ஹலோ with காம்கேர் – 104
April 13, 2020
கேள்வி: அடடே சங்கதி தெரியுமா?
என் பெற்றோர் நிறைய புத்தகங்கள் வாங்குவார்கள், ஆழமாக வாசிப்பார்கள் என்று அடிக்கடி சொல்லி இருக்கிறேன். அம்மா தான் படிப்பதில் முக்கியமானவற்றை கிழித்து வைத்துக்கொண்டே வருவார். நானும் என் சகோதரன் சகோதரியும் அப்பாவுடன் அமர்ந்து நாங்களாகவே எங்கள் கைகளால் அவற்றை பைண்டிங் செய்வோம். அதுதான் சிறுவயதில் எங்கள் விடுமுறை தின பொழுதுபோக்கு.
அன்றே என் பெற்றோர் சேகரித்த கட்டுரை தொகுப்புகளைப் பார்த்தால் இன்றும் எங்களுக்கு ஆச்சர்யம்தான். சூப்பர்கம்ப்யூட்டர், மெயின்ஃப்ரேம் கம்ப்யூட்டர், மினி கம்ப்யூட்டர், மைக்ரோ கம்ப்யூட்டர் என விதவிதமான பெயர்களில் அறை முழுவதையும் எடுத்துக்கொள்ளும் மெகா சைஸ் கம்ப்யூட்டர் தொழில்நுட்பம் அறிமுகமான காலத்தில் (1980-களின் தொடக்கத்தில்) வெளியான கட்டுரைகளை சேகரித்து வைத்திருக்கிறார்கள். நாங்கள் கம்ப்யூட்டர் துறையில் இயங்கப் போகிறோமா என அவர்களுக்கே தெரியாது. ஆனால் நாங்கள் இயங்குவது தொழில்நுட்பத்துறையில்தான்.
சினிமா தொழில்நுட்பங்களையும்கூட சேகரித்து வைத்திருந்தனர். நாங்கள் நேரடியாக சினிமா துறையில் இயங்கவில்லையே தவிர அதே நுட்பத்தில் இயங்கும் அனிமேஷன், கார்ட்டூன், ஆவணப்படங்கள் போன்ற துறைகளில் இயங்கி வருகிறோம்.
சரி சரி… சங்கதிக்கு வருகிறேன்.
முத்தாரம் என்றொரு பத்திரிகை வந்துகொண்டிருந்தது தெரிந்திருக்கும். அதில் ‘அடடே சங்கதி’ என்றொரு பகுதியில் ஆழமான சினிமா தொழில்நுட்பங்களை தொடர் கட்டுரையாக மிக எளிமையாக கொடுத்து வந்தார்கள்.
டப்பிங் இல்லாமலேயே படம் எடுக்கலாமா, ராக் அண்ட் ரோல் புரொஜெக்டர், Back Projection என்றால் என்ன, கேமிரா லைட்டில் புதுமை, மினியேச்சர் செட்டில் எடுக்கப்பட்ட படம், டோப்பா முடி எப்படி பயன்படுகிறது, புகை மண்டலம் உருவாகும் கதை, கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பது எப்படி, அம்பலமாகும் அந்தரங்க விஷயம் – இவை ‘அடடே சங்கதி’ பகுதியில் இடம்பெற்றுள்ள சில தலைப்புகள்.
‘அம்பலமாகும் அந்தரங்க விஷயம்’ என்ற கட்டுரையில் In Camera Shots குறித்து சொல்லி இருக்கிறார்கள்.
‘மிக நெருக்கமான காதல் காட்சிகளையோ, மிகக் குறைந்த ஆடையுடன் நடிக்க வேண்டிய காட்சிகளையோ படமாக்கும்போது சம்மந்தப்பட்ட நடிகர் நடிகை ஒளிப்பதிவாளர் இயக்குனர் ஆகியோர் மட்டும் இருப்பார்களாம். சென்சாருக்கு தப்பி வந்தால் எப்படியும் லட்சக்கணக்கானோர் அந்தக் காட்சிகளைப் பார்க்கத்தானே போகிறார்கள். இதிலென்ன ரகசியம் வேண்டியிருக்கிறது என முணுமுணுக்கிறீர்களா. இதுபோன்ற காட்சிகளை In Camera Shots என்று அழைப்பதுண்டு. நீதி மன்றங்களில் குடும்பத் தகராறு, விவாகரத்து வழக்குகளில் கணவன், மனைவி, நீதிபதி, சம்மந்தப்பட்ட வக்கீல்கள் ஆகியோர் மட்டும் அனுமதிக்கபப்டுவர். இவற்றை ‘இன் காமெரா ப்ரொசீடிங்ஸ்’ என்று அழைப்பர்…’.
‘டப்பிங் இல்லாமலேயே படம் எடுக்கலாமா’ என்ற கட்டுரையில் ‘ஏழாவது மனிதன்’ சினிமாவை டைரக்ட் செய்த திரு. ஹரிஹரனிடம் இருந்து டப்பிங் குறித்து கருத்தை கேட்டு வாங்கி வெளியிட்டுள்ளார்கள்.
‘மேல்நாடுகளில் பொதுவாகவே டப்பிங் செய்யாமல்தான் படத்தை எடுக்கிறார்கள். படத்தை எடுக்கும்போதே வசனத்தையும், சுற்றுப்புற ஒலிகளையும் பதிவு செய்துவிடுகிறார்கள். அதனால்தான் அந்தப் படங்களில் டயலாக்கும் சுற்றுப்புற சப்தமும் இயல்பாக அமைந்துவிடுகிறது. ஆனால் நம் நாட்டில் அந்த முறை சரிபட்டு வருவதில்லை. பொதுவாக இதற்கு நாம் கேமிரா மீது பழியை சுமத்தி விடுகிறோம்…’
‘மினியேச்சர் செட்டில் எடுக்கப்பட்ட படம்’ என்ற கட்டுரையில் பிரமாண்ட காட்சிகள் உருவாகும் விதம் விவரிக்கப்பட்டுள்ளது.
‘உதாரணத்துக்கு எல்.ஐ.சி கட்டிடம் எரிவதைப் போல காட்சி எடுக்க வேண்டிமென்றால் தீப்பெட்டி அளவில் எல்.ஐ.சி கட்டிடத்தின் மாடல் ஒன்றை உருவாக்கி, அதை எரிய விடுவார்கள். அதை மிட்சல் கேமிராவில் படமாக்குவார்கள். தியேட்டரில் இந்தக் காட்சியைப் பார்க்கும்போது உண்மையாகவே எல்.ஐ.சி கட்டிடம் எரிவதைப்போல இருக்கும். இதைத்தான் மினியேச்சர் செட் என்கிறார்கள்’
இன்று உச்சத்துக்கு சென்றுவிட்ட தொழில்நுட்பத்தின் உதவியுடன் சினிமா எடுக்கும் முறைகளில் மாற்றம் இருந்தாலும் அவற்றின் அடிப்படையை ஒன்றுதானே.
பொதுவாக சினிமா பகுதி என்றாலே ‘கிசுகிசு’ தான் என்றிருந்த காலத்தில் சினிமா தொழில்நுட்பத்துக்காகவே ஒரு பகுதியை ஒதுக்கி இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம்தான்.
நேற்றைய பொழுது புத்தக அலமாரி கிளறிவிட்ட சிந்தனைகளுடன்!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software