ஹலோ with காம்கேர் – 167
June 15, 2020
கேள்வி: விரக்தியை விரட்டி அடிக்கும் யுக்தியை நீங்கள் எப்படி வளர்த்துக்கொண்டீர்கள்?
இதற்கான பதிலை என் வாழ்க்கையில் நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயத்தின் மூலம் சொல்கிறேன்.
என்னுடைய முதல் கதை 10 வயதில் கோகுலத்தில் வெளியானது. அதனை கடிதம் மூலம் தகவல் அனுப்பி இருந்தார்கள். அந்தக் கடிதம் வந்தது முதல் பத்திரிகை வெளியான நாள் வரை இரவில் நான் ஆழ்ந்து தூங்கவே இல்லை. கதை பத்திரிகையில் வெளியான பிறகு அதைப் படித்துவிட்டு என் அப்பா அம்மா என்னைக் கொஞ்சுவதைப் போலவும், பள்ளியில் ஆசிரியர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவதைப் போலவும், உடன் படிக்கும் மாணவ மாணவிகள் பாராட்டுவதைப் போலவும் ஒரே பரவசம் தான். கிட்டத்தட்ட ஒரு வாரம் இதே உணர்வுகளுடனேயே இருந்தேன். இதை நேர்மறை எண்ணங்களாக எடுத்துக்கொள்ளலாம்.
பத்திரிகை என் கைக்குக் கிடைத்த பிறகு என் மனநிலையே வேறு. பரவசத்துக்கு நேர் எதிரான மனநிலை. அதற்கு வெறுமை, வெற்றிடம் இப்படி எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக்கொள்ளலாம்.
காரணம் இதுதான். என் பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோர் தவிர வேறு யாரும் அந்தக் கதை குறித்துப் பாராட்டவோ உற்சாகப்படுத்தவோ இல்லை. அப்போது ஒரு வெறுமை உண்டானது. காரணம் பரவசத்தையே எதிர்பார்த்துக் காத்திருந்த எனக்குள் அது நான் எதிர்பார்த்த அளவில் கிடைக்காதபோது வெற்றிடம் உண்டானது. விரக்தியில் சிடுசிடுவென எல்லோரிடமும் எரிந்து விழுந்தேன். இதை எதிர்மறை எண்ணமாக எடுத்துக்கொள்ளலாம்.
நாள் செல்லச் செல்ல என்னை நானே பக்குவப்படுத்திக்கொண்டேன். என் அப்பா அம்மாவும் எங்களுடன் இதுகுறித்தெல்லாம் நிறைய பேசுவார்கள். ஒரு விஷயம் குறித்தே தொடர்ச்சியாக அதீதமாக நினைத்துக்கொண்டிருந்தால் ஒருவேளை அது நடக்கவில்லை என்றால் மிகவும் சோர்ந்துவிடுவோம். எனவே அந்தந்த காலகட்டத்தில் என்னென்ன நடக்கிறதோ அந்த சூழலுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும். அதே சமயம் நமக்கான உறுதியான கொள்கைகளுடன் நேர்மையாகப் பயணிக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார்கள்.
எல்லா விஷயங்களிலும், நம்முடைய வெற்றிகளுக்கு பிறர் நம்மைப் பாராட்ட வேண்டும் என்கின்ற என் மனநிலையை மாற்றி, எனக்குள் நானே அந்த மகிழ்ச்சியை கொண்டு வந்தேன். எனக்குள் என்னுடைய செயல்பாடுகள் பூரணத்துவத்தை ஏற்படுத்துவதை உணர ஆரம்பித்தேன். புறத்தில் இருந்து வருகின்ற மகிழ்ச்சியைவிட அகத்தில் நிறைவடையும் உன்னத மனோநிலையை மிக சிறிய வயதிலேயே பெற்றேன்.
ஒரே நேரத்தில் நமக்குள் நாமே அகமாகவும் புறமாகவும் செயல்பட முடியும். அப்படி செயல்பட வேண்டுமானால் முடிந்தவரை பேச்சைக் குறைத்து கவனிப்பை அதிகரிக்க வேண்டும். அடுத்தவரை கவனிப்பதன் மூலம் நமக்குள் நாம் அடங்க முடியும். நம்மை நாம் அடக்க முடியும். பிறரை கட்டுப்படுத்துவது என்பது நமக்குள் நாம் அடங்குவதிலும் நம்மை நாம் கட்டுப்படுத்துவதிலுமே இருக்கிறது.
நம்முடைய எதிர்பார்ப்புகளை புறம் சார்ந்து மற்றவர்களிடம் வைக்காமல் அகம் சார்ந்து நம்மை நாமே மகிழ்விப்பதில் வைத்துக்கொள்ளும் சூட்சுமத்தைப் பெற்றால் வாழ்க்கை சொர்க்கம், வாழ்தல் இனிது.
சீஸா விளையாட்டை விளையாடி இருப்போம். சீஸா பலகையில் இருப்பக்கமும் ஒருவர். ஒருவர் காலை தரையில் உந்தித்தள்ளினால் அந்தப் பக்கம் மேலே செல்லும். மற்றொருவர் உந்தித்தள்ளும்போது அவர் மேலே செல்ல எதிராளி கீழிறங்கி விடுவார். நம் வாழ்க்கையும் இந்த சீஸா விளையாட்டுப் போலதான்.
பொதுவாக நம் எல்லோருக்குள்ளும் நேர்மறை எண்ணங்கள் தளும்பிக்கொண்டுதான் இருக்கும். ஆனால் கூடவே எதிர்மறை எண்ணங்களும் ‘நானும் வந்துட்டேன், எனக்கும் இடம் கொடு’ எனச் சொல்லி ஒட்டிக்கொள்ளும். நம்மால் தவிர்க்கவே முடியாது.
நேர்மறை எதிர்மறை இரண்டுமே வாழ்க்கை எனும் சீஸா பலகையின் எதிரும் புதிருமாக அமர்ந்து கொண்டு நம்மை ஆக்கிரமித்துக்கொண்டேதான் இருக்கும். நேர்மறை வரும்போது அதை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் நாம், எதிர்மறை வரும்போது அதனிடம் மண்டியிட்டுத் தோற்றுவிடுகிறோம். அப்படி கீழிறங்கிவிடாமல் அதை உதைத்துத் துரத்தும் வல்லமையை வளர்த்துக்கொள்பவர்கள் மீண்டு வந்து விடுகிறார்கள்.
பிறந்துவிட்டோம், வாழ்ந்துதான் பார்த்துவிடுவோமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software