ஹலோ With காம்கேர் -219: கோபம் வெறுப்பாக மாறும் இடைவெளி அத்தனை வேதனையானதா?

ஹலோ with காம்கேர் – 219
August 6, 2020

கேள்வி: கோபம் வெறுப்பாக மாறும் இடைவெளி அத்தனை வேதனையானதா?

சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் வேலைக்குச் செல்லும் அம்மாக்களுக்கும், அவர்களின் குழந்தைகளுக்குமான உணர்வுப் பூர்வமான விவாத நிகழ்ச்சியை பார்த்தேன். திரைப்பட இயக்குநர் கரு பழனியப்பன் நடுவராக இருந்து நடத்திய நிகழ்ச்சி. மறு ஒளிபரப்பு.

அம்மாக்கள் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகள் தாங்கள் இழக்கும் விஷயங்கள் என்னென்ன என்று நிகழ்ச்சியை நடத்துபவர் கேட்கிறார்.

இப்படி ஒரு கேள்வியை முன் வைத்து நடத்தப்படும் விவாதமே தேவையில்லையோ என்று தோன்றியது. காரணம், இன்றைய காலகட்டத்தில் அப்பா அம்மா இருவருமே வேலைக்குச் செல்வது என்பது சர்வ சாதாரணமாகிவருகிறது. பிள்ளைகள் மனதிலும் அப்பா அம்மா இருவருமே வேலைக்குச் செல்வது என்பது பள்ளிக்குச் செல்வது, சினிமாவுக்கு செல்வது, சுற்றுலா செல்வதுபோல சாதாரணமான பொதுவான விஷயமகாவே பதிந்துள்ளது.

அப்படி இருக்கும்போது அம்மா வேலைக்குச் செல்வது என்பது ஏதோ செய்யக் கூடாத ஒரு செயலை போன்றதொரு உருவகத்தை பிள்ளைகள் மனதில் நாமாகவே எதற்காக திணிக்க வேண்டும்.

ஆனால், நான் நினைத்ததைப் போல் குழந்தைகள் குழம்பியும் விடவில்லை. தவறான புரிதலுடனும் இல்லை. அவர்கள் மிக இயல்பாகவே தங்கள் உலகையும் தாங்கள் வாழ்ந்துவரும் சூழலையும் உள்வாங்கி வளர்ந்துவருகிறார்கள் என்பதை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட குழந்தையும் நிரூபித்தார்கள்.

அம்மா வேலைக்குச் செல்ல வேண்டாம், வீட்டிலேயே இருக்க வேண்டும், அதுதான் எங்களுக்கு பிடிக்கும் என ஒரு குழந்தையும் சொல்லவில்லை.

ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தை பள்ளி ஆண்டுவிழாவில் தனக்கு ஒரு விருது கொடுத்தார்கள் என்றும் அதற்கு தன் அப்பாவினால் வர முடியவில்லை என்றும் சொல்லிவிட்டு ஒரு சிறிய இடைவெளிவிட்டு பேச ஆரம்பிப்பதற்குள் ‘அது உங்களுக்கு எப்படி இருந்தது….’ என்று நெறியாளர் கேட்கிறார்.

‘கொஞ்சம் வருத்தமா இருந்தது… ஆனால் விருதை வாங்கி வந்து வீட்டில் அப்பாகிட்ட காண்பிச்சேன்’ என்று சொன்னாள்.

‘அப்பா கிட்ட உங்கள் ஃபீலிங்கை சொன்னீர்களா…’ என்று திரும்பவும் ஒரு கேள்வியை முன்வைத்தார் நெறியாளர்.

‘ம்ஹூம். சொல்லலை. சொன்னா அப்பா வருத்தப்படுவாரே…’ என்று பார்வையாளர்களை அழ வைத்துவிட்டு சிரித்துக்கொண்டே பேசினாள் அந்த 10 வயது சிறுமி.

அவள் அப்பா அழ, மகள் ஓடிச் சென்று கட்டி அணைத்து முத்தம் கொடுக்க ஒரே பாச மழைதான்.

ஒரு பத்திரிகையாளரின் பதினைந்து வயது பெண் சொன்ன விஷயம்  அட்டகாசம்.

‘என் அம்மா வேலைக்குச் செல்வது என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அம்மா வேலைக்கு செல்ல வேண்டாம் என நான் நினைப்பதும் அப்படி சொல்வதும் எந்த விதத்திலும் நியாயம் ஆகாதல்லவா. அம்மா ஒவ்வொரு நாளும் ஆஃபீஸில் இருந்து வந்ததும் நான் இந்த எழுத்தாளரை பேட்டி எடுத்தேன், அந்த தொழிலதிபரை நேர்காணல் செய்தேன் என்று பெருமையாக சொல்வார். அது அவரது திறமைக்கான வடிகால். எனக்கு எப்படி எதிர்காலத்தில் இப்படி வர வேண்டும், அப்படி வர வேண்டும் என ஒரு குறிக்கோள் இருக்கிறதோ அப்படி என் அம்மாவுக்கு அவரது வேலை ஒரு குறிக்கோள். லட்சியம்…’

என்ன ஒரு மனமுதிர்ச்சியான பதில். வியந்தேன்.

எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவதைப் போல எல்லா குழந்தைகளுமே ஒரு விஷயத்தை ஒன்றுபோல சொன்னார்கள்.

‘உங்கள் அப்பா அம்மா உங்களை அடுத்தவீட்டு குழந்தைகளுடனும் உங்கள் நண்பர்களுடனும் ஒப்பிட்டுப் பேசுவார்கள். அவனைப் பார் எத்தனை மார்க் வாங்கியிருக்கிறான். இவளைப் பார் எத்தனை திறமைசாலியா இருக்கா என்று கம்பேர் செய்வார்கள். அப்படி நீங்கள் உங்கள் அப்பா அம்மாவை யாருடனாவது ஒப்பிட்டு இருக்கிறீர்களா…’ – நெறியாளரின் கேள்வி இது.

‘எங்கள் அப்பா அம்மாவை நாங்கள் யாருடனும் ஒப்பிடவே மாட்டோம். எங்கள் அப்பா அம்மாதான் பெஸ்ட்… அவர்கள் கோபித்துக்கொண்டாலும், திட்டினாலும் எல்லாமே எங்கள் நல்லதுக்குதானே…’

இதைச் சொல்லும்போது குழந்தைகள் முகத்தை உற்று நோக்கினேன். சொல்லிக் கொடுத்து சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல அவை. உள்ளத்தில் இருந்து வருபவையாக இருந்தன. மிக நெகிழ்ச்சியாக இருந்தது.

ஆனாலும் எங்கோ ஓரிடத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே மெல்லிய இடைவெளி ஏற்பட்டுவிடுகிறது. அந்த இடைவெளி முதலில் கோபத்தில் தொடங்கி வெறுப்பில் முடிந்துவிடுகிறது என்பதுதான்  வேதனை. இடைவெளி கோபத்தின் எல்லைக்குள் இருக்கும்போதே கண்டுபிடிக்கப்பட்டுவிட்டால் சரிசெய்துவிடலாம். வெறுப்பின் உச்சத்துக்குச் சென்றால் சரிசெய்வது கடினம்.

கோபம் ஒரு நூலிழையில் வெறுப்பாக மாறிவிட வாய்ப்புண்டு. அப்படி மாறினால் அது எந்த அளவுக்கு குடும்பத்தில் சிக்கலை உண்டுசெய்யும் என்பதை சமீபத்தில் இந்தியில் வெளியான கணித மேதை சகுந்தலாதேவியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் ‘சகுந்தலாதேவி’ உணர்த்துகிறது.

இந்தத் திரைப்படத்தில் கணித மேதை சகுந்தலாதேவியின் வாழ்க்கை சொல்லப்பட்டிருந்தாலும் இரண்டு தலைமுறை  தாய்க்கும் மகளுக்குமான இடைவெளியை உணர்த்தும் அழகான வாழ்வியல் திரைப்படமாகவே நகர்கிறது.

சகுந்தலா தேவி தன் தாய் தனக்கென ஒரு அடையாளம் இல்லாமல் அடங்கியே இருந்ததால் அவரை வெறுக்கிறார். சகுந்தலாதேவியின் மகளோ தன் தாய் தனக்கான அடையாளத்துக்காக மட்டுமே வாழ்வதாகவும், தன் பெருமை, தன் புகழ், தன் அடையாளம் இவற்றுக்காக மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாகவும் நினைத்து அவரை வெறுக்கிறார்.

இறுதி காட்சியில் சகுந்தலா தேவிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுக்கும் விழாவில், ‘என் அம்மா மீது சிறு வயதில் கோபமாக இருந்த நான் எப்போதில் இருந்து வெறுக்க ஆரம்பித்தேன் என தெரியவில்லை. கோபம் வெறுப்பாக மாறிவிட்டது… அந்த வெறுப்பு வாழ்நாள் முழுவதும் என் தாய்க்கும் எனக்கும் மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கிவிட்டது’ என வருத்தப்பட்டுப் பேசுவார்.

சகுந்தலா தேவியின் மகள் தன் தாயை புரிந்துகொள்கிறாரா இல்லையா என்பதுதான் கதையின் டிவிஸ்ட்.

அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.

அன்புடன்

காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software

(Visited 23 times, 1 visits today)
error: Content is protected !!
Compcare K. Bhuvaneswari
Right Menu Icon