ஹலோ with காம்கேர் – 195
July 13, 2020
கேள்வி: நீங்கள் இயங்கும் துறை என்னவெல்லாம் கற்றுக்கொடுத்தது?
இயல்பாகவே நமக்குள் இருக்கும் குணங்கள் நாம் பயணிக்கும் துறையினால் மேலும் செப்பனிடப்பட்டு நம்மை வழிநடத்திச் செல்லும். நமக்குள் பல நல்ல விஷயங்களை விதைத்துச் செல்லும். களைகளும் கூடவே வளரும்தான். அதைக் களைந்தெடுத்து நாம் பாதுகாப்பாகப் பயணித்துவிட்டால் நாம் ஒவ்வொருவரும் நம்முடைய சுயசரிதையை தைரியமாக எழுதிவிட முடியும். நம் அடுத்த சந்ததியினருக்கு உதாரணமாய் திகழ்ந்திட முடியும்.
அந்த வகையில் நான் பயணிக்கும் தொழில்நுட்பத் துறை எனக்கு பல விதைகளை விதைத்தது. அவை ஒவ்வொன்றும் தனித்தனி மரமாக வளர்ந்து இன்று தோப்பாகி உள்ளது.
மிக மென்மையான சுபாவம் கொண்ட எனக்குள் சொல்லணா தன்னம்பிக்கையை விதைத்தது.
தொட்டால் சிணுங்கியான எனக்கு, வீழ்த்தத் துடிக்கும் மனிதர்களையும் அசராமல் புறம் தள்ளிச் செல்லும் பக்குவத்தைக் கற்றுக்கொடுத்தது.
தீர்வில்லாத பிரச்சனை எதுவுமே கிடையாது, எந்த பிரச்சனையானாலும் அதற்கு ஒரு தீர்வு உண்டு என்ற மிகப் பெரிய உண்மையை உணர்த்திச் சென்றது.
எதையும் சாதிக்க முடியும் என்ற ஆழமான நம்பிக்கையை விதைத்தது.
அதிகம் பேசாதவர்களுக்கு ‘பேசுவதற்கே காசுகொடுக்க வேண்டும்’ என்று சொல்வார்களே அப்படி பேசா மடந்தையாக இருந்த என்னை பேச வைத்தது.
சின்ன வயதில் கடைகளின் வாசலில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கூல் ட்ரிங் பாட்டில்கள் தானாகவே என் கைகளுக்கு வருமாறு கற்பனை செய்த என்னை அனிமேஷன் துறையில் நுழையச் செய்து அதனை சாத்தியமாக்கியது.
திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் விழாமல் நாசூக்காக ஒதுங்கும் தன்மைகொண்ட என்னை ஆவணப்படங்களை இயக்க வைத்தது.
தான் கற்றதை பிறருக்கு கற்றுக்கொடுக்கும் மனோபாவத்தை வளர்த்தெடுத்தது.
தான் பெற்றதை மற்றவர்களுக்குப் பகிரும் மனப்பக்குவத்தை ஊக்குவித்தது.
தான் மகிழ்ந்ததை தன்னைச் சார்ந்தவர்களும் பெற வேண்டும் என்ற அழகிய மனதை தாரை வார்த்துக்கொடுத்தது.
தான் உணர்ந்ததை பிறருக்கும் எடுத்துச் சொல்லி அவர்களையும் பாதுகாப்பாக இருக்க வைக்க வேண்டும் என்ற மனப்பாங்கை அள்ளிக்கொடுத்தது.
இப்படி எனக்குத் தெரிந்ததை, புரிந்ததை, கற்றதை, பெற்றதை, மகிழ்ந்ததை, உணர்ந்ததை எனக்குள் மட்டுமே வைத்துக்கொண்டு சுமக்காமல் என்னைச் சுற்றி இயங்கும் இந்த பிரபஞ்சத்துக்கும் கற்றுக்கொடுக்கும் அற்புதமான ‘இறைக்கிற கிணறுதான் ஊறும்’ என்ற அதிசய மந்திரத்தை கற்றுக்கொடுத்துள்ளது.
அந்த மந்திரம்தான் என்னை என் துறை சார்ந்து பல பயனுள்ள கண்டுபிடிப்புகளை உருவாக்க வைத்தது.
இந்த பிரபஞ்சத்துக்கு நானும் தேவையாக இருந்திருக்கிறேன், என்னுடைய பிறப்பு இந்த பூமிக்கு பாரமில்லாமல் பயனுள்ளதாக இருந்திருக்கிறது, என்னைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் இயற்கையை ஏமாற்றி விடாமல் அதை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவி இருக்கிறேன் என்பதுபோன்ற பல நம்பிக்கைகளை வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது இன்று வரை.
நம்பிக்கைதானே வாழ்க்கை!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software