ஹலோ With காம்கேர் -57: தினமும் ஒரு புது விஷயத்தை எப்படி கொடுக்க முடிகிறது?

ஹலோ with காம்கேர் – 57
February 26, 2020

கேள்வி: கிட்டத்தட்ட 425 நாட்களாக இந்த நாள் இனிய நாள் பதிவுகளை படித்து வருகிறோம். தினமும் ஒரு புது விஷயத்தை எப்படி கொடுக்க முடிகிறது?

ஜனவரி 2019-ல் இருந்து தொடர்ச்சியாக நாள் தவறாமல் வாழ்வியல், நேர்மறை சிந்தனைகள், தொழில்நுட்பம் என பல்வேறு விஷயங்களை தொடர்ச்சியாக எழுதி காலை ஆறு மணிக்கு பதிவிட்டு வருகிறேன். சென்ற வருடம் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற தலைப்பு. இந்த வருடம் ‘கலோ With காம்கேர்’ என்ற தலைப்பு.

தலைப்பிலும் கான்செப்ட்டிலும் மட்டுமே மாற்றம். மற்றபடி என் சிந்தனையிலும் எழுத்திலும் எந்த மாற்றமும் இல்லை.

‘டெக்னோஸ்கோப்’ என்ற தொழில்நுட்ப வாட்ஸ் அப் குழு ஒன்றை நடத்திவருகிறேன். இங்கு எழுதுவதை அந்தக் குழுவில் தமிழிலும் நேரம் கிடைக்கும்போது ஆங்கிலத்திலும் பதிவிட்டு வருகிறேன்.

அந்தக் குழு தொழில்நுட்பத் துறையில் பிசினஸ் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், அத்துறையில் பணிபுரிபவர்களுக்கும் மட்டுமானது. இதில் 20 வயது இளைஞர்கள் முதல் 85 வயது பெரியவர்கள் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.

20 வருடங்களுக்கும் மேலாக ஹார்ட்வேர் சர்வீஸ் சென்டர் வைத்து நடத்திவரும் 70 வயது பெரியவர் ஒருவர் பிசினஸை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு இப்போது மேற்பார்வை மட்டும் பார்த்து வருகிறார். நான் நிறுவனம் ஆரம்பித்ததில் இருந்து என்னை நேரடியாகவும் கவனித்து வருவதால் என் வளர்ச்சி குறித்து அவ்வப்பொழுது என்னிடமும் பிறரிடமும் சிலாகித்துப் பேசுவார். என்னை ரோல் மாடலாக வைத்துக்கொள்ளச் சொல்லி அவர் மகள்களுக்கு அறிவுறுத்துவதாக சொல்வார்.

இவர் நேற்று என் பதிவைப் படித்துவிட்டு போன் செய்து, ‘நானும் கிட்டத்தட்ட 425 நாட்களாய் விடாமல் உங்கள் பதிவுகளை வாசித்து வருகிறேன். எந்த ஒரு விஷயமும் திரும்பி எழுதியதாகத் தெரியவில்லை. உங்கள் காம்கேர் பற்றி குறிப்பிடும்போது புது வாசகர்களுக்கு புரிய வேண்டுமே என்பதால் நிறுவனம் குறித்து கொஞ்சம் விளக்குவீர்கள். அது தவிர சொல்லும் கருத்துக்கள் இன்றுவரை புதிதாகவே உள்ளது. மறந்தும் மறுமுறை எழுதியதில்லையே எப்படி சாத்தியமாகிறது?’ என வியந்து பேசினார்.

அவருக்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துவிட்டு தொடர்ந்தேன்.

நான் அந்தந்த நிமிடத்தில் வாழப் பழகியிருக்கிறேன். கடந்தகாலத்தை நிகழ்காலத்துக்கான மகிழ்ச்சியில் கலந்து வாழ்கிறேன். எதிர்காலத்தை பற்றி கோட்டை கட்டுவதில்லை.

என்ன நடக்கிறதோ அதற்கேற்றாற்போல சூழலை அமைத்துக்கொண்டு செல்வதால் பெரிய ஏமாற்றங்கள் இல்லை. அதுபோல் சந்தோஷங்களையும் பெரிய அளவில் கொண்டாடுவதில்லை.

முயற்சி செய்வதும் அதற்கேற்ப உழைப்பதும் மட்டுமே நம் கைகளில். கிடைக்கும் பலனுக்கு நம் உழைப்பும் திறமையும் படிப்பும் மட்டும் போதாது, நம் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க பல்வேறு காரணிகள் வெவ்வேறு ரூபத்தில் காத்திருக்கும் என என் பெற்றோர் சிறு வயதிலேயே கற்றுக்கொடுத்துள்ளார்கள்.

இந்தத் தெளிவு இருப்பதால் ஒவ்வொரு நிமிடமும் என்னைச் சுற்றி இயங்குகின்ற இந்தப் பிரபஞ்சத்தில் லேசாய் பறக்கும் தூசி கூட ஏதோ ஒரு செய்தியை, கதையை ரகசியமாய் என்னிடம் சொல்லிவிட்டுச் செல்கின்றது.

தேவையான விஷயங்களைத் தவிர வேறெதற்கும் அதிகம் பேசுவதில்லை என்பதால் எதை யாரிடம் சொன்னோம், எதை மறந்தோம் என்ற குழப்பத்துக்கே வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அதோடு நினைவாற்றல் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதால் எதைச் சொன்னோம், எதைச் சொல்லவில்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ள முடிகிறது.

நிகழ்காலத்தில் வாழ்ந்து பாருங்களேன். உங்களுக்கும் எல்லாமே புதிதாய் தெரியும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 25 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon