ஹலோ With காம்கேர் -187: லாக் டவுனில் ஒரு சனிக்கிழமைப் பொழுது!

ஹலோ with காம்கேர் – 187
July 5, 2020

கேள்வி: லாக் டவுனில் ஒரு சனிக்கிழமை எனக்கு எப்படி செல்கிறது தெரியுமா?

நேற்று சனிக்கிழமை.

விடியற்காலை மூன்று மணிக்கு அலுவலக வேலை, எழுத்து வேலை, அனிமேஷன் பணிகள் என சுறுசுறுப்பாகத் தொடங்கும் என்னுடைய தினங்கள். நேற்றும் அப்படியே.

காலை 6 மணிக்கு மொட்டை மாடியில் ஒரு மணி நேரம் வாக்கிங் அம்மாவுடன். அங்கேயே ஐந்து நிமிடங்கள் பிராணாயானம்.

அப்பா ஐபேடில் ஸ்லோகம் போட்டுக்கொண்டு  ட்ரெட் மில்லில் வாங்கிங் செல்வார். அப்பா எழுந்தவுடனேயே பிராணாயானம் முடித்துவிடுவார்.

நேற்று மொட்டை மாடி வாக்கிங்கில் காகங்கள், புறாக்கள், அணில்கள், குருவிகள், மரம்கொத்திகள், கிளிகள் இவற்றுடன் ஒரு குரங்கும் வந்திருந்தது. ஆனால் காகங்களுக்கு அது விநோதமாக இருந்ததால் குரங்கைச் சுற்றி சுற்றி கூட்டமாகப் பறந்து அதை மிரள வைத்தன. மொட்டை மாடி சுவரில் மெதுவாக நடந்து சென்று குரங்கு எங்கோ தாவி மறைந்த பின்னர்தான் காகங்கள் அமைதியாகின.

வாக்கிங் முடிந்து முதல் நாள் இரவு ஊற வைத்த வெந்தயம், கறிவேப்பிலை, வேக வைத்த நெல்லிக்காய், பெருங்காயம், இஞ்சி என ஐம்பெரும் பொருட்களை மிக்ஸியில் அரைத்து மோரில் கலந்து குடித்துவிட்டு, மாஸ்க், கிளவுஸ் பாதுகாப்புடன் பழமுதிர்சோலைக்கு காய்கறிகள் வாங்க அப்பாவும் நானும் கிளம்பினோம்.

பைக் / கார் எடுத்துச் செல்லக் கூடாது என்ற அரசு ஆணை இருப்பதால் நடந்தே சென்றோம். அந்தக் கட்டுப்பாடு இல்லை என்றால் கார் எடுத்துச் செல்வோம். கடை பக்கத்தில்தான் என்றாலும் ஒரு வார காய்கறிகளை தூக்கி வருவது கடினம் என்பதால்.

அப்பா சமைப்பதில் மட்டுமல்ல, காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை பதம் பார்த்து வாங்குவதிலும் எக்ஸ்பர்ட்.

வீட்டை விட்டு கீழே இறங்குவதற்கு முன்பே கழைக்கூத்தாடியின் மேள சப்தம் கேட்டது. ஒரு சிறுவன் அவன் அம்மா இசைக்கும் மேள சப்தத்துக்கு ஈடாக சாலையில் குட்டிக் கரணம் போட்டுக்கொண்டிருந்தான். நான் பிஸ்கட் பாக்கெட் இரண்டையும், கொஞ்சம் பணமும் எடுத்துக்கொண்டேன் அந்தச் சிறுவனிடம் கொடுப்பதற்காக.

இரண்டு நாய்கள் ஒன்று படுத்த நிலையிலும், மற்றொன்று உட்கார்ந்த நிலையிலும் அவனுடைய குட்டிக்கரணத்தை ரசித்துக்கொண்டிருந்தன.

அவர்களுக்குப் பின்னால் ஒரு மாடு நிதானமாக நடந்து வந்து அசை போட்டபடி நின்றது.

எங்களைப் பார்த்ததும் அந்தத் சிறுவன் ஓடி என்னை நெருங்கி வந்தான். நான் ஒரு அடி தள்ளி நின்று பிஸ்கட் பாக்கெட்டையும் பணத்தையும் கொடுத்தேன். அவன் அம்மாவிடம் ஓடிச் சென்று கொடுத்துவிட்டு வந்தான்.

மற்ற நாட்களில் தினமும் ப்ரஷ்ஷாக காய்கறிகள் வாங்கி வந்துவிடுவார் அப்பா. இந்த லாக் டவுன் காலத்தில் ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை சனிக்கிழமைதோறும் வாங்கி வைத்துக்கொள்கிறோம்.

எங்கள் தெருவைத் தாண்டிய சாலையில் வழி நெடுக சிறு காய்கறி வியாபாரிகள் கடை விரித்திருந்தார்கள். எப்போதும் அந்த சாலையில் கடைகள் எதுவும் இருக்காது. இப்போதுதான் பார்க்கிறேன். விசாரித்ததில் அவர்கள் மார்க்கெட்டில் கடைபோடும் சிறு வியாபாரிகள். இப்போது லாக் டவுன் காலத்தில் வீடுகள் அடர்ந்திருக்கும் தெருக்களில் கடை விரித்திருக்கிறார்கள் என சொன்னார்கள். அரசு கொடுத்திருக்கும் நேரத்துக்குள் விற்பனை முடிந்து கிளம்பி விடுவார்களாம்.

சிறு வியாபாரிகளிடம் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு எங்களுக்கும் ஆசைதான். அவர்களுக்கும் வியாபாரம் கொடுத்த மாதிரி இருக்கும் என்ற எண்ணத்தில் அவர்களிடம் காய்கறிகள் வாங்கினால் அவர்கள் பொறுக்கி எடுக்க அனுமதிப்பதில்லை. பொறுக்காமல் எடுத்தால் வேஸ்டேஜ் நிறைய இருக்கிறது.

எங்கள் வேளச்சேரி பழமுதிர்சோலை எப்போதுமே ஒரு ஒழுங்கு நேர்த்தி இருக்கும். அந்தக் கடையின் உரிமையாளர் உள்ளேயேதான் பணியாளர்களுடன் பணியாளராக வேலை செய்துகொண்டிருப்பார். நீண்ட நாட்கள் எனக்கு அவர்தான் உரிமையாளர் என்றே தெரியாது. அத்தனை இணக்கமாக பணியாளர்களுடன் ஒருவராக இருந்து வேலை செய்ய முடியுமா என எனக்கு ஆச்சர்யம்தான்.

4 கேஷ் கவுண்ட்டர் இருக்கும். நான்கிலும் இளம் பெண்கள்தான். சீருடையில் பளிச்சென்று சிரித்த முகத்துடன் கருமமே கண்ணாயினராக இருப்பார்கள். இப்போது மாஸ்க், கிளவுஸ் சகிதம் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அதே சுறுசுறுப்பு. வேகம். நேர்த்தி. காய்கறிகளை பைகளில் எடுத்து வைத்துவிட்டு லாவகமாக கறுவேப்பிலையை ஒடித்து பைகளில் திணிக்கும் அழகே அழகுதான்.

சில நேரங்களில் கடை உரிமையாளர் இருக்க மாட்டார். அப்போதும் பணியாளர்கள் அதே ஒழுங்குடன் வேலை செய்து கொண்டிருப்பார்கள். அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் தங்கள் பணியில் காட்டும் நேர்த்தி என்னை ஒவ்வொரு முறையும் வியக்க வைக்கும். இப்படிப்பட்ட பணியாளர்களைப் பெறுவதற்கு நிச்சயம் கடை உரிமையாளர் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என நினைத்ததுண்டு.

நேற்று நாங்கள் சென்றபோது போதுமான இடைவெளிவிட்டு கியூ. வட்டம் போட்டு அதனுள் நிற்கச் சொல்கிறார்கள். நானும் அப்பாவும் தனித்தனி வட்டத்தில்.

பழமுதிர்சோலைக்கு அருகே இருந்த யோகநரசிம்மர் ஆலயம் மூடப்பட்டிருந்தது. சாதாரணமாக சனிக்கிழமைகளில் கூட்டம் நெரியும். ஆனால் நேற்றிருந்த நிலை மனதுக்கு என்னவோ சங்கடமாக இருந்தது.

கடந்து செல்லும் பைக்குகளை கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு நடுத்தர வயது நபரின் முகத்தில் மாஸ்க் வாயைத் தாண்டி கீழே தொங்கிக்கொண்டிருந்தது. முன்னே ஐந்தாறு வயதில் ஒரு பெண். மாஸ்க் போட்டிருந்தாள். அந்த நபர் நன்றாக இருமிக்கொண்டே பைக்கில் கடந்து செல்கிறார். அதிர்ச்சியாக இருந்தது. ஒன்று அவர் மாஸ்க் போட்டிருந்த விதம். இரண்டாவது தன் குழந்தையின் முகத்தில் நேரடியாக எச்சில் பரவுமாறு இருமிக்கொண்டே சென்றது.

மூன்று பேர்களுக்கு மேல் கடையினுள் அனுமதி இல்லை. உள்ளே ஒவ்வொருவராகச் செல்லும்போது கைகளில் சேனிடைசர் தெளிக்கிறார்கள். காய்கறிகளை சீக்கிரம் பொறுக்கி எடுத்துச் செல்லுங்கள் என உரிமையாளர் அவ்வப்பொழுது சொல்லிக்கொண்டிருக்கிறார்.

காய்கறிகளுக்கு மஞ்சள் தண்ணீர், உப்பு தண்ணீர், சாதா தண்ணீர்  என மூன்று முறை ஸ்நாநம் செய்து காய வைப்பதற்காக உணர்த்திவிட்டு, பைகளை டெட்டால் விட்டு துவைத்து உணர்த்தினார் அம்மா. பிறகு நாங்கள் குளித்து விட்டு வந்து அம்மா தயாரித்து வைத்திருந்த வீட்டு தோட்டத்து முருங்கைக் கீரை போட்ட கோதுமை மாவு சத்துக் கஞ்சி சாப்பிட்டோம்.

அப்பா பூஜையில் இருக்கும்போது சென்னை கார்பரேஷன் அலுவலகத்தில் இருந்து போன் அழைப்பு வந்தது. வீட்டில் என் அப்பா அம்மாவின் பெயர்களை தனித்தனியாக உறுதி செய்துகொண்டு  உடல் நிலை எப்படி இருக்கிறது, பிபி, சுகர், ஹார்ட் பிரச்சனை இவற்றுக்கு மருந்து மாத்திரைகள் சரியாக எடுத்துக்கொள்கிறார்களா என விசாரித்துவிட்டு ஏதேனும் உதவி தேவை என்றால் இந்த எண்ணில் அழைக்கவும் என சொல்லி தன் பெயரையும் குறிப்பிட்டு மொபைலில் சேவ் செய்து வைத்துக்கொள்ளச் சொன்னார். குரலில் அத்தனை கனிவு.

மதியம் நிறைய காய்கறிகளுடன் சத்தான சாப்பாடு. பிறகு ஈரம் காய வைத்திருந்த காய்கறிகளை மீண்டும் துடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தோம்.

நேற்று சனிக்கிழமை என்பதால் ஸ்டாஃப்களுடன் ஆன்லைன் மீட்டிங் கிடையாது. அலுவலக வேலை இல்லை. ஆனாலும் நான் செய்கின்ற கிரியேட்டிவ் பணிகள் சில பெண்டிங் இருந்தது. அதை செய்ய உட்கார்ந்தேன்.

இதற்குள் அப்பா அம்மா கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து எழுந்தார்கள்.

4 மணி அளவில் இஞ்சி லெமன் டீ சாப்பிட்டோம். மீண்டும் நான் அலுவலக வேலையில் மூழ்கினேன். அப்பாவும் அம்மாவும் புத்தகம் படித்துகொண்டே டிவியை மியூட்டில் போட்டு சேனல் செய்திகளை(யும்) படித்துக் கொண்டிருந்தார்கள்.

மாலை ஆறு மணிக்கு அம்மாவும் நானும் மொட்டை மாடி வாங்கிங் கிளம்பினோம், பறவைகளுக்கான ஆகாரங்களுடன்.

நேற்று வெவ்வேறு வயது வித்தியாசத்தில் சிறுவர்கள் பட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள் தூரத்தில் தெரியும் ஒரு அப்பார்ட்மெண்ட்டில். எதிர் அப்பார்ட்மெண்ட்டில் வழக்கம்போல ஒரு சிறுவன் சந்தியாவந்தனம் செய்துகொண்டிருந்தான். அக்கம் பக்க மாடிகளில் வயதானவர்கள் வாக்கிங்கில் இருந்தார்கள்.

இப்போதெல்லாம் எல்லோருக்கும் பிக்னிக் ஸ்பாட் மொட்டைமாடிதான் என நினைத்துக்கொண்டேன்.

அன்றைய தினம் என் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்கள் குறித்து அம்மாவுடன் பேசியபடி நடப்பேன். அப்பாவுடன் வெளியில் செல்லும் நேரங்களில் அப்பாவுடன் பகிர்ந்து கொள்வேன்.

அப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போதே அடுத்த நாளுக்கான கான்செப்ட் கிடைத்துவிடும்.

மாலை நேரக் குளியலுக்குப் பிறகு சுவாமிக்கு விளக்கேற்றி சூடம் காண்பித்து விட்டு நாங்கள் ஏழு மணிக்குத் திரும்பி வருவதற்குள் இரவு டிபன் செய்து வைத்திருப்பார் அப்பா. மாடிப்படியில் கீழிறங்கும்போதே சூடம் வாசனை மூக்கைத் துளைக்கும். வீட்டினுள் தெய்வீகமாக ஸ்லோகங்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்.

நாங்களும் குளித்து விட்டு வந்து சாப்பிடுவோம். பிறகு அமெரிக்காவில் இருந்து சகோதரியும் சகோதரனும் போனில் பேசுவார்கள். ஏதேனும் புத்தகம் படிக்க வேண்டி இருந்தாலோ அல்லது நல்ல சினிமா ஏதேனும் அமேசான் ப்ரைமில் பார்க்க இருந்தாலோ அதை முடித்துவிட்டு இரவு சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், ஓமம், மஞ்சள், கடுக்காய் சேர்த்து அரைத்து வைத்திருக்கும் பொடியை வெந்நீரில் கலந்து குடித்துவிட்டு உறங்கச் செல்வோம்.

இப்படியாக செல்கிறது லாக் டவுனில் சனிக்கிழமைகள்!

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 32 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon