ஹலோ With காம்கேர் -109: ஆரோக்கியத் தன்னம்பிக்கை பெற என்ன செய்யலாம்?

ஹலோ with காம்கேர் – 109
April 18, 2020

கேள்வி: ஆரோக்கியத் தன்னம்பிக்கை பெற என்ன செய்யலாம்?

உலக நாடுகள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு பெரிய அளவில் உயிரிழப்புகளை சந்தித்துக்கொண்டிருக்கும்போது நம் இந்தியாவில் மட்டும் குறைந்த அளவு உயிரிழப்புகளும் நோய் பெருமளவில் பரவாமலும் இருப்பதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

ஒன்று, சரியான நேரத்தில் ஊரடங்கை இந்தியா முழுவதும் அமல்படுத்தியது. இரண்டாவது அடிப்படையிலேயே நம் உணவு பழக்க வழக்கங்களினால் நம்மிடம் இயற்கையாகவே உள்ள நோய் எதிர்ப்பு சக்தி.

மஞ்சள் காமாலை அம்மை போன்றவை வந்து சரியான பிறகு நம் பெரியோர்கள், ‘இனிதான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நோய் திரும்பிடக் கூடாது…’ என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்போம். அப்படி திரும்பவும் வந்தால் அதன் தீவிரம் அதிகமாகும் என்பதால் நோய் சரியான பிறகும் கவனமாக இருக்க வலியுறுத்துவார்கள்.

அப்படித்தான் கொரோனா காலத்துக்குப் பிறகும் இப்போது நாம் பின்பற்றும் சுத்தம், சுகாதாரம், நோய் எதிர்ப்பு சக்திக்காக நாம் எடுத்துக்கொள்ளும் இயற்கை உணவுவகைகள் போன்றவற்றை அப்படியே தொடர வேண்டும்.

எப்போதுமே வெளியே சென்றுவிட்டு வீட்டுக்குள் நுழையும்போது கைகால் கழுவுதல், சாப்பாடும் பதார்த்தங்களை கைகளால் தொடுவதற்கு முன்னர் கைகளை அலம்புதல், கடைகளில் இருந்து சாமான் வாங்கி வந்தால் அவற்றை நன்றாக ஈரத்துணி வைத்து துடைத்து எடுத்து வைத்தல், காய்கறி பழங்களை நன்றாக அலம்பிவிட்டு சாப்பிடுதல் போன்ற பழக்கங்கள் நமக்கு புதிதல்ல. காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றியவைதான். ஆனால் நகரமயமாதலினாலும் மேற்கத்திய நாகரிகத்துக்கு இளைஞர்கள் நகர்ந்ததாலும் வீடுகளில் பெரியோர்களில்கூட பலரும் இதுபோன்ற பழக்க வழக்கங்களை கைவிட்டுவிட்டார்கள். இனியாவது அவற்றை தொடர்வோம்.

அடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டிக்கொள்ள எளிமையான வழிமுறைகளை சொல்கிறேன். அலுவலகம் செல்பவராக இருந்தாலும் பிசினஸ் செய்பவராக இருந்தாலும் பின்பற்றக் கூடியவைதான். இவற்றை நான் பல வருடங்களாக பின்பற்றி வருகிறேன்.

தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். மூன்று வேளையும் சாப்பாட்டின்போது சிலவற்றை கொஞ்சம் மெனக்கெட்டு பின்பற்றினால் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். வீட்டிலேயே இவற்றை தயாரிக்கலாம்.

காலையில் டிபன் சாப்பிடும் முன்னர் கொஞ்சம் ஊற வைத்த வெந்தயம், கைப்பிடி கருவேப்பிலை, கொத்துமல்லி, புதியனா, இஞ்சி இவற்றை மிக்ஸியில் அரைத்து கரைத்த நீர்மோரில் கலந்து ஒரு டம்ளர் சாப்பிடலாம்.

மதியம் சாப்பாட்டில் குக்கரில் வேக வைத்த முழு நெல்லிக்காயை சேர்த்துக்கொள்ளலாம்.

இரவு சாப்பிட்டு தூங்கச் செல்லும் முன்னர் ஜீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், ஓமம், சப்பாட்டு மஞ்சள், கடுக்காய் போன்றவற்றை லேசாக வறுத்து பொடி செய்து வைத்ததை சூடான் வெந்நீரில் கலந்து ஒரு டம்ளர் குடிக்கலாம்.

காலையில் காபி டீ சாப்பிடும் முன்னர் அதே அளவுக்கு தண்ணீர் சாப்பிடலாம். ஒவ்வொரு வேளையும் சாப்பிடுவதற்கு அரைமணி முன்னதாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கலாம். வாய்ப்பிருப்பவர்கள் வெதுவெதுப்பாக வெந்நீர் குடிக்காலாம்.

தினமும் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடுவதையும், 15 நிமிடங்களாவது வாக்கிங் செல்வதையும் வழக்கமாக்கிக்கொள்ளலாம்.

வார விடுமுறை தினங்களில்…

11 மணிக்கு டீ சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் வார விடுமுறை தினங்களில் அதற்கு பதிலாக கொஞ்சமாக சர்க்கரையும் உப்பும் கலந்த இஞ்சி எலுமிச்சைப்பழ ஜூஸ் செய்து சாப்பிடலாம்.

சுக்கு, மிளகு, திப்பிலி இந்த மூன்றையும் அரைத்தால் கிடைக்கும் திருகடுகம் பொடியை வார விடுமுறை தினங்களில் காலையில் டிபன் சாப்பிட்டப் பின்னர் தேனில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிடலாம்.

காய்ந்த வேப்பம்பூ, சுண்டைக்காய் வத்தல், மணத்தத்தக்காளி வத்தல், மிளகு இவற்றுடன் உளுத்தம் பருப்பு சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால் கிடைக்கும் அங்காயப் பொடியை வார விடுமுறை தினங்களில் மதிய சாப்பாட்டில் ஒருபிடி சாதத்துடன் கலந்து நெய்விட்டு சாப்பிட்ட பிறகு மற்ற ஐட்டங்களை சாப்பிடலாம்.

விருந்துக்குச் செல்லும்போது…

எங்கேயேனும் விருந்து விசேஷங்களில் சாப்பிடச் சென்றால் மிளகை பொடி செய்து எடுத்துச் செல்லுங்கள். சாப்பிடும் முன்னர் அந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு சாப்பாட்டை சாப்பிட்டால் அதில் ஏதேனும் நம் உடம்புக்கு ஒத்துக்கொள்ளாதவை இருந்தால் அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மாதம் ஒருமுறை…

மாதம் ஒருமுறை சாப்பிட்டாமல் விரதமும், பேசாமல் மவுன விரதமும் இருக்கலாம். கூடுதலாக ஒவ்வொரு ஞாயிறும் வாட்ஸ் அப் பார்க்காமல் இருக்கும் டெக் விரதமும் கடைபிடிக்கலாமே.

மாதா மாதம் பொடி செய்ய வேண்டியவற்றை பொடி செய்து வைத்துக்கொள்ளலாம். நாட்டு மருந்துக் கடைகளிலும் ரெடிமேட் பொடிகள் கிடைக்கின்றன.

இவற்றை பின்பற்றினால் சாதாரண காய்ச்சல் சளி உடம்பு வலி இவற்றுக்கெல்லாம் மருத்துவமனை செல்வதைத் தவிர்க்கலாம்.

நோய் வரவே வராதா?

இதையெல்லாம் செய்தால் நோய் வரவே வராதா என்று நீங்கள் நினைக்கலாம்.

நன்றாக கவனித்துப் பாருங்கள். ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்படும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆஞ்சியோ / பைபாஸ் செய்து கூடுதலாக இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் வாழ்கிறார்கள். ஆனால் 35, 40 வயதுகளில் ஹார்ட் அட்டாக் வருபவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிடுவதற்கு மிக முக்கியக் காரணம் அவர்களின் உணவு பழக்க வழக்கங்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடும்தான்.

நோய் எதிர்ப்பு சக்தியைக் கூட்டிக்கொண்டுவிட்டால் நம்மை அண்டும் நோய்களை எதிர்த்துப் போராடும் வலிமை நமக்குக் கிடைத்துவிடும். மற்றபடி நோயே வராது என்றெல்லாம் சொல்வதற்கில்லை.

இப்படியெல்லாம் செய்வதற்கு எங்கு நேரம் இருக்கிறது என்று சொல்பவர்களுக்கு ஒரு விஷயத்தை சொல்லிக்கொள்கிறேன்.

40 வயதுக்குள் பிபி, ஷூகர் வந்து அதற்கான மாத்திரைகளை சரியான நேரத்துக்கு எடுத்துக்கொள்ளும் பலரை நித்தம் நாம் சந்திக்கத்தானே செய்கிறோம். அலுவலகத்தில் கூட அந்தந்த நேரத்துக்கு இன்சுலின் எடுத்துக்கொள்பவர்களையும், மருந்து மாத்திரை சாப்பிடுபவர்களையும் பார்த்துக்கொண்டுதானே உள்ளோம். மருந்து மாத்திரை சாப்பிடுவதைப் போலதானே நான் சொல்லியுள்ள இயற்கை வழிமுறைகள்.

வரும்முன் காப்போமே! ஆரோக்கியத் தன்னம்பிக்கைப் பெறுவோமே!!!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 36 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon