ஹலோ With காம்கேர் -171: ஊர் என்ன செய்துவிட முடியும்?

ஹலோ with காம்கேர் – 171
June 19, 2020

கேள்வி:  ஊர் என்ன செய்துவிட முடியும்?

ஊர்.

‘கொரோனா நோய்த் தொற்றுக்கு அஞ்சி சென்னையை விட்டு மக்கள் வெளியேறி சொந்த ஊர் செல்கிறார்கள்’ என்ற செய்திதான் தற்போதைய ஹாட் நியூஸ்.

இது குறித்த செய்திகளை கேட்கும்போது ‘ஊர்’ குறித்த சிந்தனைகள் எட்டிப் பார்த்தன.

ஒரு முறை எனக்கும் என்னுடைய கிளையிண்ட் ஒருவருக்கும் ஊர் விவகாரத்தில் சின்ன வாக்குவாதம். எல்லைப் பிரச்சனை எல்லாம் இல்லை. நிலத் தகராறும் இல்லை.

இதுதான் விஷயம்.

நான் பிறந்தது கும்பகோணம். என் அப்பாவுக்கு மயிலாடுதுறை. அம்மாவுக்கு செஞ்சிக்கோட்டை.

என்னுடைய கிளையிண்ட்டின் சொந்த ஊர் மயிலாடுதுறை என்பதால் அவருக்கு என் மீது கூடுதல் மரியாதை. நானோ எல்லோருக்கும் என்ன மரியாதை கொடுக்கிறேனோ அதைத்தான் அவருக்கும் கொடுத்தேன்.

அப்பா அம்மா இருவரும் தொலைபேசித் துறையில் இருந்ததால் பணியிட மாற்றம் அடிக்கடி ஏற்படும். பல ஊர்களில் வசித்திருக்கிறோம். கோயம்புத்தூர், பல்லடம், விருதாச்சலம், கடலூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, புதுக்கோட்டை, அரியலூர், திருவாரூர், பெங்களூர், திருச்சி, சென்னை என அந்தப் பட்டியல் கொஞ்சம் பெரிசு.

அப்பாவும் அம்மாவும் கும்பகோணத்தில் பணியாற்றியபோது நான் பிறந்ததால் என்னைப் பொறுத்தவரை என் சொந்த ஊர் கும்பகோணம். நான் ஜனனம் செய்த நிலம்தானே எனக்கு சொந்த ஊராக இருக்க முடியும்?

அதுசரி அது என்ன ‘சொந்த’ ஊர்? இயற்கையின் சொத்தான பஞ்ச பூதங்களுக்கு சொந்தமான நிலத்தை நாம் எப்படி சொந்தமாக்கிக்கொள்ள முடியும். வியப்பாக உள்ளது நாம் பயன்படுத்தும் வார்த்தைப் பிரயோகங்கள்.

என்னுடைய கிளையிண்ட் முதன் முதலில் சந்தித்தபோது என்னுடைய சொந்த ஊர் என்ன எனக் கேட்டார். நான் கும்பகோணம் என்றேன்.

‘அதெப்படி கும்பகோணம் உங்கள் சொந்த ஊர் ஆகும். உங்கள் அப்பாவுக்கு எந்த ஊர் சொந்த ஊரோ அதுவே உங்களுக்கும் சொந்த ஊர்’ என ஆரம்பித்து சங்க காலத்தில் இருந்து உதாரணங்கள் எல்லாம் எடுத்து ஆணைச் சார்ந்துதான் குடும்பத்தில் சொந்த ஊர் நிர்ணயம் செய்வார்கள் என விவாதம் செய்ய ஆரம்பிக்க ஊர் பிரச்சனை, ஆண் பெண் பாகுபாடு, ஆணியம் பெண்ணியம் என பலகிளைகளாகப் பிரிந்து விவாதம் முற்றியது.

பொதுவாகவே விவாதங்களை வளர்க்க நான் விரும்புவதில்லை. காரணம் அவரவர் நியாயம் அவரவர்க்கு. இதில் விவாதித்து யாரும் வெற்றி காணப்போவதில்லை. விவாதம் என்று வந்துவிட்டால் எதிராளி ஜெயிப்பதற்காக யாரும் பேசப் போவதில்லை. தான் ஜெயிக்கவே ஆயிரம் காரணங்களை தேடிக் கண்டுபிடிக்கப் போகிறார்கள். பிறகெதற்கு விவாதம்?

ஆனால் இந்த சொந்த ஊர் விவகாரத்தில் ஏனோ தெரியவில்லை, நானும் கொஞ்சம் விவாதத்தை வளர்த்திவிட்டேன்.

‘நான் பிறந்தது கும்பகோணம் என்பதால் என் பிறந்த ஊர் கும்பகோணம். என் அப்பா  பிறந்த ஊர் மயிலாடுதுறை (முளைப்பாக்கம் கிராமம்), அம்மா  பிறந்த ஊர் செஞ்சி’ இப்படி சொல்வதுதான் நியாயம் என விவாதத்துக்கு முற்றுப் புள்ளி வைத்தேன். ‘சொந்த ஊர்’ என்பதை நீக்கி  ‘பிறந்த ஊர்’ என பெயரிட்டு பிரச்சனையை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

பல ஊர்களில் வசித்ததாலோ என்னவோ எனக்கு ஒரு குறிப்பிட்ட ஊர் மீது தனியாக பாசம் இருந்ததே இல்லை. எந்த ஊரில் வசிக்கிறோமோ அந்த ஊர் எனக்குப் பிடித்துப் போகிறது. இந்த ஊர்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றெல்லாம் எந்த ஊரையும் சொல்ல முடிவதில்லை.

இப்போது கடந்த 27 வருடங்களாக சென்னை வாசம். அதனால் சென்னைப் பிடிக்கிறது. ப்ராஜெக்ட் விஷயமாக அமெரிக்கா செல்லும்போது அந்த நாடு பிடிக்கிறது. குலதெய்வ வழிபாட்டுக்காக அப்பாவின் பிறந்த ஊரான முளைப்பாக்கம் செல்லும்போது அந்த கிராமம் பிடிக்கிறது.

ஓடிக்கொண்டே இருக்கும் நதிக்கு எந்த மண்ணைப் பிடிக்கும் சொல்லுங்கள்.  தான் பாய்ந்தோடி வரும் மண்ணெல்லாம் அதற்குப் பிடித்த மண் தானே?

ஒவ்வொரு ஊரைவிட்டுக் கிளம்பும்போதும் அந்த ஊரில் கிடைத்த அனுபவங்கள் எனக்குள் நிரம்பிவிடுகிறது. பின்னாளில் ஊரின் பெயரை நினைக்கும்போதெல்லாம் அந்த அனுபவங்களே தன்னை முன்னிறுத்திக் கொள்ளத் தொடங்குகின்றன. அந்த அனுபவங்கள் சார்ந்த பிரத்யோகமான உணர்வுகள் என்னை ஆக்கிரமித்துக்கொள்கின்றன.

ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு அனுபவம். விதவிதமான காட்சிகள். பலதரப்பட்ட மனிதர்கள். வெவ்வேறு மொழி, வெவ்வேறு பழக்க வழக்கங்கள் என நிறைய விஷயங்கள் மாறி மாறி உள்ளே சென்றுகொண்டே இருந்ததால் கற்பனை சக்தியும் கிரியேட்டிவிட்டியும் என் முயற்சி எதுவுமின்றி தானாகவே வளர்ந்தது. அதுவே என் ஒட்டுமொத்த திறமைக்கான அஸ்திவாரமும் ஆனது.

ஊரில் என்ன சிறப்பு இருக்கிறது. அங்கு வசிக்கும் குணமான மனிதர்களால் மட்டுமே அந்த ஊர் சிறப்புப் பெறுகிறது.

ஊர் என்னடா ஊர் ஊர், குணம் தானடா நிரந்தரம் என்பதை ‘பணம் என்னடா பணம் பணம், குணம் தானடா நிரந்தரம்’ என்று அந்தமான் காதலி என்ற திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாடும் பாடலின் ராகத்தில் இதை வாசிக்கவும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 39 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon