ஹலோ With காம்கேர் -189: வீட்டு வாடகை மட்டுமே வருமானமா? (sanjigai108.com ஜூலை 8, 2020)

ஹலோ with காம்கேர் – 189
July 7, 2020

கேள்வி: வீட்டு வாடகையை மட்டுமே வருமானமாகக் கொண்டிருப்பவர்கள் என்ன செய்வார்கள்?

அந்த தாத்தா பாட்டிக்கு வயது எழுபதைக் கடந்திருக்கும். அவர்கள் வசிக்கும் வீட்டின் மாடியில் ஒரு குடித்தனம் உண்டு. கணவன் அச்சு புத்தகங்களை பிரிண்ட் செய்யும் அச்சகத்திலும், மனைவி ஏதோ ஒரு தனியார் நிறுவனத்தில் அட்டெண்டர் வேலைக்குச் செல்கிறார்கள். இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஒரு மகனும், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் ஒரு மகளும் உண்டு. உடன் அந்தப் பெண்ணின் மாமியார். வாடகை ஆறாயிரம் கொடுக்கிறார்கள். அட்வான்ஸாக ஆறு மாத வாடகைக் கொடுத்துள்ளார்கள்.

கொரோனா லாக் டவுன் நேரத்தில் மார்ச் ஏப்ரலில் வேலைக்குச் செல்லவில்லை என்பதால் வாடகை கொடுக்க முடியவில்லை. ‘கொஞ்சம் பொறுத்துகுங்க, வேலைக்குச் சென்றதும் சேர்த்துக் கொடுத்திடறோம்’ என்று சொன்னார்கள். மே மாதம் கொரோனா சென்னையில் அதிகரிக்கத் தொடங்கியவுடன் சென்னையில் இருக்க வேண்டாம் என முடிவெடுத்து குடும்பத்துடன் அவர்கள் சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இதோ அதோ என்று நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. வாடகை கொடுக்கவில்லை. எப்படியும் கொரோனா குறைந்தவுடன் சென்னைக்கு வந்துவிடுவதாக போன் செய்தார்கள்.

தாத்தா பாட்டியின் நிலையோ வாடகை வந்தால்தான் சாப்பிட முடியும். வேறு வருமானம் கிடையாது. தாத்தா ஒரு இரும்புப் பட்டறையில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தார். பாட்டியோ தனியார் நிறுவனத்தில் வேலையில் இருந்தார். வயதானவுடன் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வீட்டுடன் இருக்கிறார்கள். ஒரே மகன். தங்கள் தகுதிக்கும் மீறி அந்த காலத்திலேயே ஆங்கில மீடியத்தில் படிக்க வைத்து இரட்டை பட்டம் பெற வைத்து சிங்கப்பூருக்கு ஆராய்ச்சிக்காக அனுப்பினார்கள். அங்கேயே நல்ல வேலையில் சேர்ந்து திருமணம் செய்துகொள்ள ஒரு பெண்ணையும் பார்த்துக்கொண்டு சென்னை வந்தான். அப்பா அம்மாவுக்கு 500 சதுர அடியில் ஒரு வீடு கட்டிக்கொடுத்தான். கீழே ஒரு வீடு. மேலே ஒரு வீடு. அத்துடன் சரி. அதன் பிறகு அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என பார்க்கவில்லை. போனிலும் பேசுவதில்லை. திருமணத்தைக்கூட சிங்கப்பூரிலேயே பெண்ணின் குடும்பத்துடன் தானே நடத்திக்கொண்டான். பேரன் பேத்தி பிறந்திருப்பார்கள். அவர்களையும் கண்களில் காட்டவில்லை.

இப்போது அதெல்லாம் பிரச்சனை இல்லை. வாடகை வராவிட்டால் என்ன செய்வது? கிராமத்துக்குச் சென்றவர்கள் நிலைமை சரியாகும்வரை எப்படி வாடகை கொடுப்பார்கள். மார்ச் மாதத்தில் இருந்து ஆகஸ்ட் வரை அட்வான்ஸில் இருந்து வாடகையைக் கழித்துக்கொள்ளலாம் என்றாலும் அதன் பிறகு என்ன செய்வது?

அச்சு புத்தகங்களை எல்லாம் நிறுத்தி விட்டார்கள் என செய்தியில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். அச்சகத்தில் வேலை செய்யும் மாடி வீட்டு பையனுக்கு எப்படி வேலை தொடரும்? அந்தப் பெண் பணி செய்த தனியார் நிறுனத்தில் பலரை வேலையில் இருந்து நீக்கிவிட்டதாகச் சொன்னாள். அவளையும் சேர்த்துத்தான்.

அவர்கள் திரும்ப வந்து, வேலை தேடி செட்டில் ஆகி எப்போது வாடகை தருவார்கள். எப்போது தங்கள் பொருளாதார நிலை சீராகும் என்ற கவலை அரித்தெடுக்கிறது தாத்தாவுக்கும் பாட்டிக்கும்.

வாடகை வந்தால்தான் அவர்கள் இருவரும் சாப்பிட முடியும் என்கின்ற சூழலில் தொலைக்காட்சியில் வீட்டு உரிமையாளர்கள் வாடகைக் கொடுக்க முடியாதவர்களிடம் வாடகைக்  கேட்டு அழுத்தம் கொடுக்கக் கூடாது என்றும் அதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதாகவும் பிரேக்கிங் நியூஸில் போட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த செய்தியைப் படித்ததும் அவர்களுக்கு பகீர் என்றது. இனி என்ன செய்யப் போகிறோம் என்ற கவலை தொற்றிக்கொண்டது.

மாடி வீட்டு பையனுக்கு போன் செய்யலாம் என்று நினைத்து போன் செய்தார்கள். இரண்டாம் வகுப்புப் படிக்கும் மகன்தான் போனை எடுத்தான். மழலையில் ‘அப்பாவும் அம்மாவும் வேலைக்குக் கிளம்பிட்டிருக்காங்க…’ என்றான்.

அதற்குள் மாடி வீட்டு பையன் போனை வாங்கி ‘நல்லாயிருக்கீங்களா’ என கேட்டுவிட்டு தானும் தன் மனைவியும் தினமும் காய்கறி தோட்டத்தில் காய்கறிகளை பறித்து பிரித்தெடுக்கும் ஒரு வேலைக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் வரும் வருமானத்தில் கொஞ்சம் பணம் அனுப்பி வைப்பதாகவும் சொன்னார்.

வீட்டை காலி செய்துகொடுத்தால் வேறு யாரையாவது குடி அமர்த்திக்கொள்கிறோம் என்று சொல்ல நினைத்து போன் செய்த தாத்தா அந்த வார்த்தைகளை மனதுக்குள்ளேயே அடக்கிக்கொண்டு ‘எல்லோரும் நல்லா இருக்கீங்களா… பார்த்து பத்திரமா இருங்க… பசங்கள ஜாக்கிரதையா பார்த்துக்குங்க…’ என்று சொல்லிவிட்டு போனை வைத்தார். பாட்டிக்குத் தாத்தா சொல்லே வேதவாக்கு.

அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் அக்கவுண்ட்டுக்கு கொஞ்சம் பணம் வந்திருந்தது.

நம்பிக்கைதானே வாழ்க்கை!

இந்தப் பதிவில் சொல்லி இருப்பது ஒரு தாத்தா பாட்டியின் வாழ்க்கைச் சூழல். குழந்தைகளே இல்லாத வயதான பெற்றோர்கள், பென்ஷன் வாங்காதவர்கள், திருமணமே செய்துகொள்ள முடியாத மாற்றுத்திறனாளிகள், தாய் தந்தையை இழந்த தங்கள் பேரன் பேத்திகளை படிக்க வைத்து வளர்த்துக்கொண்டிருக்கும் பெரியோர்கள் என ஏகப்பட்ட சூழல்கள் உள்ளன. அவர்களில் பலர் வாடகையை நம்பியே வாழ்க்கையை ஓட்டுபவர்களாக இருக்கலாம். அவர்களுக்காகவே இந்தப் பதிவு.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

சஞ்சிகை108 இணையதளத்தில்!

ஜூலை 8,  2020  புதன்  கிழமை சஞ்சிகை108 என்ற இணையதளத்தில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது
https://sanjigai108.com/

(Visited 77 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon