ஹலோ With காம்கேர் -162: இவ்வளவுதான் வாழ்க்கை!

ஹலோ with காம்கேர் – 162
June 10, 2020

கேள்வி:  நமக்கானவர்கள் வரும்வரை உயிரற்ற நம் உடல் கூட காத்திருக்க முடியாது தெரியுமா?

எங்கள் குடும்ப நண்பர். அப்பாவுடன் பணிபுரிந்த என்ஜினியர். வசதியானவர். சென்னையில் பங்களா போன்ற தனி வீடு. சமையலுக்கும், இதர வேலைகளுக்கும் தனித்தனியாக உதவியாட்கள். அத்துடன் வீட்டுடன் இருந்து இருவரையும் கவனித்துக்கொள்ள நம்பிக்கையான பெண்மணி ஒருவரும் இருந்தார். அவர் குடும்பத்துடன் தங்குவதற்கு வீட்டிலேயே அவுட் ஹவுஸ் கட்டிக்கொடுத்திருந்தார்.

ஒரே மகன். அவர் உயரிய பதவியில் வெளிநாட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். மருமகளுக்கும் நல்ல படிப்பு. அருமையான வேலை. ஒரு பேரன் ஒரு பேத்தி. இருவரும் அங்கேயே மருத்துவம், ஆராய்ச்சி என உயர்கல்வி படித்து வருகிறார்கள்.

இவ்வளவு இருந்தும் தலைக்கனம் இல்லாதவர். நல்ல பண்பாளர். அருமையான சிந்தனையாளர். நட்புக்கு இலக்கணமாகத் திகழ்பவர்.

எங்கள் வீட்டு திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் அத்தனைக்கும் மனைவியுடன் வந்து கலந்துகொள்வார்.

நண்பரின் மகனும் அவரது குடும்பமும் வருடம் தவறாமல் சென்னைக்கு வந்து அப்பா அம்மாவுடன் ஒரு மாதம் தங்கிச் செல்வார்கள். தன்னுடன் வந்துவிடச் சொல்லி வற்புறுத்தியும் சென்னையை விட்டு வராமல் அடம்பிடித்ததால் அப்பா அம்மாவின் விருப்பத்துக்கு விட்டுவிட்டார்.

தினமும் போனில் வீடியோகாலில் பேசிவிடுவார். வீடு முழுவதற்கும் கண்காணிப்புக் கேமிராக்கள் அது இது என அத்தனை பாதுகாப்பு விஷயங்களிலும் கவனம் எடுத்து பார்த்துக்கொள்வார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் அப்பா இறந்துவிட அம்மா மட்டும் சென்னையில் அதே வீட்டில் வசித்து வருகிறார். வீட்டை விட்டு விட்டு வெளிநாடு வரமாட்டேன் என்பதில் அப்பாவைவிட அம்மாவுக்கு பிடிவாதம் அதிகம். வேறென்ன செய்ய முடியும். பாதுகாப்பாக இருக்கச் சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்.

நேற்று ஒரு அமெரிக்காவில் இருந்து அப்பாவின் மற்றொரு நண்பர் போன் செய்திருந்தார். அவர் மகனுடன் அங்கேயே செட்டில் ஆகி வசித்துக்கொண்டிருப்பவர்.

பரஸ்பரம் நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு கொரோனா நலனையும் (!?) விசாரித்துக்கொண்டார்கள்.

சென்னை நண்பரின் மனைவி இறந்துவிட்டதாகச் சொன்ன ஒரு தகவலில் அப்பா தடுமாறிப்போனார்.

இறந்தவருக்கு வயது 80+ ஆகிவிட்டது. இறப்பு இயற்கைதான். ஆனால் அப்பா அப்செட் ஆனதுக்கு மிக முக்கியக் காரணம் இறந்த விதம். அதன் பின்னர் நடந்த விஷயங்கள்.

நண்பரின் மனைவிக்கு ஜூரம், இருமல் என உடல்நலம் பாடாய்படுத்த மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார் அவர் வீட்டு அவுட் ஹவுஸில் தங்கி அவரை பர்சனலாக பார்த்துக்கொள்ளும் பெண்மணி. மற்ற பணியாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு கொடுத்திருந்ததால் அவர்கள் யாரும் வீட்டில் இல்லை.

பரிசோதனயில் கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மகனோ வெளிநாட்டில். மருத்துவமனையில் உதவிக்கு இருக்கும் பெண்மணி அவருக்கு வாட்ஸ் அப்பில் தகவல் கொடுத்திருக்கிறார். அவர் அங்கிருந்து மருத்துவமனை அதிகாரிகளுடன் பேசியிருக்கிறார். தான் வர முடியாது என்பதால் என்ன செய்வது என யோசித்து, அங்கிருந்தபடியே சென்னையில் வசிக்கும் தன் சித்தப்பா சித்தியை தொடர்பு கொண்டிருக்கிறார். அவர்கள் மருத்துவமனைக்கு விரைந்திருக்கின்றனர்.

இதற்குள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த அம்மாவுக்கு மூச்சுத் திணறல் அதிகம் ஆகி இறந்துவிட்டிருக்கிறார்.

கொரோனாவினால் இறந்தவர் உடலை சீக்கிரம் அப்புறப்படுத்த வேண்டும் என்பதால் அதை எரிப்பதற்கான ஏற்பாட்டுக்கு மருத்துவமனை ஆலோசனை சொல்லி உதவியிருக்கிறது.

உடலை எரித்தாயிற்று. வீடியோகாலில் அம்மாவின் உடலுக்கு எரியூட்டுவதை மகன் பார்த்து கதறியாயிற்று.

நண்பர் இறந்த பிறகு அதிகம் அவர் குடும்பம் குறித்து அதிகம் வெளியில் தெரியவில்லை. அதனால் அவர் மனைவி இறந்த செய்தி சென்னை நண்பர்கள் யாருக்குமே தகவல் வரவில்லை.

நண்பர், எத்தனை உயரிய படிப்பு படித்தவர், எத்தனை வசதி, எத்தனை உதவியாட்கள், எத்தனை பெரிய வீடு, வாழ்நாள் முழுவதும் தன் தோட்டத்து காய்கறிகளையே சாப்பிடும் அளவுக்கு பிரமாண்டமானத் தோட்டம், ஒன்றுக்கு மூன்றாய் கார்கள், எத்தனை நண்பர்கள், எத்தனை உறவுகள்…

அருமையான மகன், குணமுள்ள மருமகள், உயர்கல்விப் படிக்கும் பேரக் குழந்தைகள்…

எல்லாவற்றுக்கும் மேல் எத்தனை உயரிய சிந்தனையாளர். பண்பாளர். மனிதநேயமிக்க அன்பர்.

அவர் மனைவிக்கு இப்படிப்பட்ட மரணம் ஏற்பட்டுள்ளதை அப்பாவினால் ஜீரணிக்கவே முடியவில்லை.

இவ்வளவுதான் வாழ்க்கை. பணமோ, பதவியோ, பட்டமோ, புகழோ எதுவுமே நம்மை தூக்கி நிறுத்தப் போவதில்லை. வேறு ஏதேனும் உடல்நலக் கோளாறுகளால் மரணம் ஏற்பட்டிருந்தால்கூட உடலை ஐஸ்பாக்ஸில் வைத்து மகன் வரும்வரை பாதுகாத்திருக்கலாம். கொரோனா என்பதால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

நமக்கானவர்கள் வரும்வரை நம் உயிரற்ற உடல்கூட காத்திருக்காது. இது கொரோனா கற்றுக்கொடுத்துள்ள உயரிய வாழ்க்கைப் பாடம்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 29 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon