ஹலோ With காம்கேர் -96: வீட்டு வேலைகள் பெண்களுக்கு மட்டும் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா?

ஹலோ with காம்கேர் – 96
April 5, 2020

கேள்வி:  வீட்டு வேலைகள் பெண்களுக்கு மட்டும் பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதா?

இந்த வாரம் குடும்ப நண்பர்கள் சிலரிடம் போனில் தொடர்புகொண்டு பேசினோம். எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் கொரோனா சீசன் அறிவுரையாக ‘வெளியில் செல்லாதீர்கள். பார்த்து பத்திரமாக இருங்கள்’ என்று சொன்னபோது ஆண்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே டயலாக்கை சொன்னார்கள்.

‘நான் வெளியில் செல்வதில்லை. என் மனைவி இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருகில் இருக்கும் கடையில் பாலும், காய்கறியும் வாங்கி வந்துடுவாங்க…’

இந்த பதிலை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. காரணம், நாங்கள் பேசிய ஆண்கள் சின்னச் சின்ன வீட்டு வேலைகளைக் கூட மனைவியுடன் பகிர்ந்து கொள்ளாதவர்கள். வீட்டு வேலைகளையும் பகிர்ந்துகொள்வதில்லை, வெளி வேலைகளையும் செய்வதில்லை. பிறகு என்னதான் ஆண்களின் வேலை, அலுவலகம் செல்வதும் சம்பாதிப்பதும் மட்டும்தான் அவர்களின் வேலை என நினைத்துக்கொண்டிருக்கிறார்களா?

நினைவு தெரிந்த நாளில் இருந்து இன்றுவரை என் அப்பா எங்களையோ அல்லது அம்மாவையோ எந்த கடைக்கும் அனுப்பியதில்லை. வெளிவேலை அத்தனையும் என் அப்பாதான் செய்வார். வெளிவேலை என்றில்லை வீட்டு வேலைகளில் சமையல் உட்பட அத்தனையையும் மிகமிக நேர்த்தியாக செய்வார்.

உள்ளங்கையில் வைத்து தாங்குவதாக சொல்லி கேள்விப்பட்டிருப்பீர்கள். உள்ளங்கையில் பஞ்சு மெத்தை போட்டு தாங்குவதை கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். என் அப்பா அப்படித்தான் தாங்கிக்கொண்டிருக்கிறார் இன்றுவரை.

விம் பாத்திரம் தேய்க்கும் சோப்புக்கான விளம்பரம்.

அதில் ஒரு சிறுவன் விண்ணப்பப்படிவம் பூர்த்தி செய்துகொண்டிருப்பான். அப்பாவின் வேலை பேங்க் மேனேஜர் என எழுதிவிட்டு, அம்மாவின் வேலை என்ற இடத்தில்   ‘அம்மாவோட வேலை எதுவுமில்லையே’ என்று சொல்வான்.

பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் அவன் அம்மா திரும்பிப் பார்ப்பார். அந்தப் பார்வையில் ஓர் ஏக்கம் இருக்கும். அவர் கணவரும் அவரது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு அவர் அருகில் வந்து நின்றுகொண்டு ‘உனக்கு பேக்கரி ஆரம்பிக்கணும்னு ஆசை என்று எனக்குத்தெரியும்’ என்று சொல்வார். அதற்கு அந்த பெண் பாத்திரத்தை தேய்த்தபடி ‘இந்த வீட்டு வேலைகளில் இருந்து நேரம் கிடைத்தால்தானே எனக்குன்னு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக்க முடியும்’ என்பார்.  ஏக்கத்துடன் தேய்த்துக்கொண்டிருந்த பாத்திரத்தை பிரஷ்ஷால் தேய்ப்பார். உடனடியாக அந்த பாத்திரம் பளிச்சென்றாகி அதில் அவர் முகத்தைப் பிரதிபலிக்கும். உடனே அவர் முகமும் பளிச்சென சந்தோஷத்தில் ஜொலிக்கும். கேமிரா அப்படியே பாத்திரம் தேய்க்கும் சோப்பையும், பளிச்சென தேய்த்து வைத்த பாத்திரங்கள் மீதும் திரும்பும்.

‘ஆஹா, பாத்திரம் தேய்க்கும் வேலை முடிஞ்சிடிச்சி’ என்பார். அவர் கணவரும் அதிசயத்து ‘இவ்வளவு சீக்கிரமாவா’ என்பார். அதற்கு அந்த பெண் ‘அப்படின்னா இப்போ எனக்கு நேரம் இருக்கு எனக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிக்க…’ என்பார்.

அடுத்த காட்சியில் அந்த பெண் Divya’s Cake Shop என்ற பெயரில் பேக்கிரி ஆரம்பித்து விற்பனை செய்வதாக காண்பித்திருப்பார்கள்.

கடைசி காட்சியில் ‘விம் சூப்பர் வேகத்தில் பிசுக்கை நீக்கும். எனவே உங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள நேரம் கிடைக்கும்’ என முடித்திருப்பார்கள்.

இந்த விளம்பரம் எப்படி இருந்தால் பெண்களின் மனதை தொட்டிருக்கும் என சில காட்சிகளை கற்பனையில் மாற்றி அமைத்தேன். நான் அந்த விளம்பரத்தை இயக்கியிருந்தால் இப்படித்தான் காட்சிகளை அமைத்திருப்பேன்.

முதல் காட்சியான மகன் அம்மாவின் வேலை எதுவுமே இல்லையே என சொல்லும்போது பாத்திரம் தேய்த்துக்கொண்டிருக்கும் அவன் அம்மா திரும்பிப் பார்ப்பார். அந்தப் பார்வையில் ஓர் ஏக்கம் இருக்கும். அவர் கணவரும் அவரது ஆதங்கத்தைப் புரிந்துகொண்டு அவர் அருகில் வந்து நிற்பார்.

அந்தக் காட்சி வரை அப்படியே இருக்கலாம். பிறகுள்ள காட்சிகளில் சிறு மாற்றம் செய்கிறேன்.

‘நான் பாத்திரம் தேய்க்கிறேன். உனக்கு பேக்கரி ஆரம்பிக்கணும்னு ஆசை என்று எனக்குத்தெரியும். பேக்கிரி ஆரம்பிக்க உன் தோழிகளிடம் ஆலோசனைகளும் ரெசிபிகளும் பற்றி பேச வேண்டும் என சொல்லி இருந்தாயே அதை கவனி…’ என்று சொல்லி வலுகட்டாயமாக அவரிடம் இருந்து பாத்திரங்களை பிடுங்கி தான் தேய்க்க ஆரம்பிப்பார். பாத்திரம் தேய்க்கும் கணவனை ஆசையாக பார்த்துக்கொண்டிருக்கும் சில நொடிகளில் அவர் சிங்கில் உள்ள பாத்திரங்கள் அத்தனையையும் தேய்த்திருப்பார்.

‘ஆஹா, பாத்திரம் தேய்க்கும் வேலை முடிஞ்சிடிச்சி’ என  அந்த பெண் அதிசயக்க அவர்  கணவர்  ‘அப்படின்னா இப்போ பெண்களுக்கு நிறைய நேரம் இருக்கும் அவங்களுக்கு என ஓர் அடையாளத்தை உருவாக்கிக்க…’ என்பார்.

இதற்குப் பிறகு அந்த பெண் பேக்கிரி ஆரம்பித்து விற்பனை செய்யும் காட்சியில் ஏதும் மாற்றம் இல்லை.

கடைசி காட்சி  ‘விம் சூப்பர் வேகத்தில் பிசுக்கை நீக்கும். வீட்டில் ஆண்கள் பாத்திரம் தேய்க்க இது பெருமளவில் உதவுகிறது. அதனால் பெண்கள் தங்கள் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ள நேரம் கிடைக்கும்’ என முடியும்.

இப்படி இந்த வீடியோ அமைந்திருந்தால் இந்த விளம்பரம் பெண்கள் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கும்.

விளம்பரத்தில் மட்டுமல்ல நிஜத்திலும் பெண்கள் விரும்புவது வீட்டு வேலைகளை பகிர்ந்துகொள்ளும் ஆண்களைத்தான்.

வீட்டு வேலைகள் செய்வது பெண்களின் சுதந்திரத்துக்கு எதிரானது என்று நான் சொல்லவில்லை. ‘வீட்டு வேலைகள் எனக்கு அலுப்புத் தருகிறது, அதை நான் மட்டுமே செய்து கொண்டிருக்க முடியாது கணவனும் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்’ என சொல்லும் சூழல் பெண்களுக்கு உருவாக வேண்டும் என்பதே என் ஆசை. இப்படி வாய்விட்டுகூட சொல்லாமல் ஆண்களாகவே முன்வந்து பெண்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து வேலைகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது என் பேராசை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 31 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon