ஹலோ with காம்கேர் – 76
March 16, 2020
கேள்வி: கொரோனாவுக்காக மட்டும்தான் சுத்தமா?
இப்போதெல்லாம் அப்பார்ட்மெண்ட் வாழ்க்கையில் இப்படியெல்லாம் இருப்பது சாத்தியமா என அங்கலாய்ப்பவர்களுக்குத்தான் இந்தப் பதிவு. காலம் காலமாக இதுவே எங்கள் வாழ்க்கைமுறை.
-அப்பார்மெண்ட்டில் இருந்தாலும் காலையில் எங்கள் வீட்டு வாசலை டெட்டால் விட்டு துடைக்கிறோம்.
-வீட்டை துடைக்கும்போது தண்ணீரில் கல்உப்பு போட்டு துடைக்கிறோம்.
-காலையில் மொட்டை மாடியில் பறவைகளுக்கு அரிசி, பிஸ்கட் போட்டு சிறிய தொட்டியில் தண்ணீர் வைக்கிறோம்.
-மொட்டை மாடியில் வீட்டுக்குத் தேவையான பச்சை மிளகாய், தக்காளி, பிரண்டை, முருங்கை, புதியனா என காய்கறிகளை விளைவிக்கிறோம்.
-பூஜைக்குத் தேவையான செம்பருத்தி, சங்கு புஷ்பம், பவளமல்லி போன்ற பூக்கள் எங்கள் வீட்டு தோட்டத்தில்தான்.
-தவிர துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை போன்றவையும் உள்ளன.
-வீட்டுக்கு யாரேனும் வந்து சென்றால் குங்குமத்துடன் வெற்றிலை பாக்கு வைத்துக்கொடுத்து அனுப்புவோம். அந்த வெற்றிலையும் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் இருந்துதான்.
-தினமும் காலையில் விளக்கேற்றி நெய்வேத்தியம் செய்த பிறகு சூடம் காண்பிப்போம். மாலையில் விளக்கு ஏற்றிய பிறகு காய்ந்த நொச்சி இலை, வெண் கடுகு, பிரிஞ்சி இலை, வேப்பிலை இவற்றையும் சேர்த்து சாம்பிராணி போடுகிறோம்.
-வெளியே சென்றுவிட்டு வந்தால் கை கால் முகம் அலம்பிக்கொண்டுதான் எதையுமே தொடுவோம்.
-அவரவர் துணிகளை தனித்தனியாக அவரவர்களே துவைத்துக்கொள்வோம்.
-கடையில் இருந்து வாங்கிவரும் சாமான்களை ஈரத்துணியால் மேலே துடைத்து விட்டு, கையையும் நன்கு கழுவி விட்டுதான் அவற்றைப் பிரித்து அதற்கான பாத்திரங்களில் நிரப்புவோம்.
-பால் பாக்கெட் வாங்கிவந்தால் அதை தண்ணீரில் அலம்பிவிட்டுதான் ஃப்ரிட்ஜில் வைப்போம்.
-சமையல் செய்வதற்கு முன் காய்கறிகளை மூன்று முறை நன்கு அலம்பிய பிறகே பயன்படுத்துகிறோம். கீரை வகைகளாக இருந்தால் உப்பு மஞ்சள் போட்டு 10 நிமிடம் ஊற வைத்து பின்னர் சுத்தமான தண்ணீரில் அலம்பிய பிறகே பயன்படுத்துகிறோம்.
-சலூனில் இருந்து வந்த பிறகு குளிப்பதற்கு முன் எதையுமே தொட மாட்டோம்.
-தினமும் இருவேளை குளிக்கும் வழக்கம் உண்டு.
-பொது டாக்ஸிகளிலும், பஸ் ரயில் விமானப் பயணங்களுக்குப் பிறகு குளித்த பிறகு பயணம் செய்தபோது போட்டிருந்த ஆடைகளையும் துவைத்து விடுவோம்.
-தியேட்டர்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் சென்று திரும்பிய பிறகும்கூட இப்படித்தான்.
-இரு மாதங்களுக்கு ஒருமுறை ஆண் பெண் பேதமில்லாமல் அனைவருமே மருதாணி இட்டுக்கொள்கிறோம்.
-வாரம் ஒருமுறை எண்ணை தேய்த்து குளிக்கும் வழக்கம் உண்டு.
-யாருக்குமே மது சிகரெட் புகையிலை என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.
-சளி இருமல் வந்துவிட்டால் வீட்டில் இருப்பவர்கள் கூட கைக்குட்டையுடன்தான் இருப்போம்.
சாப்பாட்டைப் பொருத்த வரை…
-காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் வெந்நீரில் வெந்தயப் பவுடரை போட்டு சாப்பிடுவோம்.
-சாப்பிடும் முன்னர் நன்கு கை அலம்பிய பிறகே சாப்பிடுகிறோம்.
-கை அலம்பும் வசதி இல்லாத இடங்களில் சாப்பிடவே மாட்டோம்.
-காபி, டீ, தண்ணீர் எதுவாக இருந்தாலும் டம்ளரை / வாட்டர் பாட்டிலை எச்சில் செய்து சாப்பிட மாட்டோம்.
-அவரவர்கள் சாப்பிடுவதற்கென்று தனியாக சாப்பாடு, டிபன் தட்டு உண்டு.
-காலை டிபனுக்கு முன்னர் கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, இஞ்சி இவற்றுடன் ஊற வைத்த வெந்தயம் போட்டு அரைத்து மோரில் கரைத்து ஒரு டம்ளர் சாப்பிடுவோம்.
-மதியம் சாப்பாடுடன் ஒரு முழு நெல்லிக்காய் வேக வைத்தது நிச்சயம் உண்டு.
-இரவு உறங்கச் செல்லும் முன்னர் கருஞ்சீரகம், சீரகம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஓமம், சாப்பாடு மஞ்சள், கடுக்காய் இவற்றை அரைத்த பொடியை வெந்நீரில் போட்டு சாப்பிடுவோம்.
-பெரும்பாலும் ஓட்டல் சாப்பாட்டை தவிர்க்கிறோம். கூல் ட்ரிங்குகளை சாப்பிடுவதில்லை. ஃப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த தண்ணீரையும் குடிப்பதில்லை.
-வெளியிடங்களில் குடும்ப விழாக்களில் சாப்பிடும் சூழல் ஏற்பட்டால் சாப்பிட்டு முடித்த பிறகு மிளகு பொடியை தண்ணீருடன் சாப்பிடுவோம். ஏதேனும் நம் உடலுக்கு ஆகாத பொருட்கள் இருந்தால் அவற்றை முறியடிக்கும்.
-ஞாயிற்றுக்கிழமைதோறும் இஞ்சி சொரசம் சாப்பிடுகிறோம்.
-பெரும்பாலும் இனிப்பு காரம் இவற்றை வீட்டிலேயே தயார் செய்வோம்.
-வெயில் காலங்களில் வீட்டிலேயே வடாம், வத்தல் போட்டு வைத்துக்கொள்வோம்.
-உடல்நலமில்லாவிட்டால் வீட்டு வைத்தியம் முயற்சித்தப் பிறகு கட்டுப்படாவிட்டால்தான் மருத்துவமனை செல்வோம்.
-பிரயாணங்களின் போது சீரகம், ஓமம், மிளகு, வெந்தயம், உப்பு, சர்க்கரை என மினி மெடிக்கல் டூல் கிட் எடுத்துச் செல்வோம்.
அமெரிக்காவில் வாழும் எங்கள் உடன்பிறப்புகளும் இதையெல்லாம் பின்பற்றுகிறார்கள் என்று சொன்னால் நம்பித்தான் ஆக வேண்டும். இதெல்லாம் கொரோனாவுக்காக மட்டுமல்ல. எங்கிருந்தாலும் எங்கள் வாழ்க்கை முறையே இப்படித்தான்.
மனமிருந்தால் மார்க்கமுண்டு!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்!
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software