ஹலோ With காம்கேர் -95: சூரிய அஸ்தமன நேரமும் சிறுவனின் நேர்த்தியான செயல்பாடும். இது என்ன கதையின் தலைப்பா?

ஹலோ with காம்கேர் – 95
April 4, 2020

கேள்வி:  சூரிய அஸ்தமன நேரமும் சிறுவனின் நேர்த்தியான செயல்பாடும். இது என்ன கதையின் தலைப்பா?

நேற்று மாலை 5.30 மணிக்கு மாடியில் வாக்கிங் சென்றிருந்தேன். வழக்கம்போல சூரிய அஸ்தமனம் வெகு அழகாய் செம்பிழம்பாய். அக்கம் பக்கத்து குடியிருப்புகளின் மொட்டை மாடிகளையும் மனிதர்கள் ஆட்கொண்டிருந்தனர். நம்மைச் சுற்றி இத்தனை மனிதர்கள் இருக்கிறார்களா என ஆச்சர்யம்.

சிறுவர் சிறுமியர் விளையாடிக்கொண்டிருந்தனர். இளைஞர்கள் மொபைல் போனில் பேசிக்கொண்டிருந்தனர். நடுத்தர வயதினர் மாடியை சுற்றி சுற்றி வேக வேகமாக வாக்கிங் சென்றுகொண்டிருந்தனர். வயதானவர்கள் மெதுவாக தங்களுக்குள் பேசியபடி நடந்து சென்றுகொண்டிருந்தனர்.

எதிர் குடியிருப்பு ஒன்றில் குட்டிப் பையன் ஒருவன் சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்தான். பத்துப் பன்னிரெண்டு வயதுதான் இருக்கும். தூரத்தில் இருந்து பார்த்தாலே பளிச்சென தெரியும் ‘வெள்ளை வெளேர்’ வேட்டியில் அத்தனை அழகு. அவன் அப்பாவோ அல்லது அம்மாவோகூட அருகில் இல்லை.

அந்த சிறுவனின் முகம் அத்தனை நுணுக்கமாக தெரியவில்லை. அந்த சிறுவனது பொறுப்பும் நேர்த்தியும் நிச்சயம் அவன் அழகனாகத்தான் இருப்பான் என்று தோன்றியது. மனம் முழுவதும் பரவசத்தால் நிரம்பியது.

அந்தச் சிறுவன் தினம்தோறும் சந்தியாவந்தனம் செய்வதால்தான் நேற்றும் செய்திருக்கிறான். ஒருநாள் திடீர் பழக்கம் அல்ல என்பதை அவனது நேர்த்தியான முறையான செயல்பாடு உணர்த்தியது. 5.30 மணிக்கு தொடங்கியவன் 6 மணிக்குத்தான் நமஸ்கரித்துவிட்டு கிளம்பிச் சென்றான். அவனுக்கு இந்த வயதிலேயே நல்ல பழக்கத்தை ஏற்படுத்திய முகம் பார்த்திராத அவனது பெற்றோரை நினைத்துப் பெருமைப்பட்டேன்.

அவனுக்கு மிக அருகிலேயே ஓரிரு இளைஞர்கள் போனை தேய்த்தபடி அலைந்துகொண்டிருந்தனர். இப்படி போனிலேயே வாழ்க்கை நடத்துவதும் வெகுநாட்களாய் ஊறிப்போன பழக்கம்தான்.

பழக்க வழக்கங்கள்தான் நம் மனதின் போக்கை தீர்மானிக்கின்றன. மனமே வாழ்க்கைக்கு அச்சாரம்.

நல்ல பழக்கவழக்கங்களை விட கெட்ட பழக்க வழக்கங்கள்தான் நம்மை மிக எளிதாக ஆட்கொள்கின்றன.

அதற்குக் காரணம் நல்லவை சட்ட திட்டங்களுடன் ஒரு வரையறைக்கு உட்பட்டு நியாய தர்மங்களுக்கு கட்டுப்பட்டு இயங்குவதால் அதை பற்றிக்கொள்ள பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு திடமான மனமும் உறுதியான குறிக்கோளும் வேண்டும். வலிய வலிய அழைத்து நம் மனதில் அதற்கான பிரமாண்டமான சிம்மாசனத்தை அமைத்துக்கொண்டு காத்திருந்தாலும் அதில் நோகாமல் வந்து அமர்ந்துகொள்ள சண்டித்தனம் செய்யும்.

மாறாக கெட்டவை கட்டற்று இயங்கும் தன்மை கொண்டது. எந்த நியாய தர்மமும் கிடையாது. மனம்போன போக்கில் இயங்க வைக்கும். பெரிய முயற்சி எல்லாம் செய்ய வேண்டியதில்லை. கெட்டவற்றை மனதால் ஒருநிமிடம் நினைத்தாலே போதும், ‘இதோ வந்துட்டேன்’ என நம் மனதுக்குள் வந்தமர்ந்து தனக்கான சிம்மாசனத்தை தானே வடிவமைத்துக்கொண்டுவிடும்.

நல்லவற்றை பிரம்மப் பிரயத்தனம் செய்து கைகொள்ள வேண்டியிருக்கும். கெட்டவற்றை அதே பிரம்மப் பிரயத்தனம் செய்து விலக்க வேண்டியிருக்கும்.

முன்னதைப் பற்றிக்கொள்வது ஆரம்பத்தில் கடினம். பற்றிக்கொண்டுவிட்டால் ஜெயமே. பின்னதை பற்றிக்கொள்வது சுலபம். பற்றிக்கொண்டுவிட்டாலோ நம் வாழ்க்கையே புதைக்குழிதான்.

ஜெயம் வேண்டுமா புதைக்குழி வேண்டுமா என்பதை நாம்தான் முடிவெடுக்க வேண்டும். இதுவா அதுவா என்ற இந்த பஞ்சாயத்தில் நம் மனம் விரும்புவது ஜெயத்தைத்தானே. யாராவது புதைக்குழியை வலிய விரும்பி ஏற்பார்களா.

கிடைக்கும் பலன் இனிக்க வேண்டும் என்றால் நாம் பின்பற்ற வேண்டியது கடினமாக இருக்கும் நல்ல விஷயங்களை மட்டுமே. கசக்கும் பலனை விரும்புபவர்கள்தான் கெட்ட விஷயங்களுக்கு தெரிந்தே அடிமையாவார்கள்.

இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள சிறுவன் சந்தியாவந்தனம் செய்யும் குடும்பத்தில் பிறந்திருப்பதால் அதை செய்யும் பழக்கத்தை வழக்கமாக்கியுள்ளார்கள் அவனது பெற்றோர்.

இதுபோல ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நல்ல பழக்க வழக்கம் இருக்கும். அதை கடைபிடிக்கும் மனோபாவத்தை வளர்த்துவிட வேண்டும்.

இன்றைய இந்தப் பதிவை நேற்று சூரிய அஸ்தனமன நேரத்தில்  சந்தியாவந்தனம் செய்த அந்த சிறுவனுக்கு சமர்ப்பிக்கிறேன்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 38 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon