ஹலோ with காம்கேர் – 222
August 9, 2020
கேள்வி: தன்னிலை விளக்கங்கள் பெரும்பாலும் பொய்த்துவிடுவது ஏன்?
ஒரு சிலரை கவனித்திருக்கிறீர்களா? எனக்குக் கோபமே வராது என்று அடிக்கடி சொல்வார்கள். ஆனால் அவர்கள்தான் தங்கள் கோபத்தை அவர்களை அறியாமலேயே மிக ஆழமாக வெளிப்படுத்துவார்கள். இன்னும் சொல்லப் போனால் அவர்களை கோபப்படுத்தும் விதமாக எதிராளி எதையுமே செய்திருக்க மாட்டார்கள். ஆனால் ஏதோ ஒரு விஷயத்தால் எதிராளியின் செயலோ பேச்சோ இவர்களை மிகச் சிறிய அளவில் லேசாக உறுத்தி இருக்கும். இத்தனைக்கும் வேண்டுமென்றேகூட எதிராளி செய்திருக்க மாட்டார். அந்த ஒரு சிறிய விஷயத்தைக் கூட பொறுக்க முடியாது ‘எனக்குக் கோபமே வராது’ என சொல்லும் நபர்களினால்.
இதுபோன்று ‘நான் இப்படி, நான் அப்படி’ என அடிக்கடி வெளியில் சொல்லும் நபர்களை உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் ஓர் உண்மை புரியும். அதாவது அவர்கள் சமுதாயத்தில் தங்களுக்கென ஓர் இமேஜை வளர்த்து வைத்திருப்பார்கள். அந்த இமேஜை காப்பாற்றுவதற்காக பெரும்பாடுபடுவார்கள். ஆனால் உண்மையில் மனதளவில் அவர்கள்தான் பலவீனமானவர்கள். தொட்டாற்சிணுங்கி.
ஒரு பிரபலம். நல்ல படைப்பாளி, நல்லவர், வல்லவர் என பெயரெடுத்தவர். ஈகோ இல்லாமல் எல்லோருடனும் பழகுவார், கோபமே வராது, இனிமையானவர் என்ற இமேஜை அவரை அறியாமலேயே பெற்றிருந்தார். அவரது இயல்பு முதலில் சொன்ன மூன்று மட்டுமே, இரண்டாவதாக சொன்ன மூன்றும் அவரையும் அறியாமல் அவருக்கு இந்த சமுதாயம் கொடுத்துள்ள அங்கீகாரமாக இருக்கும். ஆனால் அதையும் அவரால் விட்டுக்கொடுக்க முடியாது. தவியாய் தவித்துத்தான் பொது இடங்களில் தன் இமேஜை காப்பாற்றிக்கொள்வார்.
அவரை சந்திக்க ஏராளமானோர் வருவார்கள். ஒருமுறை அவர் அலுவலகத்தில் அவருடைய படைப்புக்களின் தீவிர ரசிகர் ஒருவர் அவரை சந்திக்க நெடுநேரம் காத்திருந்தார்.
ஆனால் பிரபலத்தின் உதவியாளர் மூலம் அவர் எத்தனை முறை சொல்லி அனுப்பினாலும் அந்தப் பிரபலம் இவரை உடனடியாக சந்திக்க வாய்ப்பளிக்காமல் காத்திருக்க வைத்தார்.
சில மணி நேர காத்திருப்புக்குப் பிறகு அனுமதி கிடைக்க அவரை சந்தித்து பேசிவிட்டுக் கிளம்பினார். நடுவே உதவியாளரை அழைத்து ‘ஏன் இவர் பெயரை என்னிடம் சொல்லவில்லை… சொல்லி இருந்தால் முன்பே அழைத்து பேசியிருப்பேன் அல்லவா?’ என்றார். உதவியாளர் சிரித்தபடி தலையை சொறிந்துகொண்டு நின்றார்.
அந்த ரசிகர் விடைபெற்றவுடன் உதவியாளரை அழைத்தார் அந்தப் பிரபலம். பிபி மாத்திரை சாப்பிட்டு தண்ணீர் குடித்துவிட்டு உதவியாளரிடம் சத்தம் போட்டார்.
‘இவனை ஏன் காத்திருக்க வைத்தீர்கள்…’
‘சார்… நீங்கள்….’
‘ஏதேனும் காரணம் சொல்லி நான் இல்லை என சொல்லி அனுப்பி இருக்க வேண்டியதுதானே… இவனெல்லாம் அதிகப்பிரசங்கி… இப்போ இன்னும் சில நிமிடங்களில் என்னுடன் எடுத்த செல்ஃபியை ஃபேஸ்புக்கில் போட்டு பெருமை பேசப் போறான்… என் நேரத்தின் அருமை இவனுக்கெல்லாம் எப்படி தெரியப் போகிறது…’
அவன் இவன் என்ற ஏக வசனத்தில் தன் ரசிகரை பேசியது உதவியாளருக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. அவர் குணம் தெரிந்ததுதான் என்றாலும் இந்த அளவுக்கு கடுமையும், கோபமும், ஆத்திரமும், பொறுமையின்மையும் கொண்டவர் என்பதையும் பக்கா சுயநலவாதி என்பதையும் அன்றுதான் புரிந்துகொண்டார் உதவியாளர்.
இந்த நிகழ்வில் வரும் பிரபலத்தைப் போல பலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் வெளியில் சொல்லிக்கொள்வது ‘எனக்குக் கோபமே வராது’ என்று. இப்படிச் சொல்பவர்களுக்குள் கோபம் கனன்று கொண்டே இருக்கும். அந்த கோபத்தின் வெக்கை எப்போதெல்லாம் அவர்களையே சுடுகிறதோ அப்போதெல்லாம் அதை பிறர் மீது காட்ட முடியாத சூழலில் இப்படி வார்த்தைகளால் சொல்லி ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள்.
மேலும் ‘ஆஹா, எவ்வளவு பெருந்தன்மையானவர்’ என்று பிறரிடம் பெயரெடுக்கும் உளவியலும் இதில் உள்ளது.
கோபப்படுவது தவறில்லை. மோசமான குணமும் இல்லை. தார்மீகக் கோபம் அனைவருக்குமே அவசியம். அது இல்லை என்றால் நம் இருப்பை நாம் தொலைத்துவிடுவோம்.
ஆனால் ‘எனக்குக் கோபமே வராது, என்னை யாரும் கோபப்படுத்தவே முடியாது…’ என்று சொல்லிக்கொள்வதைத்தான் ஆபத்தான மனநிலை என்கிறேன்.
எனவே ‘எனக்கு கோபமே வராது’, ‘நான் ரொம்ப அமைதியானவள்’, ‘நான் அப்படி’, ‘நான் இப்படி’ என அடிக்கடி தன்னிலை விளக்கம் அதிகம் கொடுக்கும் நபர்கள் சொல்வதை அப்படியே வேதவாக்காக நினைத்துவிட வேண்டாம்.
பிறரை புரிந்துகொள்ளவும் நல்ல நட்பு மலரவும் நாமாக அவர்களை உணர்ந்துகொள்ளும் காலம் கனிய வேண்டும். பிறர் கொடுக்கும் தன்னிலை விளக்க ‘கான்டேக்ட் சர்டிஃபிகேட்’ பெரும்பாலும் எதிர்மறையாகவே அமைந்துவிடுகிறது. சில நேரங்களில் பொய்த்தும் விடுகின்றன.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software