ஹலோ With காம்கேர் -112: நமக்குப் பிடிப்பவர்களுக்கு நம்மைப் பிடிக்குமா?

ஹலோ with காம்கேர் – 112
April 21, 2020

கேள்வி:  நமக்குப் பிடிப்பவர்களுக்கு நம்மைப் பிடிக்குமா?

வாழ்க்கை ஒரு மைதானம். நாம் எல்லோரும் விளையாட்டு வீரர்கள். வாழ்க்கை எப்படி நம்மை விளையாடப் பழக்குகிறது என்பது விசித்திரமாகவே உள்ளது.

நமக்குப் பிடிக்கும் எல்லோருக்கும் நம்மையும் பிடிக்கும் என நினைத்து எல்லா விஷயங்களையும் உளறிக்கொட்டுவோம். பல விஷயங்களை ஒளிவு மறைவு இல்லாமல் பகிர்ந்துகொள்வோம். ஆனால்  நமக்குப் பிடிப்பவர்களுக்கு நம்மைப் பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என நாம்  உணரும்போது நம் வாழ்நாளின் பாதி தூரத்தைக் கடந்திருப்போம். நாம் பிறருக்கு அந்த ஞானத்தை உபதேசிக்க ஆரம்பித்திருப்போம்.  That is game of life.

பெரிய பெரிய விஷயங்களில் கவனமாக இருந்துவிட்டு சின்ன சின்ன விஷயங்களில் கோட்டைவிட்டு பெரிய அளவில் இழப்பை சந்தித்திருப்போம். That is game of life.

நன்றாக சென்றுகொண்டிருக்கும் நட்பில் எங்கேயேனும் ஓரிடத்தில் அவர்களின் ஈகோவை அல்லது அவர்களின் பர்சனல் ஸ்பேஸை டச் செய்து வெறுப்பை சம்பாதித்துக்கொண்டிருப்போம். அதை அவர்களாக சொல்ல மாட்டார்கள். நாமாகவும் தெரிந்துகொள்ளவும் வாய்ப்பிருக்காது. காரணமே இன்றி நம்மை விட்டு அவர்கள் விலகுவதாக உணர்வோம். ஆனால் நம்மீது தவறே இல்லாதவாறு ‘என்னுடைய வளர்ச்சியினால் அவருக்குப் பொறாமை’ என்று அவர் மீதே பழி போடுவோம். That is game of life.

ஒருவரின் அனுபவத்துக்கோ அல்லது  திறமைக்கோ மரியாதைக் கொடுத்து அவரிடம் எப்போதேனும் நாம் கேட்கும் மிகச் சிறிய ஆலோசனைகளைக் கூட ஏதோ பெரிய அளவில் நமக்கு கவுன்சிலிங் கொடுத்திருப்பதைப் போல அவர் பிறரிடம் டமாரம் அடித்துக்கொண்டிருப்பதை கேள்விப்படும்போது ஒரு உணர்வு வரும் பாருங்கள். அதை விவரிக்க வார்த்தை கிடையாது. That is game of life.

’இவள்(ன்) ரொம்ப சாஃப்ட்’, ‘இவளு(னு)க்கு ரொம்ப கோபம் வரும்’, ‘இவள்(ன்) ரொம்ப ஜாலியான டைப்’ என நம் இயல்புக்கு மாறாக நம்மீது பிறர் வைக்கும் நம்பிக்கைகள் நாளடைவில் ‘இப்படி இருந்தால்தான் நம் மீது கவனம் வருமோ’ என நாமே நம்பத் தொடங்கிவிடுவோம். நம்முடைய பிரயத்தனம் இன்றி நம் இயல்பு ஒன்றாகவும், பிறரிடம் நடந்துகொள்ளும் விதம் ஒன்றாகவும் மாறியிருக்கும். That is game of life.

நம் பெற்றோர் நம்மிடம் காண்பிக்கும் அன்பும் அரவணைப்பும் நமக்கு சங்கிலி போட்டு பூட்டி கொடுமைப்படுத்துவதைப் போல இருக்கும். ஆனால் அதனால்தான் நாம் பாதுகாப்பாக இருக்கிறோம் / இருந்திருக்கிறோம் என்ற உண்மையை உணரும்போது காலம் கடந்திருக்கும். அந்த உண்மையை மன விட்டுச் சொல்லி நம் அன்பையும் நன்றியையும் அவர்களிடம் சொல்லக் கூட அவர்கள் காத்திருக்க மாட்டார்கள். அவர்கள் வாழ்நாள் முடிந்திருக்கும். That is game of life.

வாழ்க்கையில் சரியான நேரத்தில் நாம் எடுக்காத தீர்மானங்களுக்கும் முடிவுகளுக்கும் நாம் வாழ்நாள் முழுவதும் வருத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். இந்த உண்மையை வாழ்நாள் முழுவதும் நாம் அனுபவிப்பதுதான் கொடுமை. That is game of life.

நாம் மிகவும் முயற்சி செய்து  மிகச் சரியாக செய்த சில விஷயங்கள்கூட நம் கட்டுப்பாட்டையும் மீறி  பிறரது தவறான புரிதல்களால் சொதப்பிவிடும். எத்தனை முயற்சி செய்து புரிய வைத்தாலும் அந்த விஷயத்தை நேர் செய்யவே முடியாது. அந்த நேரத்தில் இறைநம்பிக்கை உள்ள  நம்மில் பலர் இறைவனிடம் ‘கடவுளே, நான் என்ன நினைத்துக்கொண்டு அந்த செயலை ஆரம்பித்தேன். அது உனக்கு நன்றாகத் தெரியும். அதுபோதும் எனக்கு. மற்றவர்களைப் பற்றி எனக்குக் கவலையில்லை’ என்று புலம்பி இருப்போம்.   That is game of life.

வாழ்க்கை விசித்திரமானது. இதுபோல பல விளையாட்டுகளை வாழ்க்கை நம்மை கட்டாயப்படுத்தி விளையாட வைக்கும். ஜெயிக்கிறோமா தோற்கிறோமா அது பிரச்சனையில்லை. பிடிக்கிறதோ இல்லையோ விளையாடியே ஆக வேண்டும்.

விளையாடித்தான் பார்ப்போமே!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 42 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon