ஹலோ with காம்கேர் – 183
July 1, 2020
கேள்வி: வாழ்க்கை மீதான நம்பிக்கை கூடுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
நேற்று வீட்டுக்குள் போன் சிக்னல் கிடைக்காததால் கார் பார்க்கிங்கில் நின்று பேசிக்கொண்டிருந்தேன். பேசி முடித்துவிட்டு திரும்பவும் வீட்டுக்குள் அடைபட விரும்பாமல் சிறிது நேரம் சாலையை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தேன்.
இதற்குள் வணக்கம் சொல்லியபடி தபால்காரர் முகக்கவசத்துடன் வரவே ஆச்சர்யத்துடன் ‘போஸ்ட் ஆஃபீஸ் இயங்குகிறதா?’ என கேட்டேன். அவர் தன் அக்மார்க் தன்னம்பிக்கை சிரிப்பில் ‘ஆமாம்’ என பதில் சொல்லி இருப்பார் என நினைக்கிறேன். முகக் கவசம் இருந்ததால் அவரது சிரிப்பு கண்களில் தெரிந்தது. ஒரு அடி தள்ளி நின்றுகொண்டே ‘அப்பா அம்மா எப்படி இருக்காங்க, பத்திரமா பார்த்துக்கோங்க’ என நலன் விசாரித்தார். என்னிடம் ஒரு போஸ்ட் கார்டை கொடுத்தார். நான் அங்கு நின்றிருக்கவில்லை என்றால் போஸ்ட் பாக்ஸில் போட்டுவிட்டு சென்றிருப்பார்.
எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள். ஒன்று போஸ்ட் கார்டில் யார் என்ன கடிதம் எழுதியிருக்கப் போகிறார்கள். இரண்டாவது ஆச்சர்யம் என்ன என்பதைத்தான் இந்தப் பதிவில் சொல்லி இருக்கிறேன்.
கொரோனா
கொவிட்-19
லாக் டவுன்
ஸ்ட்ரெஸ்
மன உளைச்சல்
விரக்தி
பொருளாதாரப் பிரச்சனை
இப்படி பல பிரச்சனைகள் மிரட்டிக்கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் போஸ்ட் கார்டில் நூலகத்துக்கு நூல்கள் தர வேண்டி எழுதப்பட்டிருந்த அந்தக் போஸ்ட் கார்ட்தான் அந்த இரண்டாவது ஆச்சர்யம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் இயங்கிவரும் மக்கள் நூலகத்தில் இருந்து வந்திருந்த அந்த கார்டில் ‘நீங்கள் படித்த உங்களுக்குத் தேவையில்லாத நூல்களை நூலகத்துக்கு வழங்க விரும்பினால் தயவு செய்து எங்கள் நூலகத்துக்கு வழங்கவும். வந்து எடுத்துக்கொள்கிறோம்’ என்று எழுதப்பட்டிருந்தது.
‘எல்லாம் சரியாகிவிடும்’ என்ற நம்பிக்கை இருந்தாலும் நிரந்தரமில்லாத மனநிலையில் உள்ள பெரும்பான்மை மக்களிடையே கருமமே கண்ணாயிரனாராக தங்கள் பணியை செவ்வனே செய்யும் அந்த நூலக உரிமையாளரை தொலைபேசியில் அழைத்தேன் பாராட்டுவதற்காக.
சென்னையில் இருந்து போன் என்றதும் கொஞ்சம் பரபரப்பானார். கண்ணியமாகப் பேசினார்.
‘மக்கள் நூலகம்’ – அவரும் அவருடைய இரண்டு நண்பர்களும் இணைந்து நடத்தும் நூலகம். புத்தகத்தை வாடகைக்குக் கொடுப்பதில்லை என்பதால் கட்டணம் ஏதும் கிடையாது. அங்கேயே அமர்ந்து படிப்பதற்கு முற்றிலும் இலவசம். படிக்கும் ஆர்வம் இருக்கும் யார் வேண்டுமானாலும் வந்து படிக்கலாம். இதெல்லாம் அவர் கொடுத்த விவரங்கள்.
‘அது சரி, புத்தகங்களை நீங்கள் வந்து பெற்றுக்கொள்கிறீர்கள் என எழுதி உள்ளீர்களே சென்னைக்கு நேரில் வந்தா பெற்றுக்கொள்வீர்கள்’ என்ற எனது சந்தேகத்தைக் கேட்டேன்.
‘லாக் டவுன் முடிந்த பிறகு அங்கு வரும் வேலை இருக்கிறது. நீங்கள் புத்தகங்களை எடுத்து வைத்துவிட்டால் நாங்கள் வந்து பெற்றுக்கொள்கிறோம்’ என்று சொன்னார். ஒருசிலர் பார்சல் சர்வீஸில் அனுப்பி வைக்கிறார்கள் என்றும் கூறினார்.
‘நூலகத்தை முழுநேரப் பணியாகவா செய்கிறீர்கள்?’ என்று வியந்தேன். இங்லீஷ் ஸ்பீக்கிங் கோச்சிங் செண்டர் நடத்துவதாகவும், அவரது கிராமத்து மாணவர்கள் நிறைய படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் நூலகம் ஆரம்பித்து நடத்தி வருவதாகவும் சொன்னார்.
ஆச்சர்யத்தில் இருந்து விடுபடாமலேயே அவர்களின் வயதையும் கேட்டறிந்தேன். மூவருமே 30+ வயதினர்.
‘ஊர் உலகமே கொரோனா, லாக் டவுன், ஸ்ட்ரெஸ் என சோகத்தில் மூழ்கி இருக்கும்போது இப்படி உங்கள் பணியில் கவனமாக செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பணியை இப்படியே தொய்வில்லாமல் தொடருங்கள். புத்தகங்கள் என் நிறுவனத்தில் உள்ளன. லாக் டவுன் முடிந்ததும் புத்தகங்களை பார்சலில் அனுப்புகிறேன். வாழ்த்துகள்’ என்று வாழ்த்திவிட்டு வழக்கம்போல நன்றி சொல்லி போனை வைக்க முயன்றபோது ‘நான்தான் மேடம் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஒரு போஸ்ட் கார்டை மதித்து எனக்கு போன் செய்ததுடன் புத்தகங்களையும் அனுப்பி வைப்பதாகச் சொல்கிறீர்கள். நன்றி’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தார்.
உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் மனிதர்களை பார்க்கும்போதெல்லாம் வாழ்க்கை மீதான நம்பிக்கை கொஞ்சம் கூடுவதை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா? எனக்கு அந்த வாய்ப்பு அதிகம் கிடைக்கும். நேற்றும் கிடைத்தது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software