ஹலோ with காம்கேர் – 181
June 29, 2020
கேள்வி: ‘ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என புலம்பும் பேர்வழியா நீங்கள்?
வீட்டுக்குள் அடைந்து கிடப்பது ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு என்ற மன அழுத்தத்தில் இருப்பவரா நீங்கள். உங்களுக்குத்தான் இந்தப் பதிவு. ‘ஸ்கிப்’ செய்யாமல் முழுமையாகப் படியுங்களேன்.
இந்த ‘கொரோனா’ காலத்து லாக் டவுன் காலத்தில் பொருளாதார பிரச்சனையை தவிர்த்து மற்ற எல்லா பிரச்சனைகளும் நம் எல்லோராலும் மனதளவில் கடந்து செல்லக் கூடியவைகளே.
வீட்டில் Work From Home அலுவலக வேலை செய்துகொண்டே வீட்டுக்குள் வேலைகளை செய்தே பழக்கம் இல்லாத, வெளியேயும் வீட்டுக்குத் தேவையான காய்கறி, மளிகை என வாங்கியே அனுபவமே இல்லாத கணவனையும், வளரும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு வேளா வேளைக்கு காபி, டீ, ஆளுக்கொரு வகை டிபன், சாப்பாடு, நொறுக்குத் தீனி, போரடிக்காமல் இருக்க இரவு புதுவகை டிபன் என சப்ளை செய்து முதுகொடிந்துப் போகும் இளம் தாய்களை கவனித்திருக்கிறீர்களா. இடையில் கடை திறந்திருக்கும் நேரத்தில் கடைக்குச் சென்று சாமான்களை வாங்கித் துடைத்து சுத்தம் செய்து பாதுகாத்து வைத்து ‘அம்மாமா’ அவர்கள் படும்பாட்டை என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா?
ஆஃபீஸ் சென்றால் 8 மணி நேர வேலை. முழுமையாக வீட்டை அந்த நேரத்தில் மறக்க வாய்ப்புண்டு. வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது பணி திருப்தி கிடைக்கும். வீட்டு வேலைகளும் சில மணி நேரங்களே இருக்கும்.
இப்போது வீட்டில் அலுவலக வேலைகளுடன் வீட்டு வேலைகளையும் குழந்தைகளின் தேவைகளையும் சேர்த்து கவனிப்பதால் அலுவலக வேலை, வீட்டு வேலை எல்லாமே ஒரு கலவையாகி 24 மணி நேரம் என்பது 48 மணி நேர வேலையாகி பூதாகரமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
தனக்குப் பிடித்த புத்தகம் படிக்கக்கூட நேரம் இருப்பதில்லை என்பதே உண்மை. ஏன் ஃபேஸ்புக்கில் நுனிப்புல் மேயக்கூட நேரம் இல்லை. ஸ்வாமி ஸ்லோகத்தை கொஞ்சம் சப்தமாக ஒலிக்க விட்டுக்கொண்டே அலுவலக பணி செய்தால் கூட ‘இதென்ன இதெல்லாம் புதுசா இருக்கு’ என நக்கல் அடிக்கும் கணவனும் சில வீடுகளில் குழந்தைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு மணி நேர கார் டிரைவில் உள்ள தன் அலுவலகத்துக்குச் செல்லும்போது வழக்கமாகவே ஏதேனும் ஸ்லோகம் ஒலிக்கச் செய்து கேட்டுக்கொண்டே டிரைவ் செய்வது அவளது பழக்கம் என்பதைக்கூட தெரிந்துகொள்ளாத உறவுகள் கொடுக்கும் வேதனையினால் உண்டாகும் மன அழுத்தத்தை விடவா வீட்டை விட்டு வெளியே வர முடியாமல், நண்பர்களுடன் அரட்டை அடிக்க முடியாமல், சனி ஞாயிறில் மால்களில் சுற்ற முடியாமல், அவ்வப்பொழுது நண்பர்களுடன் செல்லும் வெளியூர் பிரயாணங்கள் செய்ய முடியாமல், நினைத்துக்கொண்டால் சினிமாவுக்குச் செல்ல முடியாமல் இப்படி இன்னும் நிறைய முடியாமைகளின் துயரத்துக்கு ஆளாகி இருக்கும் புண்ணியவான்களின் வேதனை பெரிது?
இதுவரை இல்லாவிட்டாலும் இனியாவது கொஞ்சம் உங்கள் கண்களுடன் சேர்த்து இதயத்தையும் திறந்து வைத்துக்கொள்ளுங்கள்.
வீட்டில் தன் அலுவலக வேலைகளுடன் சேர்த்து உங்கள் அத்தனை தேவைகளுக்கும் ஒருதுளி பங்கம் வராமல் உழைத்து சோர்ந்து போயிருக்கும் உங்கள் வீட்டு ‘பெண் எனும் தேவதையை’ கவனியுங்களேன். அவளை புரிந்துகொள்ள முயலுங்களேன். உங்கள் மன அழுத்தம் எல்லாம் ‘துண்டைக் காணும் துணியைக் காணும்’ என ஒரே ஓட்டமாக ஓடி விடும்.
அவளுக்கு உதவி செய்ய வேண்டாம். அட்லீஸ்ட் குறை சொல்லாமலாவது இருங்கள்.
அவளுக்கு ஆறுதல் சொல்ல வேண்டாம். அட்லீஸ்ட் காயப்படுத்தும் பார்வைகளையாவது தவிருங்கள்.
அவளுக்கு கரிசனம் காட்ட வேண்டாம். அட்லீஸ்ட் இதெல்லாம் என்ன பெரிய வேலையா என அலட்சியப்படுத்த வேண்டாம்.
அவளுடைய உடல் சோர்வுக்கு மருந்து கொடுக்க வேண்டாம். அட்லீஸ்ட் உங்களுக்காக அவள் செய்யும் பணிகளின் சுமையை உணருங்கள்.
அவளுடைய மன அழுத்தத்தைக் குறைக்க சின்ன முயற்சிகூட எடுக்க வேண்டாம். அட்லீஸ்ட் அவளிடைய கடமை உணர்சியை அங்கீகரிக்கவாவது செய்யுங்கள்.
அவளுடைய கண்ணீரைத் துடைக்க வேண்டாம். அவள் சோர்ந்துபோய் படுக்கும் நேரத்தில் இதுகூட செய்ய மாட்டேன் என்கிறாய் என குத்திக் காட்ட வேண்டாம்.
அவள் இயந்திரம் அல்ல. அவளும் மனுஷிதான். அவளுக்கும் லாக் டவுனினால் உண்டாகி இருக்கும் மன அழுத்தம், சோர்வு, விரக்தி அத்தனையும் இருக்கும். இன்னும் சொல்லப் போனால் வீட்டில் உள்ள மற்ற எல்லோரையும்விட அதிகமாகவே இருக்கும். அவள் ‘எனக்கு ஒரே ஸ்ட்ரெஸ்ஸா இருக்கு’ என்று என்றாவது புலம்பிப் பார்த்திருக்கிறீர்களா?
முணுமுணுக்கக் கூட மாட்டாள். ஏன் என்றால் அவள் பெண் எனும் தேவதை. தேவதைகளுக்கு புலம்பத் தெரியாது. உழைக்க மட்டுமே தெரியும்.
உங்களுக்காகவே உழைக்கும் தேவதைகளை இரவு 11 மணிக்குப் பிறகாவது வீட்டு வேலை அலுவலக வேலை என அத்தனையையும் மறந்து நிம்மதியாக தூங்க விடுங்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software