ஹலோ With காம்கேர் -166: அண்மையில் பார்த்து ரசித்த படம் VS பார்த்த அண்மையில் வெளியான படம்

ஹலோ with காம்கேர் – 166
June 14, 2020

கேள்வி:  நீங்கள் அண்மையில் பார்த்து ரசித்தத் திரைப்படம் என்ன? நீங்கள் பார்த்த அண்மையில் வெளியான திரைப்படம் என்ன?

இன்றைய பதிவில் இரட்டை கேள்விகளுக்கான பதில். இரண்டு கேள்விகளையும் ஒருமுறைக்கு இருமுறையாக படித்துப் பார்த்துவிட்டு பதிவைப் படியுங்கள். இரண்டுக்கும் மிகப் பெரிய வித்தியாசம் உள்ளது.

முதலில் முதல் கேள்விக்கான பதில்: மேஜர் சந்திரகாந்த்.

சேனல் மாற்றிக்கொண்டே வரும்போது நாகேஷும் ஜெயலலிதாவும் பேசிக்கொண்டிருக்கும் காட்சி வெளிப்பட அப்படியே தொடர்ச்சியாக பார்க்க ஆரம்பித்தேன். படம் முடியும் வரை சேனல் மாற்றவே இல்லை.

மேஜர் சுந்தர்ராஜன், முத்துராமன், ஏவிஎம் ராஜன், நாகேஷ், ஜெயலலிதா இவர்கள் நடிக்க ஏவிஎம் தயாரிப்பில் கே. பாலசந்தர் இயக்கியது. 1966-ல் வெளிவந்த திரைப்படம்.

அன்பு, பாசம், காதல், நேர்மை, நீதி, ஒழுக்கம், நேர்த்தி, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, உருக்கம், அழுகை, ஆர்பரிப்பு, சிரிப்பு, ஆனந்தம், சோகம், துரோகம் என எல்லா உணர்வுகளையும் ஒரே திரைப்படத்தில் கொடுக்க முடியுமா என வியந்தேன். கொடுத்திருக்கிறார்களே!

கதை, திரைக்கதை, நடிப்பு, வசனம், உடல்மொழி, காட்சி அமைப்புகள், பாடலை படமாக்கிய விதம், பாடல் வரிகள், வசன உச்சரிப்பு…. அடடா அத்தனையும் நெகிழ்ச்சி.

படம் முழுவதும் தன் உணர்ச்சிகரமான நடிப்பினால் நாகேஷ் நம்மை அழ வைக்கிறார். நேர்மையும் பாசமும் கலந்த ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி கம்பீரமாய் ஜொலிக்கிறார் மேஜர் சுந்தர்ராஜன். இந்தப் படத்தில் நடித்த பிறகுதான் சுந்தர்ராஜனுக்கு மேஜர் சுந்தர்ராஜன் என்ற பெயர் கிடைத்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், அந்த கேரக்டரின் ஆழத்தையும் அழுத்தமான நடிப்பையும். ஜெயலலிதாவின் நடிப்பைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. அழகும் நடிப்பும் போட்டிப் போடுகின்றன.

கதை இதுதான்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக சுந்தர்ராஜன். மேஜராக இருந்து ஓய்வு பெற்றவர். நேர்மையானவர்.

இரண்டு மகன்கள். மூத்த மகன் முத்துராமன். கடமை தவறாத போலீஸ் அதிகாரி. இளைய மகன் ஏவிஎம் ராஜன் கல்லூரி மாணவன். தன் கல்லூரியில் படிக்கும் ஜெயலலிதாவை காதலித்து கைவிட்டுவிடுகிறார்.

ஜெயலலிதாவின் அண்ணன் நாகேஷ். கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து அவருக்கு திருமணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். இடையில் ஜெயலலிதா ஏவிஎம் ராஜனை கடிதம் மூலம் தொடர்புகொள்கிறார். அவரோ அவரை திருமணம் செய்துகொள்ளும் உத்தேசம் இல்லாமல் ‘உனக்கு எவ்வளவு பணம் வேண்டும்’ என கேட்டு கடிதம் அனுப்ப ஏமாற்றப்பட்ட அவமானத்தில் தற்கொலை செய்து கொள்கிறார் ஜெயலலிதா.

அவரது அண்ணன் நாகேஷின் கைகளில் அந்தக் கடிதம் கிடைக்க ஏவிஎம் ராஜனை தேடி கண்டுபிடிக்கிறார். ஒரு கட்டத்தில் மாட்டிக்கொண்ட ஏவிஎம் ராஜன் நாகேஷிடமும் ‘பணம் தருகிறேன் என்னை விட்டுவிடு’ எனக் கெஞ்ச நாகேஷ் பொறுக்க முடியாமல் ஆத்திரத்தில் ராஜனைக் கொன்றுவிட்டு தப்பிக்கிறார்.

தப்பி ஓடிய நாகேஷ் மேஜர் சுந்தர்ராஜனின் வீட்டுக்குள் ஒளிந்துகொள்கிறார். பார்வையற்றவராக இருந்தாலும் நாகேஷ் ஒளிந்திருப்பதை கண்டுபிடித்து விடுகிறார் அவர்.

நாகேஷ் மேஜருக்கு கண் தெரியாது என்று தெரிந்து ஆச்சர்யப்படுகிறார். அவரிடம் தான் கொலை செய்ததை சொல்கிறார். மேஜருக்கு அது தவறாக தெரியவில்லை.

ஒரு கட்டத்தில் தான் கொலை செய்தது மேஜரின் இளைய மகனை என்றும் அவருடைய மூத்த மகன் போலீஸ் என்றும் தெரிகிறது. மேஜர் சுந்தர்ராஜனுக்கும் நாகேஷ் கொலை செய்தது தன் இளைய மகன் என்று தெரிந்தும் நாகேஷ் செய்தது சரிதான் என்று சொல்கிறார்.

முத்துராமன் நாகேஷ் தன் வீட்டில் ஒளிந்திருப்பது தெரிந்து அவரை கைது செய்ய முயல்கிறார். ஒரு கைதிக்கு இடம் கொடுத்ததால் அப்பா மேஜர் சுந்தர்ராஜனையும் கைது செய்யப் போவதாகக் கூறுகிறார்.

மேஜர் சுந்தர்ராஜன் கைதாவதற்கு முன்னர், முத்துராமன் செய்ததும் தவறுதான். தம்பி ஏவிஎம் ராஜன் செய்தது தவறு எனத் தெரிந்ததும் அந்த விஷயத்தைத் தனக்குத் தெரிவிக்காமல் இருந்ததால் அநியாயமாக ஒரு பெண்ணை பலியாக்கிவிட்டோம். அந்த வகையில் நீ செய்தது மாபெரும் தவறு. நீதிக்கு முன் அது தவறாக இல்லை என்றாலும் தர்மப்படி தவறுதான்  எனச் சொல்லி ஒரு தகப்பனாக மகனை அடித்து தண்டனை கொடுக்கிறார்.

இறுதிக் காட்சியில் நாகேஷும் மேஜர் சுந்தர்ராஜனும் கைது செய்யப்படுகிறார்கள். நாகேஜ் மேஜர் சுந்தர்ராஜனை அரவணைத்துக்கொண்டு நடந்து செல்வதுடன் திரைப்படம் முடிகிறது.

இப்போது இரண்டாவது கேள்விக்கான பதில்:

பொன் மகள் வந்தாள். மே 2020-ல் அமேசானில் வெளியான இந்தத் திரைபப்டம் பெண் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள், ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டிய விதம் ஆகியவற்றைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் பொறுமையாக உட்கார்ந்து ஒரு முறைக்கு இருமுறையாக பார்த்தால்தான் கதை புரிகிறது.

இரண்டையும் ஒப்பிட்டே ஆக வேண்டும் என்றால் ஒரு விஷயத்தைச் சொல்கிறேன்.

பலாப்பழம் சாப்பிட்டால் அதன் சுவை  நீண்ட நேரம் நம் நாக்கில் இருந்துகொண்டே இருப்பதைப் போல 1966-ல் வெளியான ‘மேஜர் சந்திரகாந்த்’ திரைப்படம் பார்த்த பிறகு அது நீண்ட நேரம் மனதுக்குள்ளும் ஓடிக்கொண்டே இருந்தது.

இரண்டு படங்களிலும் பெண்களுக்கு எதிரான வன்முறை பதிவாக்கப்பட்டுள்ளது. முன்னதில் இளம் பெண் காதல் என்ற போர்வையில் ஏமாற்றப்படுகிறாள். பின்னதில் அறியாப் பருவத்து சிறுமிகள் கடத்தப்பட்டு வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். காலம் மாறினாலும் காட்சிகள் மாறாது என்பதைப் போல பெண்களின் நிலை அன்றும் இன்றும் ஒன்று என்பதை சொல்லிச் செல்கின்றன இரண்டு திரைப்படங்களும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 226 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon