ஹலோ With காம்கேர் -172: நீங்கள் நெயில்பாலிஷா அல்லது நெயில்பாலிஷ் ரிமூவரா?

ஹலோ with காம்கேர் – 172
June 20, 2020

கேள்வி:  நீங்கள் நெயில்பாலிஷா அல்லது நெயில்பாலிஷ் ரிமூவரா?

பொஸசிவ்னெஸ் என்பதை அதீத பாசம் என்று சொல்வார்கள். தனக்கு மட்டுமே சொந்தமாக்கிக்கொள்ளும் ஆபத்தான குணாதிசயம் எனலாம்.

இது ஆணுக்கு பெண் மீதும், பெண்ணுக்கு ஆண் மீதும் மட்டும்தான் வரும் என்பதெல்லம் இல்லை. பாலின பாகுபாடு இன்றி ஆணுக்கு ஆண் மீது, பெண்ணுக்கு பெண் மீது என யாருக்கு யார் மீது வேண்டுமானாலும் வரலாம்.

முகநூலில் என்னைப் பாராட்டி யாரேனும் பதிவுகள் எழுதினாலே அடுத்த சில நாட்கள் இன்பாக்ஸ் ‘புகார்’ பெட்டியாக மாறிவிடும். ஆமாம். இன்பாக்ஸில் என்னைப் பாராட்டிய நபர் குறித்து ‘அவர் இப்படி, அவர் அப்படி’ என இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக்கொண்டு வந்துவிடுவார்கள் ஒருசிலர். காரணம் பொஸசிவ்னெஸ். வேறென்ன?

இத்தனைக்கும் புகார் அளிப்பவர்கள் எனக்கு சமீபத்தில்தான் அறிமுகம் ஆகியிருப்பார்கள். என்னைப் பாராட்டிப் பதிவிடுபவர்களை எனக்குப் பல வருடங்களாக தெரிந்திருக்கும்.

‘தான் மட்டுமே நல்லவர், மற்றவர்கள் எல்லாம் ஆபத்தானவர்கள்’ என்று நினைக்கும் அறியாமையின் வெளிப்பாடு அது. கோபம் மட்டும் கண்களை மறைப்பதில்லை, பொஸசிவ்னெஸ் கூட கண்களை மறைக்கும்.

பொஸசிவ்னெஸ் பொதுவாக கணவன் மனைவிக்கிடையே, காதலன் காதலிக்கிடையே அதிகம் இருக்கும். நண்பர்களுக்கிடையேயும் உண்டாகும். குழந்தைகளுக்கு தன்னுடைய விளையாட்டுப் பொருட்கள் மீது இருக்கும். விருந்து விசேஷங்களுக்குச் செல்லும்போது சில குழந்தைகள் தன் அம்மா தன்னைவிட்டு வேறு குழந்தைகளைக் கொஞ்சினாலே பொஸசிவ்னெஸ் ஏற்பட்டு கதறித் தீர்க்கும். சில குழந்தைகளுக்கு வெளியில் காட்டத் தெரியாது. அந்த ஏக்கத்தை உள்ளுக்குள்ளேயே வைத்துக் குமையும். ஜூரம் தகிக்கத் தொடங்கிவிடும்.

இப்படி பொஸசிவ்னெஸ் யாருக்கு யாரிடம் வேண்டுமானாலும் வரலாம். ஏன் அலுவலகத்தில்கூட ஏற்படலாம்.

எங்கள் காம்கேர் நிறுவனம் தொடங்கிய புதிது. அப்போது எங்களிடம் ஐந்தாறு பேர்தான் என்னிடம் பணி புரிந்தார்கள். இப்போது ஒரு டீமிற்கே ஐந்தாறு பேர். அது விஷயம் அல்ல இப்போது.

அவர்களில் புரோகிராமராகப் பணி புரியும் ஒரு பெண்ணையே என் உதவியாளராக பணி அமர்த்திக்கொண்டிருந்தேன். கிராமத்துப் பெண். சொல்லிகொடுத்ததை நன்றாகப் புரிந்துகொண்டு பணிபுரிந்தாள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவள்.

நிறுவனம் வளரத் தொடங்கியது. காலையில் ஒரு ஷிப்ட். மதியம் ஒரு ஷிப்ட். இரவு ஒரு ஷிப்ட் என வேலை செய்யத் தொடங்னோம். எனவே மூன்று உதவியாளர்கள் தேவைப்பட்டது. ஏற்கெனவே இருந்த பெண்ணைத் தவிர மேலும் இருவரை பணிக்கு அமர்த்திகொண்டேன்.

அப்போதுதான் சின்ன மனரீதியான பிரச்சனை உண்டானது தொடக்கத்தில் இருந்தே என்னிடம் உதவியாளராக இருந்த அந்த பெண்ணுக்கு.

வாரத்தில் இரண்டு நாட்கள் பொது ஷிஃப்ட் வைப்பேன். அதில் அனைவருமே ஒரே நேரத்தில் (10 to 5) வருவார்கள். அப்போது மூன்று உதவியாளர்களும் ஒரே சமயத்திl சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும்.

காலை ஷிப்ட்டில் எனக்கு உதவியாளராக இருக்கும் பெண்தான் தொடக்கத்தில் இருந்து பணியில் இருப்பவள். அவளிடம் சின்ன சின்னதாக தடுமாற்றத்தை காண முடிந்தது. மற்ற இரண்டு உதவியாளர்கள் குறித்து குறைகள் சொல்ல ஆரம்பித்தாள்.  ‘நான் பார்த்துக்கொள்கிறேன்’ என சொன்னால் சரி என சொல்வாளே தவிர நான் சொன்ன பதிலில் திருப்த்தி அடையமாட்டாள். நான் அவர்களை அழைத்து தனியாகப் பேசினால் அவள் என்னிடம் தானாகவே வந்து  ‘என்னிடம் ஏதேனும் சொல்ல வேண்டுமா மேடம்’ என கேட்பாள். என்னால் அவள் மனதைப் படித்துவிட முடிந்தது. பொஸசிவ்னெஸ் வந்துவிட்டது. அலுவலகம் என்றும் பாராமல் அது வெடிக்கிறது என்பது தெளிவாகவே புரிந்தது.

ஒரு நாள் ‘மேடம் என்னை நீங்கள் ஒதுக்குகிறீர்கள்… அவர்களை எல்லாம் விட நான் தானே உங்களிடம் அதிக பாசம் வைத்திருக்கிறேன்…’ என அவள் அழவே ஆரம்பித்துவிட்டாள்.

அலுவலகம். இங்கு பணிதான் முக்கியம். பாசம் பந்தம் எல்லாம் இருக்க வேண்டியதுதான். அது பணி செய்பவர்களை பிணைக்கும் ஒரு மெல்லிய கயிறுபோல்தான் இருக்க வேண்டும். அதுவே அவர்களை இறுக்கிக்கொள்ளும் முரட்டுக் கயிராக மாறிவிடக் கூடாது என்றெல்லாம் புரிய வைத்தேன்.

ஆனாலும் அவளுடைய பொஸசிவ்னெஸ் குறையவே இல்லை. ஒரு கட்டத்தில் அவளுடைய அன்புத் தொல்லை பேரன்புத் தொல்லையாக மாறிவிட்டதால் அவளுக்கு நானே வேறு வேலை வாங்கிக்கொடுத்து அனுப்பி வைக்கும் அளவுக்கு நிலைமை உண்டானது.

பொஸசிவ்னெஸ், அளவோடு இருந்தால் அது உறவுமுறையை பிணைக்கும் வாசனையான வண்ணமயமான நெயில்பாலிஷ். அளவுக்கு மிஞ்சினால் அது நகத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் நெயில்பாலிஷை அழிக்கும் நெயில்பாலிஷ் ரிமூவராகிவிடும்.

நீங்கள் நெயில்பாலிஷா அல்லது நெயில்பாலிஷ் ரிமூவரா  என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 30 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon