ஹலோ with காம்கேர் – 108
April 17, 2020
கேள்வி: பிரச்சனைகளும் தீர்வுகளும் Match the following போல தனித்தனியாக எதிர்திசையில் கட்டம் கட்டிக்கொண்டு நிற்பது ஏன்?
ஏழாம் வகுப்புப் படிக்கும்போது ஒருநாள், எங்கள் அறிவியல் ஆசிரியர் ஒரு கேள்வியை எங்கள் முன் வைத்தார். அவர் மிக நேர்த்தியாக கம்பீரமாக புன்னகையுடன் அழகாக இருப்பார்.
“இன்று நான் பள்ளிக்கு வந்து கொண்டிருந்தபோது ஓர் இளைஞன் என்னை இடிப்பதுபோல மிக அருகில் வந்து ‘நீங்கள் ரொம்ப அழகா இருக்கீங்க’ என்று சொல்லி ஒன்றுமே நடக்காததுபோல நகர்ந்து சென்றான்” என்று சொல்லிவிட்டு “40 வயதான எனக்கே இந்த நிலை என்றால் உங்களுக்கும் இதே நிலை ஏற்படலாம்… அப்படி ஏற்பட்டால் என்ன செய்வீர்கள்…” என்ற கேள்வியைத்தான் எங்கள் முன் வைத்தார்.
ஒருசிலர் பதில் சொன்னார்கள். இறுதியில் அந்த ஆசிரியர் தான் செய்ததைச் சொன்னார். தைரியமாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
பிசியான தெரு வந்ததும் அந்த இளைஞனை சப்தமாக அழைத்தாராம். அவன் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த சாலையில் சென்றுகொண்டிந்தவர்கள் சலசலப்புடன் என்ன என்று வேடிக்கைப் பார்க்கத் தொடங்க அந்த இளைஞன் அந்த ஆசிரியர் அருகில் வந்து கொஞ்சமும் எதிர்பார்க்காதவாறு ‘சாரி டீச்சர்… தெரியாம பேசிட்டேன்’ என்று சொல்லிவிட்டு வேகமாக நகர்ந்து சென்றுவிட்டானாம்.
இதுபோன்ற உண்மை சம்பவங்கள் சொல்லித்தரும் பாடங்கள் வாழ்க்கையில் எப்போதாவது கைக்கொடுக்கும்.
உளவியல், தன்னம்பிக்கை, வாழ்வியல் சார்ந்த உங்கள் எழுத்துக்களை படிப்பவர்களிடம் ஏதேனும் மாற்றம் உண்டாகி இருக்கிறதா என்று நிறைய பேர் என்னிடம் கேட்கிறார்கள்.
ஒன்றை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். படிப்பவர்கள் அனைவரும் அதை பின்பற்றுவார்கள் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. பின்பற்றித்தான் ஆக வேண்டும் என்கின்ற கட்டாயமும் இல்லை. அதற்கு அவசியமும் இல்லை. யாரையும் மாற்றுவதற்காகவும் என் கருத்துக்களை திணிப்பதற்காகவும் நான் எழுதுவதில்லை. என்றேனும் யாருக்கேனும் எப்போதேனும் பயன்படலாம். அவ்வளவுதான்.
இரண்டு மூன்று பட்டங்கள் பெற்று ஆராய்ச்சிகள் பல செய்து முனைவர் பட்டம் பெற்றவர்களில்கூட ‘ஒருசிலர்’ படிப்பறிவே இல்லாதவர்களைவிட தரம் தாழ்ந்து நடந்துகொள்வது எதனால். கற்ற கல்வியும் படித்த புத்தகங்களும் அவர்களின் அகக்கண்களை திறந்திருக்க வேண்டுமே. உள்ளத்தூய்மையை ஏற்படுத்தி இருக்க வேண்டுமே. அப்படி செய்யாமல் அவர்களின் படிப்பும் பட்டமும் நல்ல வேலையில் அமரவும், லட்சங்களில் சம்பாதிக்கவும், திருமணம் குழந்தைகள் என வாழ்க்கையில் செட்டில் ஆகவும் மட்டுமே உதவுவதை நாம் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
ஒரு ஆட்டோ டிரைவர் தன் வண்டியில் பயணம் செய்த இரண்டு இளைஞர்களிடம், சாலையில் சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணைப் பற்றி அவர்கள் தரக்குறைவாக பேச ஆரம்பித்தபோது ‘படிச்சவங்களா நடந்துக்கோங்கப்பா…’ என்று அறிவுரை சொன்னார். ‘இதோ பாருடா, படிச்சுட்டா ஜாலியா இருக்கக் கூடாதா…’ என்று கிண்டல் செய்ய ‘மத்தவங்கள புண்படுத்தாம பேசுங்க, அடுத்தவங்கள கஷ்டப்படுத்தாம ஜாலியா இருங்க… இதச் சொல்லிக்கொடுக்காம உங்க காலேஜ்ல என்ன சொல்லித்தராங்க…’ என்று பொறுமையாகச் சொல்லிக்கொண்டே வந்தார்.
எங்கள் நிறுவனத்தை சுத்தம் செய்யும் பெண்ணின் கணவர் ஆட்டோ டிரைவர். ஒருமுறை அந்தப் பெண் என்னிடம் இதை பகிர்ந்துகொண்டார்.
தங்களிடம் உள்ள குறைகளை அல்லது பிரச்சனைகளை நன்கறிந்தவர்கள், அதில் இருந்து மீள வேண்டும் என நினைப்பவர்கள், அதற்கான வழிகளை தேடுபவர்கள் கண்களில் நம் எழுத்துக்கள்படும்போது, அவர்கள் அதை உள்வாங்கி வாசிக்கும்போது, அது குறித்து அவர்கள் சிந்திக்கும்போது, அவர்கள் பிரச்சனைகளுடன் நம் எழுத்து மேட்ச் ஆகும்போது நம் எழுத்து அவர்களிடம் மாற்றத்தைக் கொண்டுவரும். அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பிரச்சனைகளும் தீர்வுகளும் Match the following போல இரண்டு பக்கமும் வரிசைகட்டிக்கொண்டு நிற்கும். நாம்தான் நம் பிரச்சனை என்ன என்று புரிந்துகொண்டு அதற்கான தீர்வுக்கு பொருத்திப் பார்த்து நம் வாழ்க்கையை செப்பனிட்டு சரிசெய்து ஓரிடத்தில் தேங்கிவிடாமல் கடந்து சென்றுகொண்டே இருக்க வேண்டும்.
தினந்தோறும் பல பள்ளிகளில் என்னுடைய இந்த நாள் இனிய நாள் பதிவுகளும், ஹலோ With காம்கேர் பதிவுகளும் 10 நிமிடங்கள் கற்பிக்கப்படுகின்றன. மாணவர்கள் மனதில் பதிவாகும் இந்த விஷயங்கள் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு அவர்களாகவே நல்ல முடிவுகளை எடுக்க உதவி செய்யலாம்.
இவ்வளவுதான் எழுத்தினால் ஆகக் கூடியது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
#ஹலோ_காம்கேர் #Hello_Compcare