ஹலோ with காம்கேர் – 105
April 14, 2020
கேள்வி: ‘கரி நாக்கு, சொன்னால் பலித்துவிடும்’ என்பது உண்மையா?
‘கரி நாக்கு. சொன்னால் பலித்துவிடும்’ என்று எனக்கும் ஓர் அடையாளம் உண்டு. உங்களுக்கெல்லாம் ஒன்று சொல்கிறேன். ‘இந்த சார்வரி புத்தாண்டில் நம்மை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் அத்தனை விஷயங்களும் தூள்தூளாக உடைந்துவிடும். நாம் புத்துணர்வோடு பயணிக்க நமக்கான புது உலகம் காத்துக்கொண்டிருக்கிறது. இனி எப்படி வாழ வேண்டும் என்னும் சில தீர்மானங்களுடன் நம் மனதைப் பக்குவப்படுத்தி புது யுகத்தில் பயணிக்கத் தயாராவோம். இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்’
யாருக்குத்தான் எண்ணம்போல வாழ வேண்டும் எனும் ஆசை இருக்காது. எண்ணம்போல் வாழ்வதற்கு நம் ‘பேச்சும்’ ஒரு காரணி.
‘கரி நாக்கு, சொன்னால் பலித்துவிடும்’ என்று சிலரை சொல்வார்கள். ஜோதிடம் சொல்பவர்களுக்குக்கூட வாக்கு பலிதம் இருந்தால் மட்டுமே அவர்கள் கணித்துச் சொல்லும் பலன் ஜெயிக்கும். ஞானிகளும் முனிவர்களும் சொல்லும் சொல் பலிப்பதை கேள்விப்பட்டிருப்போம்.
அப்படி என்னதான் மாய மந்திரம் இருக்கிறது நாம் பேசுகின்ற பேச்சில்?
நாம் என்ன பேசுகிறோமோ அதையே நம் மனமும் உண்மை என நம்புகிறது. நாம் என்ன சொல்கிறோமோ அதை செயல்படுத்த முனைந்துவிட்டால் தப்பித்தோம். நம் மனம் நம்மை நேர்வழியில் வழிநடத்தி நாம் செயலை வெற்றிகரமாக முடிக்க வைக்கும்.
அப்படி நாம் சொல்வதை செயல்படுத்த குறைந்தபட்ச முயற்சியைக்கூட எடுக்காமல் தட்டிக்கழித்து வந்தால், நம் மனதுக்கு பெரும்குழப்பம் ஏற்படும்.
ஒருவரிடம் ஒரு விஷயத்தைச் சொல்லும்போது அது நம் ஆழ்மனதில் பதிந்துவிடும். நம் மனதும் சும்மா இருக்காது. அடிக்கடி நம்மிடம் அந்த விஷயத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். ஆனால் நாம்தான் ஒரு முடிவோடு இருப்போமே அதை செய்யப் போவதில்லை என்று. எனவே நம் ஆழ்மனதில் கட்டளையை புறம்தள்ளிவிடுவோம்.
இப்படி வாய் வார்த்தைக்காக சொல்லுகின்ற விஷயங்கள் தற்பெருமைக்காகவோ, பிறரை ஏமாற்றுவதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இருக்கலாம்.
எந்த காரணமாக இருந்தாலும் இப்படியே ஓரிரு முறை சொல்லிவிட்டு செயல்படுத்தாமல் விட்ட விஷயங்களினால் நம் மனது அதற்கு ட்யூன் ஆகிவிடும். ‘இவன்(ள்) சொல்லும் விஷயங்களை செயல்படுத்த மாட்டான்(ள்)’ என்பதை நன்கு புரிந்துகொண்டு அதையே நம் நிரந்தரப் பழக்கமாக வழக்கப்படுத்திவிடும்.
உண்மையிலேயே ஏதேனும் ஒரு விஷயத்தை செய்ய வேண்டிய சூழலில் நாம் சொல்லுகின்ற வார்த்தையை மனது ஏற்றுக்கொள்ளாமல் ‘சொல்லும் வார்த்தையை செய்ய வேண்டியதில்லை’ என்று நம் மனதில் ஆழப்படிந்த லாஜிக்கின்படியே நம்மை வழிநடத்தும்.
செய்ய வேண்டிய செயலுக்கும், செய்ய வேண்டியதில்லை என்ற நம் மனதின் பழக்கத்துக்கும் இடையே பெரும்போராட்டமே நடக்கும். முடிவில் நம் மனமே ஜெயிக்கும்.
‘நாம் செய்யப்போவதை மட்டுமே சொல்லுவோம்’ என்ற நம்பிக்கைக்கு நம் மனதை பழக்கப்படுத்தியிருந்தால் மட்டுமே நாம் செய்கின்ற செயலுக்கான உத்வேகம் நமக்குள் உண்டாகும். அந்த உத்வேகமே நேர்மறையான சூழலை உண்டாக்கும். நம்முடைய செயல்களை வெற்றிகரமாக செய்துமுடிக்கும் வல்லமையை கொடுக்கும்.
மாறாக, ‘நாம் சொல்லுவதை எல்லாம் அப்படியே சிரமேற்கொண்டு செய்யமாட்டோம்’ என்ற நம்பிக்கைக்கு நம் மனது பழக்கமாகி இருந்தால் நமக்குள் உத்வேகமோ, சூழலோ, ஆற்றலோ எதுவுமே நமக்கு சாதகமாக இருக்காது.
பிறரை நம்ப வைத்துவிட்டு ஏமாற்றுவதற்கு நம்பிக்கை துரோகம் என்றுபெயர். சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதைப் போலதான் நம் மனதுக்கு நாம் செய்யும் நம்பிக்கை துரோகமும்.
எண்ணம் சொல் செயல் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் அமையப்பெற்றவர்கள் சொல்லும் வாக்கு பலிதம் ஆகும். இது மாய மந்திரமோ மேஜிக்கோ இல்லை.
நம் மனமே மந்திரம், நம் மனமே மேஜிக், நம் மனமே இறைசக்தி. நம் மனமே இயற்கை. மனமே அனைத்தும். புரிந்தவர்கள் புத்திசாலிகள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software