ஹலோ With காம்கேர் -216: தற்கொலை முயற்சியில் தோற்றால் இத்தனை கஷ்டங்களா?

ஹலோ with காம்கேர் – 216
August 3, 2020

கேள்வி: தற்கொலை முயற்சியில் தோற்றால் இத்தனை கஷ்டங்களா?

இளம் தொழில் அதிபர் தற்கொலை என்ற செய்தி தொலைக்காட்சியில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டு தினங்களாய் ஏதேனும் ஒரு தொலைக்காட்சியில் இந்த செய்தியும் மனநிலை மருத்துவர்களின் அறிவுரைகளும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஃபேஸ்புக்கை திறந்தால் ஆளாளுக்கு மனோதத்துவ நிபுணர்களாய் கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

‘நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசியிருக்கலாம்’ – இறந்த பிறகு தாராளப் பிரபுக்களாய் சொல்லும் இவர்கள் உயிருடன் இருக்கும்போது அழைத்தால் போனை எடுப்பதே இல்லை. ‘அவ்வளவு பிசியாம் அவர்கள்’.

‘குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்திருக்கலாம்’ – பேசாமலா இருந்திருப்பார்கள். அதையும் மீறிய மன அழுத்தம் இருந்திருக்கலாம்தானே அல்லது குடும்ப உறுப்பினர்களிடமே பிரச்சனை என்றால் எதை அவர்களிடம் பகிர்ந்திருக்க முடியும்?

‘மன இறுக்கம் இருந்தால் மருத்துவரை சந்தித்திருக்கலாம்’ – மன இறுக்கமா, மன அழுத்தமா, மன வருத்தமா என்று புரிபட்டிருந்தால் மருத்துவரை சந்தித்திருக்க மாட்டார்களா?

என் சிறு வயதில் தற்கொலை பற்றிய செய்திகள் வருத்தத்தைவிட ஆச்சர்யத்தையே கொடுத்துள்ளது எனக்கு.

ஆறாம் வகுப்பு படிக்கும்போது உடன் படிக்கும் மாணவி எப்படி தற்கொலை செய்து கொள்ளலாம் என சுவாரஸ்யமாக சக மாணவிகளுக்கு கற்றுக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. ஆனால் என்னை மட்டும் இந்த ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள். அருகில் சென்றாலே பேச்சை நிறுத்திவிட்டு நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொள்வார்கள். ஏனெனில் அந்த வயதிலேயே சரியில்லாத விஷயங்களாக இருந்தால் வகுப்பெடுக்க ஆரம்பித்து விடுவேன் என்பதால் ஒதுக்கி வைப்பார்கள்.

தண்ணீர் தொட்டி மீது பலகையை போட்டுவிட்டு மேலே க்ரில் கம்பியில் வேட்டியை கட்டி அதனுள் கழுத்தை வைத்துக்கொண்டு இறுக்கியபடி காலால் பலகையை தள்ளிவிட வேண்டும். எப்படியெல்லாம் ஆராய்ச்சி செய்திருந்தால் இப்படி டெமோ செய்து காண்பிப்பதைப் போல சொல்ல முடியும்.

எட்டாம் வகுப்பு படிக்கும்போது செம்பருத்திப் பூ மற்றும் இலைகள் இவற்றை அரைத்து சாப்பிடுதல், புளியங்கொட்டையை உடைத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுதல் என வெவ்வேறு வழிமுறைகளையும் பிற தோழிகள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன்.

அந்தகாலத் திரைப்படங்களில் விஷம் என்று எழுதி ஒரு டேபிள் டிராயரில் வைத்திருப்பார்கள். ஏதேனும் பிரச்சனை என்றால் விஷம் என்று எழுதி இருக்கும் பாட்டிலை பார்வையாளர்களுக்குக் காட்டிவிட்டு விம்மி அழுதபடி அப்படியே வாயில் சாய்த்துக்கொள்வார்கள். சில நொடிகளில் சாய்ந்து விழுந்து இறப்பார்கள். வீட்டில் கடுகு பெருங்காயம் மஞ்சள்பொடிப்போல விஷ பாட்டிலையும் வைத்திருப்பது குறித்து அந்த காலத்து சினிமா பார்க்கும்போதெல்லாம் வியப்புதான்.

இன்னும் சில திரைப்படங்களில் அம்மியில் பச்சையும் சிவப்புமாக இலைகளை அரைத்து கண்ணீர் விட்டபடி விழுங்குவார்கள். சில நிமிடங்களில் துடித்துடித்து வாயில் நுரைவர கண்கள் செருக இறந்துவிடுவார்கள்.

இப்படி சினிமாக்கள் சொல்லிக்கொடுக்கும் விஷயங்களை சக மாணவிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்களோ என்று நினைப்பேன்.

கல்லூரி படிக்கும்போது தன்னை காதலித்த ஒருவன் திடீரென ஒதுக்குவதால் தற்கொலை செய்துகொள்வதாய் சொல்லிக் கொண்டிருப்பாள் சக மாணவி ஒருவள். தினமும் அவள் வகுப்புக்கு வந்து இருக்கையில் அமரும் வரை திக் திக் என இருக்கும். ஒருநாள் விடுப்பு என்றாலும் தற்கொலை செய்துகொண்டிருப்பாளோ என துடித்துப் போய்விடுவேன்.

ஆனால் அவள் வேறு ஒருவனை  திருமணம் செய்துகொண்டாள். இப்போது கல்லூரியில் படிக்கும் இரு மகள்களுக்குத் தாய்.

இப்போதெல்லாம் தற்கொலை செய்திகள் அதிகம் வருவதால் அது குறித்த பார்வைகள் எனக்குள் அதிகமாகிக்கொண்டேதான் வருகின்றதே தவிர குறையவே இல்லை.

அதெப்படி மிகச் சரியாக ஃபேனில் புடவையையோ அல்லது கயிற்றையோ கட்டி குறி தப்பாமல் தற்கொலை செய்துகொள்ள முடிகிறது. கயிறோ அல்லது புடவையோ லூசாகி அறைகுறையாக கழுத்து மாட்டிக்கொண்டு முழுவதுமாக சாக முடியாமல் பக்கவாதம், ஹார்ட் அட்டாக், மூளையில் ரத்த நாளங்கள் வெடித்தல் என வேறுவிதமான வியாதிகள் வந்து படுத்தப் படுக்கை ஆகிவிட்டால் பிறரை நம்பியே வாழ்க்கையை ஓட்ட வேண்டுமே.

இன்றும் தூக்கு மாட்டிக்கொண்டு சாக நினைப்பவர்களை நினைத்து  பதபதைப்புதான் எனக்கு.

உடலில் தீ வைத்துக்கொள்பவர்கள் நிலையோ அந்தோ பரிதாபம். சுவாமி விளக்கு ஏற்றும்போது தீக்குச்சியின் நெருப்பு லேசாக கைவிரலில் பட்டாலே இரண்டு நாட்களுக்கு சுறுக் சுறுக்கென குத்தி வலி உயிரை எடுக்குமே. உடல் முழுவதும் பாதி வெந்தும் வேகாததுமாய் முகம் முழுவதும் கருகி நம் முகத்தை நாமே பார்க்க சகிக்க முடியாமல்… ஐயோ நினைத்தும் பார்க்க முடியவில்லையே. எல்லாவற்றையும் விட உயிர் பிழைத்தாலும் உடலில் தீக்காயங்கள் ஆறுவதற்கு எத்தனை நாட்களாகும். அதுவரை நரக வேதனைதானே. அதை தாங்கும் சக்தி எந்த ஜீவனுக்குமே இருக்காதே.

இன்றும் தீக்குளிப்பவர்களை நினைத்து  திகில்தான் எனக்கு.

தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரை மாய்த்துக்கொள்பவர்கள் எத்தனை மாத்திரைகள் சாப்பிடுவார்கள். உயிர்போகாமல் கோமாவுக்குச் சென்று வாழ்நாள் முழுவதும் பிறரை நம்பியே வாழ வேண்டி வந்துவிட்டால் என்ன செய்வது.

இன்றும் தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிர்துறக்க நினைப்பவர்களை நினைத்து  பயம்தான் எனக்கு.

சாவை சந்திக்க முடிவெடுப்பவர்களை நினைப்பதற்கே இத்தனை பதபதைப்பும், திகிலும், பயமும் கலந்த உணர்வுகள் என்றால், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து அறையும் குறையுமாக உயிர் தப்பி குற்றுயிரும் குலை உயிருமாக தப்பிப்பவர்களின் மன நிலை எப்படி இருக்கும்? நினைக்கவே முடியவில்லையே அந்த துயரத்தை.

சாக நினைத்து தற்கொலைக்கு முயன்று தோற்றால் இத்தனை கஷ்டங்களை அனுபவிப்பதற்கு பதிலாக வாழ்ந்துவிட்டுப் போய்விடலாமே. எப்படியும் கஷ்டம்தான். வாழ்ந்து கஷ்டப்பட்டுவிட்டுப் போகலாமே, பிறருக்கு தொந்திரவாக இல்லாமல். என்ன நான் சொல்வது?

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 51 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon