ஆளுமை – 1 : உயர்திரு. வெங்கடரமணி
அறிமுகம்:
1938-ல் ஒரு மத்திய தரக்குடும்பத்தில் இரண்டாவது மகனாகப் பிறந்தேன். திருச்சி தேசியக்கல்லூரியில் இளங்கலைப் பட்டம். பணி ஓய்வுக்குப்பின் காந்திய சிந்தனை முதுகலைப் பட்டம்.
1961ல் திருமணம். மனைவி இறைவன் தந்த வரம். பட்டம் பெறாத குடும்ப நிர்வாகி. கீதை படிக்காத கர்மயோகி. ஒரு மகன். இரண்டு மகள்கள்.
ஆயுள்காப்பீட்டுக் கழகத்தில் குமாஸ்தாவாகச் சேர்ந்து, படிக்கட்டு படிக்கட்டாக மேலேறி கோட்ட மேலாளர் நிலையில் பணி ஓய்வு.
ஓய்வு பெற்ற மறு நாள் தொடங்கியே சேவாலயாவில் முழு நேரத் தன்னார்வப்பணி. அடிப்படை வேலைகளிலிருந்து ஒருங்கிணைப்பு வரை பூரண திருப்தி அளித்த பணி.
2019 ஜூன் முதல் அறுவை சிகிச்சை காரணமாக வீட்டில் இருந்தபடியே கருத்துப்பணி மட்டும்..
தமிழிலும் இலக்கியத்தில் ஆர்வம். அறுபதுகளில் வானொலி, பத்திரிகைகள் மூலம் எழுத்தில் ஆர்வம். எண்பது தொண்ணூறுகளில் நிலாச்சாரல் இணைய இதழ் மூலம் 4 இணையப் புத்தகங்கள் வெளியீடு.
இரண்டாயிரத்தில் இருந்து முக நூல், வலைப்பூவில்.
மைனஸ்:
குறை இல்லை. குறைபாடுகள் இருந்தன. வெகுளித்தனம். பின் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் மனதில் உள்ளதை அப்படியே வெளிப்படுத்திவிடும் குணம்.
ஏதேனும் ஒரு சிறு பிரச்சனை ஏற்பட்டுவிட்டாலே அதை பூதாகரமாக கற்பனை செய்துகொண்டு அதன் உச்சகட்ட கஷ்டங்களை மனதளவில் அனுபவிப்பது. அதாவது எதிர்மறை கற்பனைகள் (Negative visualization) இயல்பில் அமைந்த குறைபாடுகள்.
எனது குறைபாடுகள் பற்றிய முழுப் பிரக்ஞையும் எனக்கு இருந்தது. ஆகவே சுய வளர்ச்சிக்கான இடைவிடாத முயற்சி, படிப்படியாக என்னை உயர்த்தி இருக்கிறது. இன்று, ஓரளவு நிறை நிலையை நெருங்கி வருகிறேன் என்பதில் பெருமை.
ப்ளஸ்:
என்னை நான் செதுக்கிக்கொள்வதற்கு உதவிய மூன்று.
- காந்தியின் சத்திய சோதனை.
- எம்.எஸ்.உதயமூர்த்தியின் ‘வாழ்க்கையை அமைக்கும் எண்ணங்கள்’.
- சேவாலயா அமைப்பு.
காந்தி தமது அன்றாட சின்ன சின்ன நிகழ்வுகளைக்கூட சத்தியத்தின் அடிப்படையில் சோதனை செய்து பாடம் பயின்றார். நான் சத்திய அடிப்படையில் மட்டும் அல்லாமல், அறிவுபூர்வமாகவும் என் செயல்பாடுகளைச் சோதித்துப் பார்த்து நிறைய கற்றுக்கொண்டேன்
இன்ன விளைவுகளை விரும்பினால் இன்ன எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உதயமூர்த்தி நிரல்படுத்திக்கொடுத்திருக்கிறார். அந்த வகையில் நான் எண்ணங்களைக் கவனித்துச் சீர்படுத்திக்கொள்ளும் பயிற்சியில் தீவிரமாக ஈடு பட்டேன்.
சேவாலயா மூலம் நன் கற்றுக்கொண்டது, எளியவர் மீது காட்டும் உண்மைக் கரிசனம் என்றால் என்ன, எப்படி அதைச் செயலாக்குவது, அதற்குத் தேவையான நிர்வாகத் திறன், இடையூறுகளைக் கண்டு கலங்காமை, அவற்றை கருவியாகக்கொண்டு மேலதிக ஊக்கத்துடன் செயல்படுவது.
இறைவனுக்கு நன்றி
எனக்கு இறைவன் அளித்த சீட்டுக்கட்டுகளை வைத்து திறமையாகவே விளையாடி இருக்கிறேன்.
விவிலியத்தில் கூறியபடி, ‘நல்ல போராட்டத்தைப் போராடினேன்; விசுவாசத்தைக் காத்தேன்; ஓட்டத்தை முடித்துக்கொண்டேன்’ என்று சொல்லி நிறைவடைய முடியும் என்று நம்புகிறேன்.
தொகுப்பு
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO, Compcare Software