ஹலோ with காம்கேர் – 188
July 6, 2020
கேள்வி: பிறரை சந்தோஷப்படுத்துவது அத்தனை சுலபமா?
நீங்கள் உங்கள் அனுபவங்களை எழுதும்போது உங்கள் கஷ்டங்களைவிட சந்தோஷங்களையே அதிகம் எழுதுகிறீர்கள், அப்படியானால் உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்களே இல்லையா என என்னிடம் சிலர் கேட்கிறார்கள்.
என் சந்தோஷங்களை எழுதும்போது நான் இன்னும் உற்சாகமாகிறேன். என்னைப் பொருத்தவரை கஷ்டங்கள் என்பது சந்தோஷம் கொடுக்காத, மன உளைச்சலை ஏற்படுத்தும் எல்லாமே கஷ்டங்கள்தான்.
உதாரணத்துக்கு ஃபேஸ்புக் பதிவுகளில் புரிதல் இல்லாமல் பின்னூட்டமிட்டு நம் நேரத்தை ஒதுக்கி எத்தனை முறை விளக்கினாலும் புரிந்துகொள்ளாமல் மன உளைச்சலை ஏற்படுத்தி ப்ளாக் அல்லது அன்ஃப்ரண்ட் வரை கொண்டு செல்லும் செயல்பாடுகளும் கஷ்டங்கள்தான்.
வரும் மாதங்களில் நிறுவன பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கும் அளவுக்கு ப்ராஜெக்ட்டுகளை வலுபடுத்த வேண்டுமே என்கின்ற சூழலும் கஷ்டமான காலகட்டம்தான்.
உடல்நலம் சரியில்லாமல் நாமோ நம் குடும்பத்தாரோ மருத்துவமனையில் இருந்தாலும் அதுவும் கஷ்டம் என்ற பிரிவில்தான் வரும்.
சந்தோஷம் என்பது சின்ன சின்ன விஷயங்களிலும் நிறைவை ஏற்படுத்திக்கொள்வதால் கிடைக்கும் அற்புதம். கஷ்டம் என்பது அதே சின்ன சின்ன விஷயங்களில் மனம் சஞ்சலப்படுவது. இரண்டுக்குமே டிஜிட்டல் உலகிலேயே உதாரணம் காட்ட முடியும்.
இன்று சின்னதோ பெரியதோ நம்மிடம் உதவி பெறும் பலர் பெரிதாக நன்றி எல்லாம் சொல்லிவிடுவதில்லை. காரணம் அவர்கள் கேட்பதை கேட்ட பதத்திலேயே நாம் உதவவில்லை என்பதால் இருக்கலாம். நம்மால் உதவ முடியாதபோது அவர் கேட்ட அதே உதவியை வேறு வடிவில் செய்திருக்கலாம். இரண்டும் இல்லாமல் தற்சமயம் உதவ வாய்ப்பில்லை என்று நேர்மையாக பதில் அளித்திருக்கலாம்.
எதுவாக இருந்தாலும் அவர்களை மதித்து நாம் சொல்லும் பதிலுக்கு அல்லது செய்யும் செயலுக்கு சின்னதாக நன்றியைகூட தெரிவிக்க இயலாதவர்கள் (நன்றி கூட வேண்டாம், குறையாவது சொல்லாமல் இருக்கலாம்) பெருகிவிட்ட இந்த நாளில் அபூர்வமாக ஒரு மாணவரின் செயல்பாடு வியக்க வைத்தது. சந்தோஷத்தையும் கொடுத்தது.
ஒரு முறை ஒரு கல்லூரி மாணவர் ஒருவர் என்னிடம் கேம்பஸ் இண்டர்வியூவுக்கு பயன்படும் வகையில் ஏதேனும் புத்தகங்கள் எழுதி உள்ளீர்களா என கேட்டிருந்தார். நான் எழுதி சூரியன் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘IT துறை இண்டவியூவில் ஜெயிப்பது எப்படி?’ என்ற புத்தகத்தையும் மேலும் சில ஆங்கில நூல்களையும் வெப்சைட் லிங்குகளையும் அவருக்கு விரிவாக அனுப்பி இருந்தேன். மேலும் கேம்பஸ் இண்டர்வியூவுக்குத் தயாராகவும் வெற்றிபெறவும் சில நுணுக்கமான டிப்ஸ்களையும் அனுப்பி இருந்தேன்.
அதற்கு அந்த மாணவர் என்ன பதில் அனுப்பினார் தெரியுமா?
‘நன்றி Mam உங்களிடம் உதவி கேட்டேன் என்பதற்காக, இந்த மாணவனுக்காக உதவ நேரம் ஒதுக்கிய உங்களின் இந்த செயல் சிலிர்க்க வைக்கிறது. நான் நிச்சயமாக நல்ல வேலையில் சேர்ந்து, நீங்கள் செய்யும் சில செயல்களை செய்து பிறருக்கும் உதவுவேன் .Really you are Inspiring Mam. Thanks once again’
‘நானும் உங்களைப்போல பிறருக்கு உதவுவேன்’ என சொல்லிய அந்த ஒரு விஷயம் எத்தனை பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்தது தெரியுமா?
சின்ன விஷயங்களில் பெரிதாக சந்தோஷப்பட இதைவிட வேறென்ன வேண்டும்.
அடுத்து, சின்ன விஷயங்களில் உண்டாகும் மன உளைச்சலுக்கு ஓர் உதாரணம்.
நாம் படித்து ரசித்த ஒரு புத்தகத்துக்கு நாம் நம் நேரத்தை ஒதுக்கி பக்கம் பக்கமாக பாராட்டி விமர்சித்து பதிவை எழுதி இருப்போம். அதை ஷேர் செய்யும்போது கூட சின்னதாக ஒரு பாராட்டையும் நன்றியையும் கொடுக்க மனமில்லாமல் அப்படியே ‘ஜஸ்ட் லைக் தட்’ பதிவாக ஷேர் செய்யும் ஒரு சில நூலாசிரியர்கள், அதே புத்தகத்துக்கு அவர் பிரபலம் என கொண்டாடி மகிழும் ஒருவர் ‘புத்தகமும், எழுத்தும் அருமை’ என்று ஒரு வரி பாராட்டி பதிவிட்டிருந்தால் அதற்கு வார்த்தைகளைத் தேடித்தேடி எடுத்து நன்றி சொல்லி மகிழ்ந்திருப்பார்.
அப்போது உண்டாகும் சின்ன மன உளைச்சல்கூட கஷ்டம்தான்.
ஆக, சந்தோஷம் என்பதற்கும் கஷ்டம் என்பதற்கும் நீள அகலம் எல்லாம் கிடையாது. அது அவரவர் மனப்பக்குவம்.
நாம் செய்யும் செயலால் மற்றவர்களை சந்தோஷப்படுத்துவது என்பது முடியாத காரியம். ஏனெனில் அதை அவர்கள் தொடர்ச்சியாக நம்மிடம் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.
பிறருக்கு உதவுவதால் அவர்கள் பெரிய அளவில் சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து செய்தால் மேலும் மேலும் மனகஷ்டங்கள் மட்டுமே மிஞ்சும். அதைவிட்டு, பிறருக்கு உதவும்போது நமக்கு சந்தோஷம் / மனநிறைவு கிடைத்தால்போதும் என்ற அளவில் நின்றுகொண்டால் எல்லோரும் செளக்கியமாக வாழ முடியும்.
நாம் செய்யும் செயல் நமக்கு சந்தோஷம் கொடுத்தால் நம்மை உத்வேகப்படுத்தினால் நாம் உற்சாகமாக வாழ்க்கையை நகர்த்த முடியும் என்ற பக்குவம் ஏற்பட்டால் மட்டுமே நம் கஷ்டங்கள் குறையும். அதைத்தான் நான் செய்கிறேன்.
பூரிப்புகளுக்கும் எல்லைகள் கிடையாது. வலிகளுக்கும் வரையறைகள் கிடையாது.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software