ஹலோ with காம்கேர் – 75
March 15, 2020
கேள்வி: கம்ப்யூட்டர் புரோகிராமுக்கு லாஜிக் இருப்பதைப்போல் வாழ்க்கைக்கும் லாஜிக் உண்டா?
தன்னுடைய தோல்விகளுக்கும் பிறரது வெற்றிகளுக்கும் காரணம் தேடித்தேடி சொல்லிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள் இயலாமையைத்தான் வெளிப்படுத்துகிறார்கள்.
வெற்றியோ தோல்வியோ அது அந்தந்த நேரத்துக்கான சூழல் அமைத்துக்கொடுக்கும் வாய்ப்பு என்று சொல்லலாம். நம் திறமை, படிப்பு, முயற்சி, உழைப்பு இவை அனைத்தையும் முதலீடாகப் போட்டு நாம் தொடங்கும் எந்த ஒரு செயலுக்குமான வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது அந்த செயல் நடைபெறும் சூழல் என்று நான் உறுதியாக சொல்வேன். பெரும்பாலானோர் அதை அதிர்ஷ்டம் என்று சொல்கிறார்கள்.
நடிகர் அரவிந்த சாமியின் நேர்காணல் வீடியோ ஒன்றை பார்த்தேன். நடிகர், புகழ் பெற்றவர், கோடிகளில் புரள்பவர்கள் தவிர பிசினஸ் பின்னணியில் பிறந்து வளர்ந்தவர் கொடுத்து வைத்தவர் என பொதுவாக எல்லோரும் பிரமிக்கும் ஆளுமை அவர். ஆனால் அவர் சொன்ன ஒரு கருத்து வாழ்க்கை மீது பலர் கொண்டிருக்கும் கண்ணோட்டத்தை மாற்றுவதாக அமைந்திருந்தது.
மிகப் பெரிய தொழிலதிபரின் ஒரே மகனாக பிறந்தவர். இருந்தாலும் வாழ்க்கை புரிவதற்காக அவர் அப்பா பஸ் பாஸ் எடுத்துக்கொடுத்து பஸ்ஸில்தான் பள்ளிக்கு அனுப்பினாராம். ஒரு கட்டத்தில் அப்பா அம்மா இருவரையும் ஒருசேர பறிகொடுத்திருக்கிறார். தளபதி ரோஜா திரைப்படங்களில் வெளியான சமயம் பொது இடங்களில் இளம் பெண்கள் அவரை சூழ்ந்துகொண்டு ஆட்டோகிராஃப் வாங்கும்போது மிகவும் சங்கடமாக உணர்வாராம். எங்கு சென்றாலும் 40, 50 பேர் உற்றுப்பார்க்கும் பிரபலம் என்கின்ற முத்திரையை கையாளத் தெரியாமல் அந்த சூழல் பிடிக்காமல் நடிப்பை விட்டு சற்றுவிலகி அயல்நாட்டுக்கு படிக்கச் சென்றிருக்கிறார். திருமணம் ஆகி 3 வயதிலும் 7 வயதிலும் இரண்டு குழந்தைகள் இருக்கும்போது மனைவியுடன் விவாகரத்து. இரண்டு குழந்தைகளையும் தானே தன் கவனிப்பில் வளர்க்கும் சூழல். இடையில் ஒரு விபத்தில் முதுகெலும்பு உடைந்து கை கால் செயலிழந்து மருத்துவ உதவியுடன் தன்னம்பிக்கையுடன் போராடி அதில் இருந்து மீண்டிருக்கிறார்.
இதையெல்லாம் சொல்லி விட்டு கடைசியாக, ‘இதுவரை என் வாழ்க்கையில் எனக்கு நடந்த விஷயங்களை பரிதாபத்தைப் பெறுவதற்காக சொல்லவில்லை. என் வாழ்க்கையில் இப்படியெல்லாம் நடந்துள்ளது. நான் இவற்றை எப்படி கையாள்கிறேன் என்பதில்தான் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளது. இதுபோல் எல்லோர் வாழ்க்கையிலும் சோகங்கள் இருக்கும். அதை அவரவர்கள் எப்படி கையாள்கிறார்கள் என்பதில்தான் அவரவர்களின் வெற்றியும் தோல்வியும்’ என்று சொன்னாரே பார்க்கலாம். அதுவே ஹைலைட்.
நானும் இதையேத்தான் சொல்கிறேன்.
வெற்றி தோல்வி என பிரித்துப் பார்க்க வாழ்க்கை பந்தயம் அல்ல. அது ஒரு பயணம். அதில் எதிர்படும் நல்லவை கெட்டவைகளை எப்படி கையாள்கிறோமோ அதன் அடிப்படையில் தொய்வில்லாமல் செல்வதே வாழ்க்கை.
நமக்குக் கிடைக்கும் நல்லவற்றை இயல்பாகக் கொண்டாடும் நாம், நமக்கு நேர்கின்ற கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறோம் என்பதில்தான் வாழ்க்கையின் லாஜிக் அடங்கியுள்ளது.
இந்த லாஜிக் புரிந்தவர்கள் பாக்கியவான்கள். அவர்களால் வாழ்க்கைப் பயணத்தை சுலபமாக கடந்துவிட முடியும்.
கம்ப்யூட்டர் லாஜிக் போல்தான் வாழ்க்கை லாஜிக்கும். ரொம்ப சுலபம்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software