#கதை: ஹலோ With காம்கேர் -135: அம்மா மன்னிப்பாளா?

ஹலோ with காம்கேர் – 135
May 14, 2020

கேள்வி: அம்மா மன்னிப்பாளா?

நான் மஹாதேவன்.

குற்ற உணர்ச்சியால் துடித்துக்கொண்டிருக்கிறேன். அம்மா இறந்துவிட்டாள் என்ற செய்தியை அக்கா போனில் சொன்னதில் இருந்து படபடப்பு, துக்கம், அழுகை இவை எல்லாவற்றையும் மீறிய குற்ற உணர்ச்சி ஆளைக் கொல்கிறது. பிரிண்டிங் பிரஸ்ஸில் இருந்து வீட்டுக்கு வந்து மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துக்கொண்டு கிடைத்த பஸ்ஸில் ஏறி ஊருக்குப் பயணமானேன்.

அம்மா தஞ்சாவூரில் அக்காவுடன் இருக்கிறாள். அம்மாவுக்கு சென்னை பிடிக்கவில்லை. அப்பா இருந்த ஊரிலேயே தானும் தன் கடைசி காலத்தை கழிக்க நினைத்ததால் இந்த ஏற்பாடு.

அழுகை அழுகையாக வந்தது. தான் செய்த ஒரு தவறை திருத்திக்கொள்ளவே முடியாத சூழல். அம்மாவிடம் சொல்லி மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என அவ்வப்பொழுது நினைத்துக்கொள்வேன். ஆனால் என்ன அவசரமோ போய் சேர்ந்துவிட்டாள்.

குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என திரும்பிப் பார்த்தேன். மனைவியின் மடியில் ஒருவனும், தோளில் ஒருத்தியுமாக சாய்ந்துகொண்டு சமர்த்தாக வந்தார்கள். அப்பா சோகத்தில் இருக்கிறார். அவரை தொந்திரவு செய்யக் கூடாது என நினைத்திருப்பார்கள் போல.

எப்போதில் இருந்து இந்த குற்ற உணர்ச்சி ஆரம்பமானது என மனம் தானாகவே அசை போடத் தொடங்கியது.

அம்மா பத்தாவதுதான் படித்திருக்கிறாள். ஆனால் அறிவாளி. நாட்டு நடப்புகள், அரசியல் என எந்த சப்ஜெக்ட் குறித்தும் ஆணித்தரமாக அலசுவாள். எப்போதும் ஏதேனும் படித்துக்கொண்டே இருப்பாள். சாப்பிடும்போதுகூட ஒரு கையில் புத்தகம் இருக்கும். வாசித்தபடிதான் சாப்பாடு, வாசித்தபடிதான் டீ, காபி எல்லாமே.

அம்மா இருக்கும் இடத்தில் பத்திரிகைகள், புத்தகங்கள், மாத வார இதழ்கள் என இறைந்து கிடக்கும். தூங்கும்போது அவளைச் சுற்றி புத்தகங்கள்தான் ஒழுங்கில்லாமல் விஸ்ராந்தியாக பரவிக் கிடக்கும்.

அப்பா ரொம்ப பொறுமைசாலி. அம்மாவின் படிப்பார்வதுக்கு தன்னால் இயன்றதை எல்லாம் செய்வார். அப்பா ஒரு பதிப்பகத்தில் பேக்கிங் செக்‌ஷனில் வேலை செய்து வந்தார். அங்கு பதிப்பாளர் அன்பளிப்பாக வரும் சில புத்தகங்களை கடையில் எடைக்கு எடை போட்டு விடுவாராம். அதை அவரிடம் அனுமதி பெற்று கேட்டு எடுத்து வருவார்.

காலையில் அம்மா படிப்பதற்காகவே செய்தித்தாள் வாங்கிவருவார். அப்பாதான் காபி போட்டுக் கொடுப்பார். செய்தித்தாள் படித்துவிட்டுதான் சமையல் அறைக்குள்ளேயே செல்வாள்.

அவள் பாட்டி காலத்து புத்தகங்கள், பத்திரிகை செய்திகள் போன்றவற்றைக்கூட கை பைண்டிங் செய்து வைத்திருப்பாள்.

எனக்கு  புத்தக ஆர்வமே இல்லை. அக்காதான் அம்மாவின் நேர் வாரிசு. அவள் அம்மாவைப் போலவே சாப்பிடும்போது புத்தகங்கள் படித்தால் அப்பா ரொம்பப் பெருமையாக ‘அடுத்த வாரிசு உருவாகிறது’ என பெருமையாகச் சொல்வார்.

நாங்கள் வசிக்கின்ற வீடு ஒரு சமையல் அறை ஒரு ஹால் உள்ள மிகச் சிறிய வீடு. அதில் அம்மா சேகரித்த புத்தகங்களே பெரும்பாலான இடத்தை எடுத்துக்கொள்ளும். எனக்கு அந்த புத்தகங்களைப் பார்த்தாலே எரிச்சலாக வரும். பல நேரங்களில் இரவில் தலையணைக்கு பதில் அந்தப் புத்தகங்களில் ஒன்றை உருவி தலைக்குத் தலையணையாக வைத்துக்கொள்வேன். வாயில் இருந்து ஜொல் ஒழுகி புத்தகங்கள் ஈரமாகி இருக்கும். அம்மா கோபப்பட மாட்டாள். அதை தன் முந்தானையால் துடைத்து வைப்பாள்.

வாடகையை ஏற்றும்போதெல்லாம் நாங்கள் வீடு மாற வேண்டி இருக்கும். என் வாழ்க்கையில் இளம் வயதில் அதிகப்படியாய் நடந்த ஒரு விஷயம் வீடு மாறுதல். ஒவ்வொரு முறை வீடு மாறும்போதும் அம்மாவின் புத்தகங்களை பத்திரப்படுத்தி எடுத்துச் செல்வதே அப்பாவின் பெரும்பாடாக இருக்கும். அப்பா இன்முகத்துடன்தான் செய்வார். ஆனால் எனக்குத்தான் ஆத்திரம் ஆத்திரமாக வரும். வீடு மாற்றும் சிரமம் ஒருபுறம். அம்மாவின் புத்தக குப்பைகள் (என் மனதில் அவளுடைய பொக்கிஷங்களுக்கு வைத்திருந்த பெயர் இதுதான்) மறுபுறம்.

அம்மாவுக்கு நான் ஒரு துரோகம் செய்துவிட்டேன். அது அவ்வப்பொழுது என்னை குற்ற உணர்ச்சியால் கொன்றுகொண்டே இருந்தது. காரணம் நான் பிரஸ்ஸில் வேலை பார்க்கத் தொடங்கிய போது அந்த ஞானோதயம் உண்டானது. அங்கு பலரும் தங்கள் வீட்டில் உள்ள பழைய புத்தகங்களை பைண்டிங் செய்ய வருவார்கள். அந்தப் புத்தகங்கள் உதிர்ந்து விடுமோ என்ற நிலையில் பழசாக இருக்கும். ஆனாலும் அவர்கள் அவை குறித்து சிலாகித்துப் பேசுவார்கள்.

ஒரு முறை ஒரு பெரியவர் அவருக்கே 60, 65 வயதிருக்கும். அவருடைய அம்மாவின் பிறந்தநாளுக்கு அவர் காலத்து எழுத்தாளர்கள் எழுதிய கதைகளின் பத்திரிகை சேகரிப்புகள் சிலவற்றை எடுத்து வந்து பைண்டிங் செய்து எடுத்துக்கொண்டு போனார்.

‘ஏன் சார். இதெல்லாம் இப்போது புத்தகமாகவே வந்துள்ளனவே அதை வாங்கிக்கொடுக்கலாமே’ என்று சொன்னபோது ‘என் அம்மா தன் கைகளால் சேகரித்தவற்றை புத்தகமாக்கிக் கொடுக்கும்போதுதான் அவர் மகிழ்ச்சி அடைவார்’ என்று பதில் சொன்னார். அவர் அம்மாவின் பிறந்த நாளுக்கு ஏழெட்டு புத்தகங்களை பைண்டிங் செய்து எடுத்துப்போனார். 65 வயது 90 வயதுக்கு ஆத்மார்த்தாக ஒரு பரிசை தயார் செய்துகொண்டு போன நிகழ்வு எனக்குள் ஏதோ ஒரு மாற்றத்தை உண்டு செய்தது.

அன்றுதான் குற்ற உணர்ச்சி ஆரம்பமானது. ஒவ்வொரு முறையும் ஊருக்குச் செல்லும்போதெல்லாம் ‘இந்த முறை அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட வேண்டும் என’ நினைத்துக்கொள்வேன். ஆனால் ஏதோ ஒரு ஈகோ தடுத்துவிடும்.

வாசல் திண்ணையில் கண்களை இடுக்கிக்கொண்டு புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பிவிடுவேன்.

இந்த முறை அந்த நிகழ்வுக்கும் வாய்ப்பில்லை. திண்ணை காலியாக இருக்கும். அழுக்கையை அடக்கவில்லை. கண்ணீரையும் துடைக்கவில்லை.

அக்காதான் ஓடிவந்து அணைத்துக்கொண்டு அழுதாள். அம்மாவின் கால்களை சில நிமிடங்கள் பிடித்துக்கொண்டு அழுதேன். இப்போதும் வீட்டின் மூலைகளில் ஆங்காங்கே புத்தகங்கள், பத்திரிகையின் பக்கங்கள் என சிதறிக்கிடந்தன.

இந்த முறை எந்த ஈகோவும் இல்லை. மானசீகமாக அவளிடம் நடந்த உண்மைகளைச் சொன்னேன்.

ஒரு முறை வீடு மாறும் போது புத்தகங்களை பெட்டி பெட்டியாக நான் தான் கட்டினேன். வேனில் அவற்றை கொண்டு செல்லும்போது நடுவில் வந்த ஒரு பழைய புத்தகக் கடையில் இரண்டு பெட்டிகளை இறக்கி எடைக்கு எடை போட்டுவிட்டேன். புது வீட்டுக்கு வந்ததும் நான்தான் புத்தகங்களை அடுக்கி வைத்தேன். அம்மா ‘என்னடா புத்தகங்கள் குறைவாக இருப்பதைப் போல உள்ளதே’ என சொல்லிக்கொண்டே இருந்தாள். ‘அம்மா, இந்த வீடு கொஞ்சம் பெரிதாக இருப்பதால் அப்படித் தோன்றுகிறது’ என சொல்லி வாயை அடைத்தேன்.

நான் பேசுவதெல்லாம் காதில் விழவே முடியாத தொலைவுக்குச் சென்றுவிட்ட அம்மாவிடம் சொல்லி மன்னிப்புக் கேட்டேன்.

வந்திருந்த ஒரு உறவுக்கார பெண் ஒரு புத்தகத்தில் இருந்து ஒரு பக்கத்தைக் கிழித்து குழந்தை எச்சில் செய்து துப்பியிருந்த சாதத்தை துடைக்கச் செல்லும்போது வெறிகொண்டவனாய் அதைப் பிடுங்கி  திடீரென பெருங்குரல் எடுத்து  ‘அம்மா…’ என கதறத் தொடங்கினேன்.

உண்மை சம்பவத்தை கதையாக எழுதியுள்ளேன். நீங்களே சொல்லுங்கள்,  அம்மா மன்னிப்பாளா மஹாதேவனை? மே 14, 2020 அன்று நான் எழுதிய சிறுகதை.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 1,273 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon