ஹலோ with காம்கேர் – 136
May 15, 2020
கேள்வி: ‘நானும் ரவுடிதான்’ – இந்த இமேஜ் தேவைதானா?
பொதுவாகவே நம் எல்லோருக்குமே இந்த இரண்டு முகங்கள் இருக்கும். வீட்டுக்கு உள்ளே. வீட்டுக்கு வெளியே. ஆனால், இன்று நம்மில் பெரும்பாலானோருக்கு இரண்டு முகங்கள் போதுமானதாக இல்லை. அவரவர்களின் இயல்புக்கும் செளகர்யத்துக்கும் தேவைக்கும் ஏற்ப வெர்ச்சுவலாக பல முகங்களை உருவாக்கிக்கொள்கிறோம்.
சூழலுக்கேற்ப முகத்தை மாற்றிக்கொண்டு செயல்பட வேண்டியுள்ளதால் அதற்கேற்ப உணர்வின் மாற்றங்களை நம் மனதிலும், உடலிலும் ஏற்படுத்தும். விளைவு அழையா விருந்தாளியாய் நோய்கள்.
அவரவர் தேவைக்கு ஏற்ப முகமூடிகளை உருவாக்கிக்கொள்ளும்போது தானாகவே அதற்கேற்ப இமேஜும் உருவாகிவிடுவது இயற்கைதானே.
நம் ஒவ்வொருவருக்கும் ஒரு இமேஜ் இருக்கும். அவர் நல்லவர், இவர் கெட்டவர், அவர் சமூகப் போராளி, இவர் பெண்ணியவாதி, அவர் வல்லவர், இவர் சூப்பர் மேன் என அவரவர் பணி சார்ந்தும், பொதுவெளியில் செயல்படுவதில் இருந்தும் இமேஜ்கள் கட்டமைக்கப்படும்.
சமூகவலைதளங்கள் எல்லாம் இப்போது சில வருடங்களாகத்தானே. இவையெல்லாம் வருவதற்கு முன்பே தொழில்நுட்பத் துவக்கத்தில் இருந்த நம் நாட்டில்(1995) இன்டர்நெட்டின் ஆகச் சிறந்த வசதியாக இருந்த இமெயிலையே பிறரது இமேஜை கட்டுடைக்கப் பயன்படுத்தி வந்தனர் நம் மக்கள். தங்களுக்குப் பிடிக்காதவர்களை பற்றி பலருக்கும் அவர் குறித்த தவறான செய்திகளைப் பரப்புவதற்கு இமெயிலைப் பயன்படுத்தினார்கள்.
நம் மக்கள் சமர்த்தர்கள். எது இருக்கிறதோ அதைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். அது சரியான நோக்கத்துக்காக இருந்தாலும் சரி, தவறான நோக்கத்துக்காக இருந்தாலும் சரி.
ஒருசிலர் தங்களுக்கான இமேஜை வடிவமைத்துக்கொள்ள ரொம்பவே பிரயத்தனப்படுவார்கள். ஒருசிலருக்கு இமேஜ் என்பது அவர்களை அறியாமல் தானாகவே உருவாகிவிடுவதும் உண்டு.
இன்னும் ஒரு சிலர் ‘நானும் ரவுடிதான்’ என போலியான இமேஜை உருவாக்கிக்கொண்டு திண்டாடுவார்கள்.
ஒருவரது இமேஜை கட்டுடைப்பது சமூக வலைதளங்களால் எளிதாகிவிடுகிறது, இது ஆரோக்கியமானதா ஆபத்தானதா என்ற ஆராய்ச்சிக்கு முன் நம் மீதான இமேஜ் நம் வளர்ச்சிக்கு உதவுகிறதா அல்லது இடையூராக இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
என்னிடம் நிறைய பேர், ‘மேடம் உங்கள் வாழ்க்கையே சர்வீஸாக அமைந்துவிட்டதே… யு ஆர் கிரேட்’ என்றெல்லாம் சொல்வார்கள்.
அவர்களுக்கெல்லாம் நான் சொல்லும் ஒரே பதில் இதுதான்:
‘நாம் செய்கின்ற செயல்களை ஆத்மார்த்தமாக முழுமையான ஈடுபாட்டுடன் செய்யும்போது அந்த செயல்கள் தானாகவே தெய்வீகத்தன்மை அடைந்துவிடுகிறது. அந்த செயல்களை நாம் முழுமையான சேவைக்கான நோக்கமாக செய்யாவிட்டால்கூட நம் சுயதேவைகளுக்கும் மீறி இந்த சமுதாயத்துக்கும் பயன்படும் வகையில் அதன் பயன்பாடுகள் தானாகவே தன் சிறகை விரித்துக்கொள்ளும். அவ்வளவுதான். நான் என் பணிகளை சரியான பாதையில் சென்று நேர்மையான முறையில் முழுமையான அர்பணிப்புடன் செய்வதால் என் பணிகள் என் தேவைகளையும் தாண்டி இந்த சமூகத்துக்கும் பயனளிக்கும் வகையில் அவதாரம் எடுக்கிறது’
நம் ஒவ்வொருக்குமான இமேஜ் இப்படித்தான் உருவாகிறது.
தனக்கென ஒரு நல்ல இமேஜை கட்டமைத்துக்கொண்டு வாழத் தொடங்கும்போது நம் அடிப்படை இயல்பு அந்த இமேஜூக்கு முரணாக இருந்தாலும் நாம் கட்டமைக்கும் இமேஜ் நம்மை நல்வழிப்படுத்த வாய்ப்புகள் உண்டு.
மாறாக நம் இயல்பு ஒன்று, இமேஜ் ஒன்றாக வைத்துக்கொண்டு இரட்டை முகத்துடன் வலம் வரும்போதுதான் சிக்கல் உருவாகிறது. நான் ஆரம்பத்தில் குறிப்பிட்டதைப் போல முகமூடிகள் அதிகம் ஆகும்போது இமேஜ்களும் அதிகரிக்கும். எந்த இடத்தில் எந்த இமேஜை வெளிப்படுத்த வேண்டும் என்ற உணர்வு ரீதியான சிக்கல் உருவாகும். நமக்குள்ளேயே குழப்பம் உண்டாகும்போது நம் இமேஜை கட்டுடைப்பதற்கு சமூகவலைதளங்களுக்கு வெல்லம் சாப்பிடுவதைப் போல.
முகமூடிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொள்ளும்போது இமேஜ்களின் எண்ணிக்கையும் குறையும். மன ரீதியான ஆரோக்கியம் கிடைக்கும். தொடர்ச்சியாக உடல் நலனும் மேம்படும்.
இமேஜ்களை கட்டுடைப்பது சமூக வலைதளங்களால் எளிதாகி விடுகிறது. இது ஆரோக்கியமானதா, ஆபத்தானாதா என்ற கேள்விக்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றால் ஆரோக்கியமானதுதான் என்பேன்.
இமேஜ்கள் மூலம் நல்லவர் வேஷம் போடும் வேஷதாரிகளிடம் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள உதவும். உண்மையிலேயே நல்லவராக இருந்து உத்தமர் பட்டம் பெற்றவர்களின் இமேஜ் சமூக வலைதளங்கள் கட்டுடைக்கப்படும்போது கொஞ்சம் வேதனையாகத் தான் இருக்கும்.
நேரடியாக வாழ்ந்துகொண்டிருக்கும் நிஜ உலகிலும் சரியான செயல்கள் நேர்மையான செயல்பாடுகள் எல்லாம் வெற்றியடைகின்றனவா என்ன? அவற்றுக்குத்தான் இடையூறுகள் அதிகம். எப்படி அந்த இடையூறுகளை தகர்த்து நல்லவை முன்னேறுகின்றனவோ அப்படித்தான் சமூக வலைதளங்கள் கொடுக்கும் இடையூறுகளையும் வெற்றிக்கொள்ள வேண்டும்.
நல்லவற்றுக்கான பாதையில் பூக்கள் தூவப்பட்டிருக்காது. பூக்களுடன் சேர்ந்து முட்களும் இறைந்து கிடக்கும். அவற்றை ஒதுக்கித்தள்ளித்தான் முன்னேற வேண்டியிருக்கும்.
வீடாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி. இதே லாஜிக்தான்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
பிம்பங்களைக் கட்டுடைப்பது
சமூக வலைதளங்களால் எளிதாகி விடுகிறது. இது ஆரோக்கியமானதா, ஆபத்தானாதா?
இன்றையப் பதிவுக்கான இந்தக் கேள்வியைக் கேட்டவர் @ உயர்திரு த. க. தமிழ் பாரதன்