ஹலோ with காம்கேர் – 203
July 21, 2020
கேள்வி: வீட்டுப் பெரியவர்களை வேலை வாங்கலாமா?
வீட்டில் உள்ள வயதான அப்பா அம்மா சும்மா இல்லாமல் ஏதேனும் வேலை செய்துகொண்டே இருக்கிறார்கள். அக்கம் பக்கம் உள்ளவர்கள் ‘வயதான பெற்றோரை ஏன் வேலை வாங்குகிறீர்கள்’ என்ற கேள்வியை கடந்து வராதவர்களே இருக்க முடியாது.
உடலும் மனதும் ஆரோக்கியமாக உள்ள பெரியவர்களால் ஒரு இடத்தில் சும்மா உட்கார்ந்திருப்பது என்பது முடியாத செயல். அவர்களால் முடிந்த செயல்களை அவர்கள் செய்வதில் தவறில்லை.
எத்தனை நேரம்தான் சும்மா உட்கார்ந்து டிவி பார்ப்பார்கள், செய்தித்தாள் வாசிப்பார்கள், புத்தகம் படிப்பார்கள் சொல்லுங்கள். அவர்களால் முடிந்த செயல்களை அவர்கள் செய்வதை தடுக்க வேண்டாம்.
அவரவர்களுக்கு எது பிடிக்கிறதோ அதை செய்வது அவர்களுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தைக் கூட்டுமே தவிர குறைக்காது. ஆனால் அதுவே உடல் முடியாதவர்களை வற்புறுத்தி ஒரு செயலைச் செய்யச் சொல்லும்போதுதான் அவர்கள் உடல் நலம் மேலும் சோர்வடையும்.
என் அம்மா தன்னுடைய 73 வயதில் இன்றும் தானாகவே வெயில் காலத்தில் வெயிலை வீணடிக்காமல் வடாம் போடுகிறார். எனக்குத் தெரிந்து நாங்கள் கடைகளில் வடாம் வாங்கியதாக நினைவே இல்லை. இத்தனைக்கும் அவர் 40 வருடங்கள் பணியில் இருந்தவர். வீட்டுக்குத் தேவையான சாம்பார் பொடி, ரசப்பொடி, மோர்குழம்புப் பொடி, புளியோதரைப் பொடி, கூட்டுப் பொடி என சகலவிதமான பொடிகளை 40 வருடங்களுக்கு முன்பே அந்தக் காலத்திலேயே வீட்டிலேயே தயாரித்தவர். இன்றும் தயாரிக்கிறார். அதுபோலவே தோட்ட வேலை, புத்தகங்கள் வாசித்தல், இயற்கை மருத்துவம் என அத்தனையிலும் ஆர்வமும் அனுபவமும் உண்டு.
தினமும் காலையில் 6-7 வாக்கிங் சென்று வந்த பிறகு 7-9 வரை லேப்டாப்பில் ஆன்லைனில் செய்தித்தாள், வார, மாத இதழ்கள் வாசிப்பார். பிறகுதான் டிபன் சமையல் எல்லாமே. இன்று நேற்றல்ல கடந்த 6 வருடங்களுக்கும் மேலாகவே ஆன்லைனில் பத்திரிகைகள் வாசிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு என் சகோதரன் சகோதரி வீட்டுக்குச் செல்லும் நாட்களில் படிப்பதற்கு அதுதான் வசதியாக உள்ளது. தவிர கிண்டிலிலும் புத்தகக் குவியல்கள் உண்டு. வீட்டிலும் லைப்ரரி உண்டு.
அம்மா நினைத்துக்கொண்டால் அமெரிக்காவுக்கு தனியாகவே விமானப் பயணத்துக்கு தயார் ஆகிவிடுவார் தன் பேரன் பேத்திகளை பார்ப்பதற்கு.
அம்மாவுக்கும் ப்ளாக் (Blog) உண்டு. அவ்வப்பொழுது அதில் எழுதியும் வருகிறார். அதில் அம்மா எழுதிய கலிகாலம் என்ற கதை ரொம்ப பிரபலம். (http://padmalogy.blogspot.com/2016/02/blog-post_7.html)
அதுபோல என் அப்பாவுக்கு தெரியாத வேலையே இல்லை எனலாம். எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் பொருட்களைப் பழுது பார்த்தல், பெயிண்டிங் செய்தல், பைக், கார் போன்றவற்றில் பழுதிருந்தால் சரி செய்யும் மெக்கானிக் வேலைகள் என அத்தனையும் அத்துபடி. ஏன் கம்ப்யூட்டரைக்கூட பழுது பார்க்கத் தெரியும். இதையெல்லாம் எங்கேயும்போய் கற்கவில்லை. அடிப்படை ஆர்வம் இருந்தால் எல்லா வித்தைகளும் நம் வசம்தான் என்பதற்கு என் அப்பா ஓர் ஆகச் சிறந்த உதாரணம்.
இன்றும் தானேதான் கார் ஓட்டி செல்கிறார். காய்கறி வாங்குவதையே கவிதை எழுதும் நேர்த்தியுடன் ரசித்து ரசித்து வாங்குவார். அப்பாவுடன் மளிகை வாங்கச் செல்வது எனக்கு புத்துணர்வாக இருக்கும். பார்த்துப் பார்த்து வாங்கும் பக்குவம் நம்மையும் அறியாமல் ஒரு சுறுசுறுப்பை நமக்குள் நிரப்பிச் செல்லும்.
தாத்தா, பெரியப்பா வரிசையில் அப்பா ஹோமியோபதி மருத்துவமும் பழகியவர். ஜோதிடமும் தெரியும். குடும்பத்தில் யாருக்கு திருமணம் முதலான நல்ல விஷயங்கள் என்றாலும் அப்பாதான் ஜோதிட ஆலோசகர்.
தவிர விதவிதமாக சமையல், டிபன், இனிப்பு, காரம் செய்தல் உட்பட வீட்டு வேலைகள் அத்தனையையும் அத்தனை நேர்த்தியாக செய்வார்.
அவர் போடும் டிகாஷனே அத்தனை நறுமணமாக இருக்கும். அவர் தயாருக்கும் காபிக்கும், சாம்பார் சாதத்துக்கும் அவியலுக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு எங்கள் வீட்டில்.
இப்போதும் நினைத்துக்கொண்டால் ஏதேனும் ஒரு காரணம் சொல்லி வீட்டில் உறவினர்களை அழைத்து விருந்துக்கு ஏற்பாடு செய்துவிடுவார்.
உறவினர்களை உபசரிப்பதில் அவரை மிஞ்ச ஆளே கிடையாது. அவர் விக்டரி கிங் என்ற பெயரில் தன் இளம் வயதில் கதையெல்லாம் எழுதியுள்ளார். அதே புனைப்பெயரில் தன் ப்ளாகிலும் வாட்ஸ் அப்பிலும் எழுதி வருகிறார்.
என்னுடைய ஃபேஸ்புக் பதிவுகளை முதலில் படிப்பவர் என் பெற்றோர்தான். பிறகுதான் பொதுவெளியில் பதிவிடுகிறேன்.
நேற்று முன் தினம் விருந்தோம்பல் குறித்து அவர் எழுதியுள்ளதைப் பாருங்களேன்.
‘விருந்தோம்பல் ஒரு கடமை அல்ல. வந்தோரை அகமகிழ்ந்து முகமலர்ந்து வரவேற்று, பாசத்துடன் பக்கத்தில் அமர்ந்து உள்ளன்புடன் உரையாடி, வருவோருக்கு ஏற்ப தயாரித்த உணவுகளை பரிவோடு பரிமாறி, அவர்கள் சுவைத்து உண்பதைக் கண்டு அகமகிழ்ந்து அன்போடு உபசரித்து, உண்டபின் பண்போடு அவர்கள் குடும்பத்தினரையும் விசாரித்து குதூகலத்துடன் அவருடைய வருகைக்கு நன்றி சொல்லி வாயில் வரை சென்று வாயார வாழ்த்தி வழி அனுப்புதல்தான் விருந்தோம்பலின் சிறப்பு. அதனால் ஏற்படும் புத்துணர்வை நாம் அனுபவிக்கும் பொழுதுதான் உணரமுடியும்.’ http://vkmathology.blogspot.com/2020/07/blog-post_18.html
இந்த கொரோனா காலத்து லாக் டவுன் காலத்தில் இதற்கெல்லாம் வாய்ப்பில்லாததால் கையைக் கட்டிப் போட்டாற்போல் அமைதியாக இருக்கிறார்.
இந்தக் கதையெல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால் வீட்டில் பெரியவர்கள் இருந்தால் அவர்கள் தானாகவே விரும்பி எதை செய்தாலும் அதை தடுக்க வேண்டாம். அதுபோல வற்புறுத்தி எதையும் செய்ய வைக்க வேண்டாம்.
தானாக விருப்பப்பட்டு செய்வதை தடுப்பதும் ஒன்றுதான். அவர்களுக்கு முடியாத செயல்களை செய்யச் சொல்லி வற்புறுத்துவதும் ஒன்றுதான். ஒரே விளைவையே ஏற்படுத்தும். அவரவர்கள் இயல்பில் அவர்களை செயல்பட வைப்போம். அவர்கள் சுறுசுறுப்புடன் புத்துணர்வாக இருந்தால் அது நம்மையும் ஆட்கொண்டு நேர்மறை சூழலை உண்டாக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அவரவர்கள் இயல்பில் அவரவர்கள் வாழ்வோமே!
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software