ஹலோ with காம்கேர் – 221
August 8, 2020
கேள்வி: வெற்றியின் எதிர்ப்பதம் தோல்வியல்ல, சவால் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஒரு குறிக்கோளுக்காக உழைக்கிறோம் என என வைத்துக்கொள்ளுங்கள். அந்த குறிக்கோளில் வெற்றி பெற்றால் அது Achievement (சாதனை). தோல்வியடைந்தால் அது Challenge (சவால்). இதுதான் Achievement – க்கும், Challenge – க்கும் உள்ள வித்தியாசம்.
அதாவது வெற்றிகளை சாதனைகளாகவும், தோல்விகளை சவால்களாகவும் எடுத்துக் கொண்டால் ஏமாற்றம் இருக்காது.
எல்லோருமே முதன் முறையிலேயே எல்லாவற்றிலும் வெற்றி அடைந்துவிடுவதில்லை. வெற்றி பெற்றவர்கள் அவர்களின் அந்த வெற்றிக்கு முன்னர் பல கடும் தோல்விகளை சந்தித்தித்திருப்பார்கள். ஆனால் நம் கண்களுக்குத் தெரிவது அவரது வெற்றியும் அவர்களது வெற்றிக் களிப்பும் மட்டுமே. எனவே தான் அந்த வெற்றியைப் பார்த்து நாம் ஆச்சர்யப்படுகிறோம், அதிசயப்படுகிறோம். ஒருசிலர் பொறாமையும்படுகிறார்கள்.
உதாரணத்துக்கு எங்கள் காம்கேர் நிறுவனத்தில் எத்தனையோ ப்ராஜெக்ட்டுகளை சாஃப்ட்வேர்களை தயாரித்துள்ளோம். ஆனால் அத்தனையும் வியாபார ரீதியாக வெற்றிபெற்றதில்லை. ஒரு நிறுவனம் என்றால் அதில் தயாராகும் எந்த ஒரு விஷயத்துக்குப் பின்னாலும் பலரது கடுமையான உழைப்பும் பங்களிப்பும் இருக்கும்.
அப்படி பலரது கூட்டு முயற்சியினால் உருவாகும் ஒரு தயாரிப்பு வியாபார ரீதியாக வெற்றியடையவில்லை என்பதற்காக அது சரியில்லாத தயாரிப்பு என்று பொருள் அல்ல. அந்த தயாரிப்புக்கு போட்ட முயற்சிகளும் கிடைத்த அனுபவங்களும் அதைப்போல பல தயாரிப்புகளை உருவாக்கப் பயன்பட்டுள்ளன. அதனால்தான் எந்த முயற்சியையும் தோல்வி என்று ஒதுக்கிவிடாமல் அதை சவால் என்று எடுத்துக்கொண்டால் ஏமாற்றம் இருக்காது.
நீங்கள் ஆசை ஆசையாய் வளர்க்கும் உங்கள் பிள்ளைக்கு படிப்புடன் சேர்த்து ஓவியம், இசை, கேம்ஸ் என எத்தனையோ விஷயங்களை அவர்களுக்குக் கற்றுகொடுத்து அவர்கள் உலகை அழகாக்கி வருகிறீர்கள்.
ஆனால் உங்கள் குறிக்கோள் உங்கள் குழந்தை நூற்றுக்கு நூறு வாங்க வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் நீங்கள் நினைத்த அளவுக்கு உங்கள் குழந்தை நன்றாக படிக்கவில்லை, அதிக மதிப்பெண் வாங்கவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக அந்தக் குழந்தை புத்திசாலி இல்லை என்று ஒதுக்கிவிடுகிறீர்களா என்ன?
நீங்களே எதிர்பார்க்காத வண்ணம் உங்கள் குழந்தை இசையில் கொடிகட்டிப் பறக்கலாம். ஓவியத்தில் மீடியாவை கலக்கலாம். ஸ்போர்ட்ஸில் உலக அரங்கில் நாட்டுக்குப் பெருமை சேர்க்கலாம்.
அப்படி நடந்தால், உங்கள் பிள்ளை வெற்றி பெறும் விஷயங்களை சாதனையாகவும், சாதனைக்கு நடுவே படிப்பிலும் கோட்டை விட்டுவிடாமல் பட்டம் பெறுவதை சவாலாகவும் நீங்களே எடுத்துக்கொண்டுவிடுவீர்கள். அப்போது மதிப்பெண் எல்லாம் இரண்டாம் பட்சமாகிவிடும். பாஸ் செய்து பட்டம் பெற்றிருப்பதே உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துவிடும். காரணம் உங்கள் பிள்ளை தனக்கான வெற்றி முகத்தை வேறொரு துறையில் காண்பிக்க ஆரம்பித்திருப்பது.
இப்படித்தான் நம் எல்லோர் வாழ்க்கையிலும் சாதனைகள் செய்யவும், சவால்கள் புரியவும் எத்தனையோ விஷயங்கள் காத்திருக்கின்றன.
இது புரியாமல் பலரும் சாதனைகள் மட்டுமே வெற்றி என நினைத்து சவால்களை தோல்வி எனக் கருதி சோர்ந்துவிடுகிறார்கள். உண்மையில் பல சவால்களைக் கடந்து நமக்குக் கிடைப்பதுதான் சாதனை.
தோல்வி என்ற ஒரு விஷயமே இல்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். ஒரு முயற்சியில் வெற்றி கிடைக்கவில்லை என்றால் அது சவால். அவ்வளவுதான். சுருங்கச் சொன்னால் பாலிஷ் செய்யப்பட்ட சவால்களே சாதனைகள். வெற்றியின் எதிர்ப்பதம் சவால். தோல்வி அல்ல.
சவால்களுடன் இணைந்து சாதனைகள் புரிய முயற்சியுங்கள்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software