ஹலோ With காம்கேர் -194: முதல் காலடி பதிப்பது அத்தனைக் கடினமா?

ஹலோ with காம்கேர் – 194
July 12, 2020

கேள்வி: முதல் காலடி பதிப்பது அத்தனைக் கடினமா?

அதில் சந்தேகம் என்ன. கடினம் என்று சொல்வதைவிட தைரியம் அதிகம் வேண்டும் என்று சொல்லலாம்.

நம் நாட்டில் தொழில்நுட்பம் காலடி எடுத்து வைக்க யோசித்துக் கொண்டிருந்த நாட்களிலேயே கல்வித் துறையில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடமாக அறிமுகம் செய்யப்பட்ட முதல் செட்டிலேயே கம்ப்யூட்டர் சயின்ஸை பாடமாக எடுத்து இளங்கலை கம்ப்யூட்டர் சயின்ஸ், முதுகலை கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து பின்னர் எம்.பி.ஏவும் படித்து ‘காம்கேர் சாஃப்ட்வேர்’ என்ற நிறுவனம் தொடங்கி…

தமிழகமெங்கும் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதும் சாஃப்ட்வேர், அனிமேஷன், எழுத்து, புத்தகங்கள், ஆடியோ, வீடியோ என அனைத்திலும்  ‘முதன்மைக் காலடி’ பதித்ததாலோ என்னவோ…

வெளிநாடுகளில் இருந்தும் எங்கள் காம்கேருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஐஐடி மாணவர்கள் முதல் அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள்வரை என்னிடம் தொழில்நுட்பம் குறித்து ஆலோசனைகள் கேட்பது இன்றுவரை தொடர்கிறது.

இன்று நேற்றல்ல கடந்த 27 வருடங்களாகவே என்னையும் அறியாமல் எனக்கு தொழில்நுட்ப ஆலோகர் என்ற முகம் தானாகவே உண்டாகிவிட்டது.

காரணம், ஏற்கெனவே சொன்னதுதான். தொழில்நுட்பம் நம்நாட்டில் அறிமுகமாக யோசித்துக்கொண்டிருந்த காலத்திலேயே மிகப் பெரிய ரிஸ்க் எடுத்து அந்தத் துறையில் தனித்துவமாக செயல்பட முதன்மைக் காலடியை பதித்ததைச் சொல்லலாம்.

இன்று பலர் அனிமேஷனில் அசத்துகிறார்கள், யு-டியூபில் வீடியோ பதிவிடுகிறார்கள், அமேசானில் புத்தகங்கள் வெளியிடுகிறார்கள்… இதற்கெல்லாம் முன்னோடியாக நாங்கள் எங்கள் காம்கேர் மூலம் முதன்மைக் காலடியை பதிந்துள்ளோம் என்பதையும் சொல்லலாம்.

1992-களிலேயே…

எங்கள் காம்கேர் நிறுவனத்தில் நாங்கள் தயாரிக்கும் சாஃப்ட்வேர், அனிமேஷன்கள் மூலம் நான் பெறும் அனுபவங்களை தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்களாக எழுதி வெளியிட ஆரம்பித்ததேன். தமிழக மக்களுக்காக தமிழில், பிற மாநிலத்தவர்களுக்காக ஆங்கிலத்தில்.

2000-களிலேயே…

ஜாவா, ஈ.ஜே.பி போன்ற முதன்மை கம்ப்யூட்டர் லேங்குவேஜ்களால் இணையதளங்களை வடிவமைக்கத் தொடங்கினோம். தனிநபர்களுக்கும் வெப்பேஜ் வைத்துக்கொள்ளும் வகையில் எங்கள் வெப்சைட்டில் ஆளுக்கொரு வெப்பக்கம் ஒதுக்கி அதில் அவர்கள் விவரக் குறிப்புகளை பதிவிட வழிவகை செய்துகொடுத்தோம். இதனால் தனிநபர்களும் வெப்பக்கம் வைத்துக்கொள்ளும் வசதியை உருவாக்கினோம்.

ஆடியோ புத்தகங்கள் (ABT – Audio Based Tutorial),  வீடியோ புத்தகங்கள் (VBT – Video Based Tutorial), கம்ப்யூட்டர் புத்தகங்கள் (CBT – Computer Based Tutorial), இணைய புத்தகங்கள் (WBT – Web Based Tutorial) என பலவகைப்பட்ட புத்தகங்களை வெளியிட்டு இன்றைய இ-புத்தகங்கள், யு-டியூப் வீடியோக்களுக்கு எல்லாம் முன்னோடியாக விளங்கினோம்.

இதே காலகட்டத்தில் குழந்தைகளுக்காகவும், பெரியோர்களுக்காகவும் கதை, பாடல், பக்தி, இலக்கியம் சார்ந்த அனிமேஷன் தயாரிப்புகளை வெளியிட்டுள்ளோம்.

2005-களிலேயே…

தொழில்நுட்பத்தை தொலைக்காட்சி தொடர்கள் மூலம் கிராமப்புற மக்களுக்கெல்லாம் கொண்டு சென்றோம். ஜெயா டிவி, பொதிகை தொலைக்காட்சிகளில் தொழில்நுட்பம் சார்ந்த கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்வாய்ப்பு போன்றவற்றை அறிமுகப்படுத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தினோம்.

டிடிஎன் தமிழ் டெலிவிஷன் நெட்வொர்க் மூலம் வெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு சிறப்பு தொழில்நுட்பத் தொடர்கள் நடத்தியுள்ளோம்.

யுஜிசி-யில் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பல பல்கலைக்கழகங்கள் சார்ந்து பங்கேற்றுள்ளேன்.

2010-களிலேயே…

அதற்கும் முன்னரே ‘காம்கேர் டிவி’ என்ற பெயரில் ஒரு அவரவர்கள் கம்ப்யூட்டரில் மட்டுமே இயங்குமாறு தொழில்நுட்பத் தொடர்களை அறிமுகப்படுத்தினோம்.

இதே காலகட்டத்தில் எங்கள் நிறுவன தயாரிப்புகளுக்காக யு-டியூப் சேனல் உருவாக்கினோம்.

மொபைல் தொழில்நுட்பத்துடன் இணைந்து ஆப்கள் தயாரிப்பதில் ஈடுபட்டு வருகிறோம்.

இன்று 2020-ல் நாங்கள் முதன்மைக் காலடி பதித்த பல துறைகள் அழகான பாதையில் பீடுநடைப் போடுவதையும் அந்தப் பாதையை நம் மக்கள் மிக நேர்த்தியாக பயன்படுத்துவதையும் பார்க்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.

ஒவ்வொரு அழகானப் பாதையும் தொடக்கத்தில் முட்கள் நிறைந்த யாரும் பயன்படுத்தாத தரிசு நிலமாகவே இருந்திருக்கும். அந்த இடத்தில் தைரியமாக முதல் காலடியைப் பதித்தவர்கள்தான் அந்தப் பாதைக்கு பிள்ளையார் சுழி போட்டவர்கள் எனலாம்.

அந்த வகையில் இன்று தொழில்நுட்பத்தில் உச்சம் தொட்டிருக்கும் அத்தனை துறைகளிலும் முதல் காலடியைப் பதித்து அங்கு பாதை உருவாக்கலாம் என பரிசோதனை செய்துகொடுத்து அதில் வெற்றி பெற்றதில் எங்கள் காம்கேர் நிறுவனத்துக்கு பெரும்பங்குண்டு.

சுதேசியாக இருந்து இந்திய நாட்டுக்காக இந்தியன் தயாரிப்புகளிலேயே கவனம் செலுத்தி வருவதற்கும் பெருமிதப்படுகிறேன். அப்படியே பிசினஸ் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அங்கும் நம் நாட்டுத் தயாரிப்பின் பிரதிநிதியாகவே செல்கிறேன்.

பின்புலம் திறமை + உழைப்பு + கல்வி இவற்றுடன் நல்ல அப்பா அம்மாவும் அருமையான உடன்பிறப்புகளும்.

கீதாச்சாரத்தில் எனக்கு பெரும் நம்பிக்கை உண்டு.
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.
உன்னுடையதை எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய், அதை நீ இழப்பதற்கு?
எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு?
எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 31 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon