ஹலோ With காம்கேர் -186: அப்பா ஏன் அழுதார்?

ஹலோ with காம்கேர் – 186
July 4, 2020

கேள்வி:   அப்பா ஏன் அழுதார்?

நேற்று அப்பா தூக்கத்தில் அழுதார். காரணம் இல்லாமல் இல்லை.

நிஜத்தில் பேசுவதைப் போல தூக்கத்திலும் ஏதேனும் பேசுவது அப்பாவின் பழக்கம்தான். சில நேரங்களில் துக்க சம்பவங்களின்போது தூக்கத்திலே வாய்விட்டு அழவும் அழுவார்.

அப்பா மிக மென்மையானவர். மற்றவர்கள் உணர்வுகளுக்கு மிக அதிகமாகவே மதிப்பு கொடுப்பவர். பிறர் தம்மிடம் உதவி என கேட்கக் கூச்சப்பட்டுக்கொண்டு கேட்கலாமா வேண்டாமா என மனதுக்குள் நினைத்தாலே முகத்தை வைத்தே புரிந்துகொண்டு தானாகவே உதவி செய்பவர். தான் பணியில் இருந்த காலகட்டத்தில் சக நண்பர்களுக்கும், சக ஊழியர்களுக்கும் உதவி செய்துள்ளார்.

ஒருமுறை கிண்டி அலுவலகத்தில் பணியில் இருந்தபோது தன் சீனியர் ஆஃபீஸர் ஒருவருக்கு ஹார்ட் அட்டாக். துடித்திருக்கிறார். ஆஜானு பாகுவாக இருப்பார். அப்பாவும் அவரும் மட்டுமே அன்று நைட் டியூட்டியில். எதிரே சாலையை கடந்து சென்றால் பாலாஜி மருத்துவமனை. ஆம்புலன்ஸ் சொல்லி வருவதற்குள் ஏதேனும் ஆகிவிடப் போகிறதே என்ற கவலை. ஆனாலும் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து சொன்னதுடன், செக்யூரிட்டியுடன் தானும் சேர்ந்து அவரை தூக்கிக்கொண்டு ஒரு ஆட்டோவில் ஏற்ற முயற்சித்த நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட  ‘சரியான நேரத்தில் கொண்டு வந்துவிட்டீர்கள்’ என்று டாக்டர்கள் பாராட்டினார்கள். அதன் பிறகு அவர் பதினைந்து வருடங்கள் நல்லபடியாக இருந்தார். அதன்பிறகு அவருக்கு அப்பாவின் மீது தனி பாசம்.  ‘என் உயிரை காப்பாற்றியவர்’ என்று வாய் நிறைய சொல்லிக்கொண்டே இருப்பார்.

தேவையானவர்களுக்கு கல்லூரி அட்மிஷனுக்கு கல்லூரி முதல்வரை சந்தித்துப் பேசுதல், ஒரு பள்ளியில் இருந்து மற்றொரு பள்ளிக்கு மாற்றல் தேவையாக இருப்பவர்களுக்கு பள்ளி தலைமையை சந்தித்துப் பேசுதல், தாத்தா, பெரியப்பா இவர்கள் ஹோமியோபதி மருத்துவர்களாக இருந்து கிளினிக் வைத்திருந்ததால் உடல்நலம் சார்ந்து ஹோமியோபதி மருத்துவ ஆலோசனை ஏதும் என்றால் செய்வது என அவரது பரோபகார குணத்துக்கு நீள அகலம் எல்லாம் கிடையாது.

நண்பர்களாக இருந்தாலும் உறவுகளாக இருந்தாலும் இப்படித்தான். அம்மாவும் இதே அலைவரிசையில் இருந்ததால் எங்கள் அப்பா அம்மாதான் எங்கள் குடும்பத்துக்கு ரோல் மாடல் பெற்றோர்.

என் அப்பாவுடன் 15 ஆண்டுகள் பணி புரிந்த எங்கள் நெருங்கிய குடும்ப நண்பருக்கு நேற்று ஜூம் மீட்டிங்கில் இரங்கல் கூட்டம். அதில் கலந்துகொண்ட அப்பா மனதளவில் சோர்ந்துவிட்டார்.

நண்பருக்கு இரண்டு மகன்கள். மனைவி இறந்துவிட்டார். ஏற்கெனவே சில வருடங்களுக்கு முன்னர் ஆஞ்சியோ செய்து ஸ்டெண்ட் வைத்திருந்தவர். சென்ற வாரம் திடீரென மூச்சு விட சிரமம் வர, எம்.ஐ.ஓ.டியில் ஆஞ்சியோ செய்து வீட்டுக்கு அழைத்து வந்திருக்கின்றனர். இரண்டு நாட்கள் நல்லபடியாக இருந்துள்ளார். திடீரென ஜூரம் வர எம்.ஐ.ஓ.டிக்கே அழைத்துச் சென்றிருக்கின்றனர். கொரோனா டெஸ்ட் எடுத்திருக்கின்றனர். பாசிட்டிவ் என வர அங்குள்ள கொரோனா வார்டில் இடம் இல்லாததால் வேறொரு தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். முதலில் கொஞ்சம் உடல்நிலை சீரானதாகவும் பின்னர் திடீரென நேற்றைய முன்தினம் காலை மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு சிகிச்சைப் பலன் அளிக்காமல் இறந்துவிட்டார்.

அவருடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கவனித்துக்கொண்ட அவரது மூத்த மகனுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துவிட அவர் வேறொரு மருத்துவமனையில்.

அப்பாவின் உடலைக் கூட அவரால் பார்க்க முடியாது என்ற நிலை.

மருத்துவமனையில் பேக் செய்யப்பட்ட உடலை இரண்டாவது மகனுக்கும், நண்பரின் சகோதரிக்கும் தூரத்தில் இருந்து காட்டிவிட்டு எடுத்துச் சென்றுவிட்டனர்.

அவருக்குத்தான் நேற்று ஆன்லைனில் இரங்கல் கூட்டம். நானும் உடன் இருந்தேன். இரங்கலில் கலந்துகொண்டவர்களுக்கு 65 முதல் 80 வயதுவரை இருக்கும். ஒவ்வொருவரும் மறைந்தவரின் பெருமைகளைப் பேசினார்கள். பேசி முடிக்கும்போது பெரும்பாலானோர் பேச முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

மீட்டிங்கில் கலந்துகொண்ட அத்தனை பெரியவர்களின் முகத்திலும் நண்பரைப் பிரிந்த சோகம். வயதான காலத்தில் உடலைக்கூட உறவுகள் கண்களால் பார்க்க முடியாத அளவுக்கு அனாதை போல இறக்க வேண்டி வந்துவிடுமோ என்ற பயம். தங்கள் பிள்ளைகளுக்கு தொந்திரவாக இருந்துவிடுவோமே என்ற திகில். இந்த நேரத்தில் நமக்கு எதுவும் ஆகிவிடக் கூடாதே என்ற ஒருவித சங்கடமான உணர்வு மேலோங்கி இருந்திருக்கும்.

இரங்கல் தெரிவிக்கும்போது அப்பாவுக்கு முதல் வார்த்தையை விட்டு அடுத்த வார்த்தைக்கு நகர்ந்து பேசவே முடியவில்லை. கேவிக் கேவி அழ ஆரம்பித்துவிட்டார்.

எனவே யாராக இருந்தாலும் சமூக இடைவெளி, மாஸ்க், கிளவுஸ், ஆரோக்கியமான உணவு, சுத்தம் சுகாதாரத்துடன் பாதுகாப்பாக இருப்பது நமக்கும் பிறருக்கும் நல்லது.

அப்பாவின் மனதை திசை திருப்ப அப்பாவுக்குப் பிடித்த  ‘ஊட்டி வரை உறவு’ சினிமாவை தேடி எடுத்துப் போட்டு பார்த்துவிட்டுதான் தூங்கினோம்.

ஆனாலும் அப்பா தூக்கத்திலும் அழுதார். நேரில் அழுவதைவிட பல மடங்கு சப்தமாக.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 18 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon