ஹலோ With காம்கேர் -74:  சாப்பாட்டில் உப்பு போல் நாம் இருப்பது சாத்தியமா?

ஹலோ with காம்கேர் – 74
March 14, 2020

கேள்வி:  சாப்பாட்டில் உப்பு போல் நாம் இருப்பது சாத்தியமா?

தனித்துவமாக இருப்பது குறித்த விழிப்புணர்வே இல்லையோ என்று எண்ண வைக்கும் அளவுக்கு ஒரே அச்சில் வார்ப்பதைப்போல மனிதர்கள் பெருகிவிட்டார்கள்.

‘என்னவோ போங்க இந்த காலத்து பிள்ளைகளுக்கு…’, ‘என்னவோ போங்க இப்போதெல்லாம்…’ என்று அங்கலாய்க்கும் முந்தைய தலைமுறையினர்கூட தங்கள் இயல்பை இழந்து வருகிறார்கள். வீடும் சமுதாயமும் அவர்களையும் விட்டு வைப்பதில்லை.

ஒருவர் அனுப்பிய இமெயிலுக்கு பதில் அனுப்புவது, குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்தால் அதுகுறித்து சம்மந்தப்பட்டவர்களுக்கு நம் மகிழ்ச்சியை போனிலோ / வாட்ஸ் அப்பிலோ தெரிவிப்பது, நிகழ்ச்சிக்கு செல்ல முடியவில்லை என்றால் பிறகு போன் செய்து வர இயலாததுக்கு வருத்தம் தெரிவிப்பதுடன் நிகழ்ச்சி எப்படி நடந்தது என விசாரிப்பது, உடல் நிலை சரியில்லாதவர்களை நேரில் பார்க்க நேர்ந்தால் எப்படி இருக்கிறீர்கள் என நலன் விசாரிப்பது, உறவினர் பிள்ளைகளின் சாதனைகளை நினைவில் வைத்துக்கொண்டு நேரில் சந்திக்கும்போது பாராட்டுவது என்பதெல்லாம் வெகுவாக குறைந்துவிட்டது.

நம் சந்தோஷம் துக்கம் என எல்லாவற்றையும் அவ்வப்பொழுது சமூக வலைதளங்களில் வெளியிட்டு நூற்றுக்கணக்கில் ‘சம்பிரதாய’ வாழ்த்துகளையும், ‘வெர்ச்சுவல்’ ஆறுதல்களையும் பெற்றுவிடுவதால் உறவுகளின் முக்கியத்துவத்தை உணர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.

நேர்மையாக இருப்பதும், ஒழுக்கமாக வாழ்வதும், சுத்தமாக இருப்பதும், ‘பழம் பஞ்சாங்கம்’ என்ற பெயரை சுலபமாகப் பெற்றுத்தர உதவுகிறது. தைரியமாக இருப்பதும், தன்னம்பிக்கையாக வாழ்வதும் ‘திமிர் பிடித்தவள்(ன்)’ பட்டத்தைக் கொடுக்கிறது.

நண்பர்கள் என்ன படிக்கிறார்களோ அதையே படித்து, நண்பர்கள் என்ன வகை ஸ்மார்ட்போன் உபயோகிக்கிறார்களோ அதையே வாங்கி, நண்பர்கள் எப்படி உடை உடுத்துகிறார்களோ அப்படியே உடை உடுத்தி ஆட்டு மந்தையில் ஒரு ஆடாக இருக்க நன்றாகப் பழக்கிவிடுகிறது இன்றைய கல்வி முறையும் சமூக கட்டமைப்பும்.

பலருக்கும் பெரும்பான்மையினர் எப்படி இருக்கிறார்களோ அப்படியே வாழ்ந்துவிட்டுச் செல்வது சுலபமாக உருக்கிறது. பிரச்சனை ஏதும் இன்றி காலத்தைக் கடத்த வசதியாக உள்ளது. இன்னும் கொஞ்சம் ஆராய்ந்தால் அதுவே அவர்களுக்கும் அடிமனதின் விருப்பமாக இருப்பது தெரிய வரும் அல்லது காலப்போக்கில் அதுவே அவர்களிடம் ஒட்டிக்கொண்டிருக்கும்  தனித்துவத்தைப் புறந்தள்ளி அவர்களின் விருப்பமாக  மாறிவிடுகிறது / மாற்றிவிடுகிறது என்றும் சொல்லலாம்.

தனித்துவமாக இருப்பதற்கு தைரியம் வேண்டும். அசாத்திய துணிச்சல் வேண்டும்.

பொங்கல், உப்புமா என சமையல் செய்யும்போது அரிசியின் அளவு எவ்வளவு இருக்கிறது, அதில் போடும் உப்பின் அளவு எவ்வளவு இருக்கிறது என்பதை யோசியுங்கள். ஒரு டம்ளர் அரிசிக்கு ஒரு சிட்டிகை அளவுதானே உப்பு போடுகிறோம். இதில் அரிசி பெரும்பான்மையாக இருந்தாலும் நாம் கலக்கும் சிட்டிகை உப்புதானே முக்கியத்துவம் பெருகிறது. உப்பு போடாமல் சமைத்தால் யாரேனும் சாப்பிடுவார்களா?

அதுபோலதான் நம்மைச் சுற்றியுள்ள பெரும்பான்மையினர் எண்ணிக்கையில் வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். அவர்கள் அரிசியைப் போல.

தனித்துவத்துடன் செயல்படுபவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் அதிகம். ஏனெனில் அவர்கள் உப்பைப் போல.

வாழ்க்கையில் ஏற்றமோ இறக்கமோ சமையலில் உப்பைப் போல நாம் வாழ்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.

நம் தனித்துவமும் சுயமும் நம் வாழ்க்கையை மட்டும் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குவதில்லை, அது பிறர் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

தனித்துவம் என்பது தனியாக இருப்பதோ அல்லது செயல்படுவதோ அல்ல, பெரும்பான்மையினரிடம் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கொள்கைப் பிடிப்புடன் தனித்துவத்துடன் வாழ்வதாகும்.

சாப்பாட்டில் உப்பு போல் இருப்பது எனக்கு சாத்தியம். அப்போ உங்களுக்கு?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 52 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon