நெகிழ்ச்சியான அனுபவம்!
எழுத்து என்னவெல்லாம் செய்துவிட முடியும்?
இப்படி பலநாட்கள் நான் யோசிப்பதுண்டு. எழுத்தை வாசித்து அதை உள்வாங்கிக்கொள்ளும் மனநிலையில் இருப்பவர்களால் மட்டுமே அவர்கள் சூழலுக்கு ஏற்ப அதன் பலனை பெற முடியும்.
அந்த வகையில் ஒரு நெகிழ்சியான அனுபவம் ஒன்றை இன்று அனுபவித்தேன்.
என் ஃபேஸ்புக் நட்பில் இருப்பவரும் என் எழுத்துக்களின் தீவிர வாசகியும், என் நலன் விரும்பியுமான ஒரு பெண்மணியின் (பெயரை வேண்டுமென்றுதான் தவிர்த்திருக்கிறேன்) கணவர் இந்த ஜூன் மாதம் இரண்டாவது வாரம் இறந்துவிட்டார். ஃபேஸ்புக் மூலம் செய்தி அறிந்தேன்.
உடனடியாக போன் செய்து தொந்திரவு செய்ய வேண்டாம் என்று இன்றுதான் விசாரிப்பதற்காக போன் செய்து பேசினேன்.
அவருடைய இறுக்கமான இந்த நேரத்தில் ஒருநாள் நான் எழுதிய பதிவை (தலைப்பு: ‘இறப்புக்குப் பிறகு என்னவாகும்?’ http://compcarebhuvaneswari.com/?p=6338) படித்திருக்கிறார்.
அவருக்காகவே எழுதப்பட்டிருப்பதைப் போல இருந்ததாகச் சொன்னார். அந்தப் பதிவு மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததாகக் கூறினார். துக்கமான மனநிலையில் இருக்கும்போது கூட நம் எழுத்து ஒருவருக்கு ஆறுதல் தருகிறது என்பதை நினைக்கும்போது மிக மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
இதுநாள் வரை இப்படியான ஒரு உணர்வை நான் உணர்ந்ததே இல்லை. என் எழுத்து தன்னம்பிக்கைக் கொடுத்தது, உற்சாகத்தைக் கொடுத்தது, ஊக்கத்தைக் கொடுத்தது என்றெல்லாம் சொல்வார்கள். ஆனால் முதன் முதலில் வீடே துக்கமான மனநிலையில் இறுக்கமான சூழலில் இருக்கும்போதுகூட என் எழுத்து மன ஆறுதலைக் கொடுத்தது என்று சொல்லி கேள்விப்படுகிறேன்.
இன்னும் கவனமாக, இன்னும் பொறுப்புடன் சிந்திக்க வேண்டும், எழுத வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. யாரையும் எந்த நேரத்திலும் சின்னதாகக் கூட காயப்படுத்திவிடக் கூடாது என நினைத்துக்கொண்டேன்.
போன் பேசி முடித்ததும் அந்தப் பதிவை எடுத்து மீண்டும் வாசித்துப் பார்த்தேன். பதிவு அவருக்காகவே எழுதி இருந்ததைப் போலவும், அந்தப் பதிவுக்கு நான் பயன்படுத்தி இருந்த ஓவியம் அவரைப் போலவே இருந்ததைப் போலவும் எனக்குத் தோன்றியது.
‘மன திடத்துடன் இருங்கள். ஏதேனும் தேவை என்றால் அழைக்கவும். சும்மா பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று கருதினால் கூட அழையுங்கள். பேசலாம்.’ என்று வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பினேன்.
அந்த ஓவியத்தில் இருந்த சோகமான பெண்ணின் கண்ணீர் என் மனதில் கசிந்தது.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software
ஜூன் 23, 2020