ஹலோ with காம்கேர் – 73
March 13, 2020
கேள்வி: பூமாராங் விளைவு என்றால் என்ன?
அவள் பெயர் சரஸ்வதி. எட்டு வயது. சச்சும்மா என்றுதான் அவள் அப்பா கூப்பிடுவார். அவர் மர வேலை செய்து வருகிறார். அவள் பிறந்தவுடன் அவள் அம்மா ஒரு விபத்தில் இறந்துவிட அப்பாதான் அவளை வளர்த்து வருகிறார். சச்சும்மாவுக்கு பள்ளி இல்லாத நாட்களில் எங்கு சென்றாலும் மகளை தன்னுடன் அழைத்துச் செல்வார்.
அவள் அப்பா அவளுக்கு ஒரு புது விளையாட்டு ஒன்றை கற்றுக்கொடுத்திருக்கிறார். தினமும் காலை எழுந்ததும் முதல் வேலையாக ஒரு காகிதத்தில் நேர்மறையாக அவளுக்கு என்ன தோன்றுகிறதோ அதை ஒருவரியில் எழுதி ஒரு உண்டியலில் போட வேண்டும். அவளும் அப்படியே செய்து வந்தாள். ‘எனக்கு தினமும் ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும்’, ‘டீச்சர் என்னை பாராட்ட வேண்டும்’, ‘வீட்டுப் பாடமே கொடுக்கக் கூடாது’ இப்படி தினம் ஒன்றாக எழுதி உண்டியலில் போடுவாள். அந்த நம்பிக்கையுடனேயே அன்றைய தினத்தை கழிப்பாள்.
சச்சும்மாவுக்கு கோடை விடுமுறை என்பதால் அப்பாவுடன்தான் நாள் முழுவதும் அவள் பொழுதை கழிக்க வேண்டி இருந்தது. அப்பாவுக்கு தான் ஒரு விளையாட்டை சொல்லித் தருகிறேன் என்று சொல்லி அவள் திட்டத்தைச் சொன்னாள். அதற்கு ‘மேஜிக் காகிதம்’ என்று பெயரையும் சூட்டினாள்.
ஒரு பெரிய வெள்ளை காகிதத்தில் ஒரு நேர்மறை கருத்தை ஒருவரியில் அவள் எழுதுவாள். அதை எதிர்படும் ஒருவரிடம் கொடுப்பாள். அதில் அவர் தனக்குத் தோன்றும் ஒரு நேர்மறை கருத்தை அல்லது விருப்பத்தை அது அப்படியே பலிக்கும் என்ற நம்பிக்கையில் எழுத வேண்டும். அந்த காகிதத்தை அவர் மற்றொருவரிடம் கொடுத்து அவரை ஏதேனும் ஒரு நேர்மறை கருத்தை எழுதச் சொல்ல வேண்டும். இப்படியாக அந்த மேஜிக் காகிதம் கை மாறிக்கொண்டே இருக்கும். அந்த காகிதம் நேர்மறை கருத்துக்களால் நிரம்பியவுடன் அது அவளிடமே எப்படியாவது வந்து சேரும் என்பது அவள் நம்பிக்கை.
அதை அப்பாவின் ஒப்புதலுடன் செயல்படுத்தத் தொடங்கினாள். ‘எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்று ஒரு நேர்மறை கருத்தை எழுதி அப்பாவிடம் கொடுக்க அவள் அப்பா ‘சச்சும்மா நினைத்தது நடக்க வேண்டும்’ என எழுதினார். கடையில் மளிகை பொருட்களை வாங்கிய பிறகு அந்தக் கடைக்காரரிடம் அந்த மேஜிக் காகிதத்தை கொடுத்து அவள் மகளின் ஆசையை விளக்கினார். அவரும் ‘எனக்கு இன்று வியாபாரம் சிறப்பாக இருக்கும்’ என எழுதி கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளரிடம் கொடுத்து எழுதச் சொன்னதோடு மேஜிக் காகிதத்தின் மகிமையை விளக்கினார்.
இப்படியாக சச்சும்மா ‘எல்லோரும் சந்தோஷமாக இருக்க வேண்டும்’ என்று எழுதி தொடங்கியிருந்த அந்த மேஜிக் காகிதம் அவள் அப்பா, கடை வியாபாரி, வாடிக்கையாளர் என சங்கிலித் தொடர்ச்சியாக ஐம்பது அறுபது நபர்களுக்குச் சென்று அன்றே அந்தக் காகிதம் முழுவதும் நேர்மறை கருத்துக்களால் நிரம்பி விட்டது.
இரவு நெருங்க நெருங்க சச்சும்மாவுக்கு இருப்புகொள்ளவில்லை. ‘அந்த மேஜிக் காகிதம் இன்னும் ஏன் அப்பா என்னிடம் வரவில்லை?’ என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.
இரவு ஒன்பது மணி இருக்கும். வாசலில் கதவை தட்டும் சப்தம். சச்சும்மா அப்பாவுடன் துள்ளிக் குதித்துக்கொண்டு ஓடினாள். வாசலில் ஒரு பாட்டி நின்று கொண்டிருந்தார். அவள் கைகளில் மேஜிக் காகிதம் இருந்தது. ‘எங்கள் வீட்டு கதவு சாத்த முடியாமல் மக்கர் செய்கிறது. சரி செய்து தர முடியுமா? என கேட்டுவிட்டு சச்சும்மாவின் கைகளில் அந்த மேஜிக் காகிதத்தைக் கொடுத்து இதில் ஏதேனும் ஒரு நேர்மறை கருத்தை எழுதி உனக்கு தெரிந்தவரிடம் கொடுத்துவிடம்மா என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.
சச்சும்மாவுக்கு ஆனந்தமோ ஆனந்தம். அப்பாவின் கழுத்தை கட்டிக்கொண்டு சந்தோஷமாக சிரித்தாள். மடிக்கப்பட்டிருந்த அந்த காகிதத்தை பிரித்துப் பார்த்தாள். ‘என் மனைவியின் வியாதி விரைவில் குணம் அடைந்துவிடும்’, ‘என் மகள் நிறைய மதிப்பெண் வாங்குவாள்’, ‘என் மகனுக்கு அவன் விருப்பப்படி ஸ்போர்ட்ஸில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்’ என்று அவரவர்கள் விருப்பத்தை நேர்மறையாக எழுதி இருந்தார்கள்.
விடுமுறை தினங்களில் சச்சும்மாவுக்கு இதுவே ஒரு பொழுதுபோக்காகிவிட்டது.
இது ஒரு கற்பனை கதைதான். ஆனாலும் இதில் ஒரு உண்மை உள்ளதை கவனிக்கவும். மேஜிக் காகிதத்தில் எழுதினால் அதில் எழுதுவது அப்படியே நடக்கும் என்பதால் அவரவர்கள் அதில் தங்கள் விருப்பத்தை எழுதி அந்த நேர்மறை எண்ணத்தை மற்றவர்களுக்கும் பரப்பினார்கள். கடைசியாக அத்தனை பேரின் நேர்மறை கருத்துக்களும் அந்த மேஜிக் காகிதத்தின் சொந்தக்காரருக்கே திரும்பிவந்தது.
இதுபோலதான் நாம் செய்கின்ற நல்ல செயல்களுக்கான விளைவுகள் சங்கிலித்தொடர்போல பலரை சென்றடந்து நற்பலன்கள் நம்மை அறியாமலேயே நம்மை வந்தடையும்.
நல்ல செயல்களுக்கான பலன்கள் வருவதைபோலவே தீய செயல்களுக்கான பலன்களும் நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடையும்.
இந்த சுழற்சிதான் வாழ்க்கையின் லாஜிக். நாம் என்ன செய்கிறோமோ அதுவே நம்மிடமே திரும்ப வரும். இதுவே பூமாராங் விளைவு.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software