடைபெறுவதால் புரோகிராம் லாஜிக் என ஒரு பக்கம், கலை கற்பனை கிரியேஷன் என மறுபக்கம். இப்படி தொழில்நுட்பமும் வாழ்வியலும் இரட்டை மாட்டு வண்டிபோல என்னை இயக்கிக்கொண்டிருக்கும்.
வாரத்தில் குறைந்தபட்சம் இரண்டு தொழில்நுட்ப மீட்டிங்குகளுக்காவது சிறப்பு விருந்தினராக செல்ல வேண்டியிருக்கும். செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), பிக் டேட்டா (Big Data), டேட்டா சயின்ஸ் (Data Science) என வளர்ந்துவரும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்த இண்டர்நேஷனல் கான்ஃப்ரன்ஸ்களில் கலந்துகொள்ளும்போது வெளிநாடுகளில் இருந்து வருகின்ற தொழில்நுட்ப வல்லுநர்களுடன் கலந்துரையாடி எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கும் அழைத்து வந்து எங்கள் தயாரிப்புகளை அறிமுகம் செய்ய வேண்டியிருக்கும்.
சென்னையைத் தவிர வெளியூர்களில் கலந்துகொள்ள வேண்டியிருக்கும் நிகழ்ச்சிகளாக இருந்தால் அதற்கு முன்னேற்பாடுகள் செய்ய வேண்டியிருக்கும்.
எங்கள் காம்கேர் தயாரிப்புகளை வெளிநாடுகளில் அறிமுகம் செய்வதற்காக வருடத்துக்கு ஒருமுறை நிறுவனம் சார்ந்து வெளிநாட்டுப் பிரயாணங்கள் இருக்கும்.
இடையில் நாங்கள் நடத்தி வரும் ‘ஸ்ரீபத்ம கிருஷ்’ அறக்கட்டளை பணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும்.
குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளுதல், கோயிலுக்குச் செல்லுதல், நல்ல புத்தகங்கள் வாசித்தல், நல்ல சினிமா பார்த்தல் போன்றவற்றையும் விட்டுவிடுவதில்லை.
இரவு 8.30 – 9.00 மணிக்குள் வீடு வந்துவிடுவேன்.
இப்போது நான் எடுத்துக்கொண்ட கேள்விக்கான பதிலுக்கு வருகிறேன்.
சென்னையில் நடைபெறும் இலக்கிய கூட்டங்களுக்கு சென்று திரும்புவதில் இரண்டு பிரச்சனைகள்.
ஒன்று நேரம்.
டிராஃபிக்கில் நீந்திச் சென்று வர குறைந்த பட்சம் 3 மணி நேரங்களாவது ஆகிறது.
இரண்டாவது அங்கு நிலவும் அரசியல்.
நமக்கு முன் ஒன்று பேசுவது, நமக்குப் பின் மற்றொன்று பேசுவது.
இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்பவர்களிடம் நாமாக வலிய சென்று பேசினால் நம்மைப் பற்றிய கருத்து ஒன்றாகவும், அவர்களாக வலிய வந்து பேசினால் நம்மைப் பற்றிய கருத்தை வேறொன்றாகவும் வைத்துக்கொண்டு நம் தலை மறைந்தவுடன் நாம் சொல்லாததை எல்லாம் சொன்னதாக சொல்லி புறம் பேசுவது போன்ற சிலரது செயல்பாடுகள் நம்மை அறியாமலேயே நம்மைப் பற்றிய வேறொரு பிம்பத்தை உருவாக்கிவிடுகிறது.
எல்லாவற்றிலும் இருப்பதைப்போல் இதிலும் விதிவிலக்குகள் உண்டு.
ஒரு அறையில் இலக்கியத்தை பேசிக்கொண்டிருப்பதைவிட, எங்கள் காம்கேர் மூலம் இலக்கியத்தையும் தொழில்நுட்பத்தையும் இணைத்து ப்ராஜெக்ட்டுகள் செய்து இலக்கியத்தை உலகளாவிய முறையில் எடுத்துச் செல்வது இலக்கியத்துக்குச் செய்யும் ஆகச் சிறந்த சேவையாக எனக்குத் தோன்றுகிறது.
நமக்குப் பிடித்ததை செய்வது வரமல்லவா? அதைத்தான் நான் செய்துகொண்டிருக்கிறேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software