ஹலோ With காம்கேர் -215: மனச் சோர்வை விரட்டுவது எப்படி?

ஹலோ with காம்கேர் – 215
August 2, 2020

கேள்வி: உங்களுக்கு மன அழுத்தமோ மனச் சோர்வோ வரவே வராதா, எப்போதுமே புத்துணர்வுடன் செயல்படுகிறீர்களே?

இந்த கேள்வியை என்னை தினமும் சந்திக்கும் எங்கள் நிறுவன தொழில்நுட்ப வல்லுநர்கள் முதல் என்னை என் எழுத்தின் மூலம் அடையாளம் காணும் வாசகர்கள் வரை அனைவருமே கேட்பார்கள். ஒருசிலர் மனதுக்குள் கேட்டுக்கொள்வார்கள். ஒரு சிலர் வெளிப்படையாக.

அன்பு,  பாசம், கோபம், சினம்,  ஆனந்தம், இன்பம், மகிழ்ச்சி, துக்கம், ஆசை, பொறாமை, வெறுப்பு , விரக்தி, அமைதி, பயம் , கவலை, எதிர்பார்ப்பு, ஏமாற்றம், ஆச்சரியம், வெட்கம், பரிவு,  இரக்கம், காதல், எரிச்சல், சலிப்பு, குற்றுணர்வு, மனவுளைச்சல் அல்லது மன அழுத்தம், ஈர்ப்பு,  பெருமை, உணர்வின்மை, நம்பிக்கை ,  மனக்கலக்கம், தவிப்பு, பற்று, அவநம்பிக்கை அல்லது நம்பிக்கையின்மை , சோம்பல், அதிர்ச்சி, மன நிறைவு அல்லது திருப்தி,  தனிமை, அவா, வலி, அலட்சியம்,  திகில், பீதி  என நம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை எத்தனையோ உணர்வுக் குவியல்கள் குவிந்திருக்கும். சூழலுக்கு ஏற்ப அவை வெளிப்படும். உணர்வுகளை நம் எப்படி ஆள்கிறோம் என்பதில்தான் நமக்கான பிம்பங்கள் உருவாகின்றன.

அந்த வகையில் நான் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயங்கி வருவதால் எனக்கு மனச் சோர்வே வராது என்றும், வருத்தங்களே கிடையாது என்றும் இந்த உலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்காக மட்டுமே பிறந்திருக்கிறேன் என்றும் நினைப்பவர்கள் பலர் உள்ளனர். கூடவே, எல்லா கஷ்டங்களையும் தாங்கள் மட்டுமே அனுபவிப்பதாக ஒருவித தாழ்வு மனப்பான்மையையும் தங்களுக்குள் ஏற்றிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

என்னைப் பார்த்து பல நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டேன், வாழ்க்கையில் கடைபிடிக்க முயற்சி செய்து வருகிறேன் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். தங்களால் அப்படி இருக்க முடியவில்லையே என நினைத்து தாழ்வு மனப்பான்மையில் மனம் புழுங்குபவர்களும் இருக்கிறார்கள்.

ஒரே பிம்பம். இரண்டு விதமான பிரதிபலிப்புகளை உண்டாக்குவது ஆச்சர்யம் தானே. ஒன்று நேர்மறையாக மாறுவது, மற்றொன்று நேர்மறையைப் பார்த்தே பொறாமைப்பட்டு எதிர்மறையாக மாறுவது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

உங்களுக்கு மன அழுத்தமோ மனச் சோர்வோ வரவே வராதா… எப்போதுமே புத்துணர்வுடன் செயல்படுகிறீர்களே?

வரும். தான் முன்னேற பிறரை கொஞ்சம் ஒதுக்கியோ அல்லது ஒரேடியாக கீழ் தள்ளியோ மேலே வரத் துடிக்கும் மனிதர்கள் பெருகிவிவிட்ட இந்த நாளில் மன அழுத்தம் வராமல் எப்படி வாழ்ந்துவிட முடியும்.

ஆனால் அதை எப்படி சமாளிக்கிறேன் என்பதில்தான் சூட்சுமம் உள்ளது.

இரண்டு பேர் குடிப்பதற்காக எலுமிச்சைபழ ஜூஸ் தயாரிப்பதாக வைத்துக்கொள்வோம். புளிப்பு அதிகமாகிவிட்டது என்றால் என்ன செய்யலாம். உப்பு கொஞ்சம் சேர்க்கலாம். சர்க்கரை அளவையும் கூட்டிக்கொள்ளலாம். அப்படியும் ஜூஸின் புளிப்பு தாங்க முடியாததாக இருந்தால் என்ன செய்வீர்கள். கொஞ்சம் யோசியுங்கள். தண்ணீரை அதில் நிறைய சேர்த்தால் புளிப்பு குறையும் தானே? அத்துடன் இரண்டு பேர் குடிப்பதற்காக தயாரித்த ஜூஸ் நான்கு அல்லது ஐந்து பேர் சாப்பிடும் அளவுக்கு அதிகமாகக் கூட கிடைக்கும். அதைத்தான் நான் செய்கிறேன்.

எப்போதெல்லாம் மனச் சோர்வு அல்லது மன அழுத்தம் உண்டாகிறதோ அப்போதெல்லாம் வழக்கத்தைவிட அதிகமான வேலைகளை எடுத்துச் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளேன். அந்த வேலை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்வேன். எழுதுவது, அனிமேஷனில் சின்ன சின்ன கான்செப்ட்டுகள் தயார் செய்து வைத்துக்கொள்வது என ஏதேனும் ஒன்றில் அதிதீவிரமாக (Note this Point: அதிதீவிரம்) ஈடுபடுவேன். பிறகு அதுவே பலருக்கும் பயனளிக்கும் வகையில் பிரமாண்ட படைப்பாக உருவாகிவிடும். நானே எதிர்பார்க்காத அளவுக்கு மன நிறைவை கொடுக்கும். பெயர் சொல்லும் பிள்ளையாக ஆகச் சிறந்த படைப்பாக மாறி பலருக்கும் பயனளிக்கும் தயாரிப்பாக கூட மாறிவிடும்.

இதுதான் என் புத்துணர்வின் ரகசியம்.

உங்களுக்குள் ஒரு வருத்தம் அல்லது சோகம். அதை விரட்ட அழுதுகொண்டோ, புலம்பிக்கொண்டோ இருந்தால் அது இன்னும் தீவிரமாகும். அதைவிட்டு விலகி உங்களுக்கு பிடித்த மற்றொரு விஷயத்தில் அதிதீவிரமாக ஈடுபட்டுப் பாருங்கள். இரண்டு நபர்களுக்கான எலுமிச்சைபழ ஜூஸில் புளிப்பு அதிகமாகிவிட்டால் தண்ணீர் விட்டுப் நான்கைந்துபேர் சாப்பிடும் அளவுக்கு பெருக்குவதைப் போல உங்களை வாட்டும் எதிர்மறைகள் விட்டு விலகி நேர்மறைகளால் உங்கள் மனம் நிரம்பி உங்களைச் சுற்றி உள்ளவர்களையும் வாழ வைக்கும்.

இதை ஆத்மார்த்தமாக முயற்சி செய்து பாருங்கள். வெற்றி நிச்சயம்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 43 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon