ஹலோ with காம்கேர் – 168
June 16, 2020
கேள்வி: இறப்புக்குப் பிறகு என்னவாகும்?
இறப்பு.
அது இயற்கையாகவோ, விபத்தாகவோ, கொலையாகவோ அல்லது தற்கொலையாகவோ இருக்கலாம்.
வளரும் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஒரு தாய் இறந்துவிட்டால், அந்தக் குழந்தைகளின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அப்பா நல்லவராக இருந்து நல்லபடியாக வளர்த்தால் போச்சு. அப்படி இல்லாத சூழலில் அவர் மறுமணமும் செய்துகொண்டு வருகின்றவளும் கொடுமைப்படுத்துபவளாக இருந்துவிட்டால் அந்தக் குழந்தைகளின் கதியை எண்ணிப் பாருங்கள்.
வளரும் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் ஒரு தந்தை இறந்துவிட்டால் பிள்ளைகளை எப்பாடுபட்டாவது தாய் வளர்த்து ஆளாக்கிவிடுவாள். ஆனாலும் அந்த குழந்தைகளுக்கு அப்பா இல்லை என்கின்ற உணர்வு ரீதியான ஏக்கம் மனதில் ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டேதான் இருக்கும்.
அவர்கள் வளர்ந்த பிறகும் அப்பாவின் பிம்பத்தை மற்ற ஆண்களிடம் தேடுவதற்கும் வாய்ப்புண்டு. பெண் குழந்தைகளாக இருந்து அப்படிப் பழக சந்தர்ப்பம் ஏற்பட்டால் அவர்களது பலவீனம் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருக்க வேண்டும்.
அம்மாவை இழந்த குழந்தைகளுக்கு அந்தப் பிரச்சனை குறைவுதான். அம்மாவின் பிம்பத்தை மற்ற பெண்களிடம் தேடும்போது உடல் ரீதியாக பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவு. பிரச்சனையே இல்லை என சொல்ல வரவில்லை. பிரச்சனையின் தாக்கம் குறைவு என்கிறேன்.
இப்படி உணர்வு ரீதியாக எத்தனையோ விஷயங்கள் ஒரு வெற்றிடத்தை நிரப்புவதில் உள்ளது. இளம் வயதில் ஏற்படும் வெற்றிடம் பெரும்பாலும் வெற்றுடமாக மட்டும் இருப்பதில்லை.
தந்தையை தன் சிறுவயதிலேயே இழந்த எத்தனையோ பெண்களை என் வாழ்க்கையில் நான் சந்தித்திருக்கிறேன். அவர்கள் சந்திக்கும் ஆண்களில் ஒருசிலரையாவது அப்பா ஸ்தானத்தில் வைத்து ஆராதிப்பார்கள். அப்பா, அப்பா என்றே அழைக்கவும் செய்வார்கள். ஆனால் யாரை அவர்கள் அப்பா என அழைக்கிறார்களோ அவர்கள் அப்பா என்ற அந்த கெளரவத்துடன் நடந்துகொள்வதில்லை என்பதை அவர்களே என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அதை அவர்கள் தெரிந்துகொள்வதற்குள் காலம் கடந்திருப்பதுதான் கொடுமை.
பெற்றோரில் ஒருவர் இருந்துவிட்டால் பிள்ளைகளுக்கு இந்த கதி என்றால், பிள்ளைகளை பறி கொடுக்கும் பெற்றோரின் நிலையை என்னவென்பது? குழந்தைகளுக்காவது வளர வளர சூழல் மாறும். இழப்புகள் வேறு வடிவில் நிவர்த்தி ஆகும். ஆனால் பெற்றெடுத்த பிள்ளைகளின் இழப்பை எதைக்கொண்டும் நிரப்ப இயலாது. அதனால்தான் இருப்பதிலேயே மிகப் பெரிய சோகம் ‘புத்திர சோகம்’ என்பார்கள்.
ஒரு சில குடும்பங்களில், வேலைக்குச் செல்லும் வயதில் உள்ள பிள்ளைகளை (25+) பறி கொடுப்பவர்களின் நிலையோ அந்தோ பரிதாபம். கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து நல்ல வேலையில் அமரும் வரை காத்திருக்கும் அம்மாவோ அல்லது அப்பாவோ அக்கடா என உட்காரலாம் என நினைக்கும் வேளையில் மாயமாய் மறைவதைப் போல பிள்ளைகள் மறைந்துவிட்டால் பிரமை பிடித்தவர்கள் போல மாறிவிடுவார்கள்.
நடுத்தர வயதில் (50+) உள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களின் சம்பாத்தியத்தை நம்பி படித்துக்கொண்டிருக்கும் அவர்களின் பிள்ளைகள் காத்திருப்பார்கள். அவர்களின் அப்பாவுக்கோ அல்லது அம்மாவுக்கோ பெரும் மருத்துவ செலவு இருக்கும்.
ஓய்வு பெறும் வயதில் (60+) ஏற்படும் இழப்பு குடும்பத்தை ஆட்டிப் படைத்துவிடும். ஒரு சிலருக்கு பிள்ளைகள் படித்து முடித்து வேலையில் செட்டில் ஆகி இருக்கலாம். திருமணம்கூட ஆகி இருக்கலாம். ஆனால் பெரும்பாலானோருக்கு பிள்ளைகள் செட்டில் ஆகாமல் அப்போதுதான் அதற்கான முயற்சிகளில் இருப்பார்கள். அந்த நிலையில் குடும்பத் தலைவனோ அல்லது தலைவியோ இறந்துவிட்டால் யார் குடும்பப் பொறுப்பை எடுத்து நடத்துவது என்ற தடுமாற்றம் இருக்கும்.
எல்லாக் கடமைகளையும் முடித்துவிட்டு நிறைவான வாழ்க்கை வாழ்ந்துவிட்டு இறக்கும் ஒருவரது மரணம் வேண்டுமானால் ‘கல்யாணச் சாவாக’ கொண்டாடப்படலாம்.
எப்படியானாலும் ஒருவரின் மரணம் என்பது ஒரே ஒரு மரணம் அல்ல. அது உயிருடன் இருக்கும் பலரை உணர்வளவில் மரணிக்கச் செய்யும் வலி மிகுந்த ஆயுதம்.
இவ்வளவு நேரம் நான் சொல்லிக்கொண்டிருந்தது இயற்கையான மரணம் அடைபவர்கள் குறித்து.
தற்கொலை செய்துகொள்பவர்கள் தங்களை மட்டும் கொலை செய்துகொள்ளவில்லை. தன்னுடைய தந்தை / தாய் ஸ்தானத்தை, தன்னுடைய மகன் / மகள் ஸ்தானத்தை, தன்னுடைய சகோதர / சகோதரி ஸ்தானத்தை, தன்னுடைய நட்பு ஸ்தானத்தை, தன்னுடைய கணவன் / மனைவி ஸ்தானத்தை இப்படி தனக்கான அத்தனை ஸ்தானத்தையும் சேர்த்து கொலை செய்கிறார்கள்.
அவரவர் வாழ்க்கைக்குள் ஆயிரம் நெருக்கடிகள் நெருக்கி நெக்கி எடுக்கும். வெளியில் இருந்து கருத்துச் சொல்வது எளிது.
மன அழுத்தத்துக்குக் காரணம் பிரச்சனைகளோ, துக்கங்களோ, வருத்தங்களோ, தீராத நோய்களோ, கடன் தொல்லைகளோ, காதல் தோல்வியோ அல்லது இன்ன பிற காரணிகளாகவோத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை.
ஒருசிலருக்கு பணம், பட்டம், வசதி, புகழ், நல்ல குடும்பம் இப்படி எல்லாமே இருந்தும் மன அழுத்தம் உண்டாகலாம். தீராத நெடுநாள் மன அழுத்தம் தற்கொலையில் முடியலாம்.
வயிற்று வலி, தலை வலிபோல் அதுவும் ஒருவித நோய்தான். தக்க சமயத்தில் மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொண்டால் விடுபட்டுவிடலாம்.
மன அழுத்தத்துக்கு மருத்துவம் எடுத்துக்கொண்டல் பயித்தியம் என்று எடுத்துக்கொள்வார்களோ என பயப்பட வேண்டாம். தீராத வயிற்று வலிக்குக் காரணம் வயிற்றில் புற்றுநோயாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லையே. வயிற்றில் அல்சராகக் கூட இருக்கலாம்தானே. அதுபோலதான்.
நாமே முடிவெடுக்க வேண்டாம். மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுவதுதான் சிறந்தது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software