ஹலோ with காம்கேர் – 249
September 5, 2020
கேள்வி: ஒன்றாம் வகுப்பு அட்டகாசங்கள் நினைவில் இருக்கிறதா?
இந்தப் புகைப்படம் திருவாரூரில் அரசுப் பள்ளியில் நான் முதல் வகுப்பு படிக்கும்போது பள்ளிக்கூடத்தில் எடுத்தது. கீழே வலது மூலையில் புகைப்படத்துக்குக்கு போஸ் கொடுக்காமல் தூரத்தில் நின்றிருந்த என் அப்பாவை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
நன்றாக உற்றுப் பார்க்கிறேன். எல்லா குழந்தைகளும் கேமிராவை பார்க்க, நான் மட்டும் வேறு திசையில்… இதில் உள்ள என்னை நான் மூன்றாம் நபராக கவனிக்க கவனிக்க என் குணாதிசயங்கள் இன்றுவரை அப்படியே அதே பாதையில் கொஞ்சமும் தடம் மாறாமல் பயணிப்பதை உணர முடிகிறது.
இப்படி Odd man out ஆக பயணிப்பது சிரமம் தான். ஆனால் நிறைவு.
இதில் அமர்ந்திருக்கும் ஆசிரியரின் பெயர் மல்லிகா டீச்சர்.
இவருக்கும் எனக்குமான மறக்க முடியாத ஒரே ஒரு நிகழ்வு மட்டும் நினைவில் உள்ளது.
நான் சிறுவயதில் லூட்டி அடிக்கும் பெண்ணெல்லாம் கிடையாது. வீட்டைவிட்டு வெளியே யாருடனும் அத்தனை எளிதாக பேசிவிட மாட்டேன். அமைதி அமைதி பேரமைதி. வாயைத் திறந்துப் பேசுவதற்கே காசு கொடுக்க வேண்டும். காம்கேர் தொடங்குவதற்கு முன்வரை இப்படித்தான் இருந்திருக்கிறேன். சொந்தமாக நிறுவனம் தொடங்கிய (1992) பிறகு நான் வளர்த்துக்கொண்ட ஆளுமைதான் இப்போது நீங்கள் அனைவரும் பார்ப்பது.
அதுவரை என் வலிமை முழுவதும் உள் வலிமையே.
தைரியம் தன்னம்பிக்கை ஆளுமை அத்தனையையும் படிப்புடன் சேர்த்து உள்ளுக்குள் புடம்போட்டு வளர்த்துக்கொண்டிருந்தேன்.
படித்து முடித்து சுயமாக பிசினஸ் தொடங்கிய பிறகு உள் வலிமை அத்தனையும் வெளி வலிமையாக மாறியது. திறமை, உழைப்பு, கல்வி இவற்றுடன் உள் வலிமையாக சேமித்து வைத்திருந்த தைரியம் தன்னம்பிக்கை அத்தனையும் வெளி வலிமையாக மாறி இந்த சமுதாயத்தை எதிர்கொள்ள உதவியது.
சரி இந்தப் புகைப்படத்துக்கு வருகிறேன். முதல் வகுப்பில் இந்த ஆசிரியரிடம் நான் படிக்கும்போது அவருடைய நாற்காலிக்கு மிக அருகே முதல் மாணவியாக நான் அமர்ந்திருப்பேன். ஒருநாள் நான் அவர் நாற்காலிக்கு அடியே எப்படியோ சென்றுவிட்டேன். வெளியே வர முடியவில்லை.
ஆசிரியர் என்னைப் பார்த்ததும் நாற்காலியை நகர்த்தி என்னை வெளியே எடுத்து ஸ்கேலால் இரண்டு தட்டு மெல்ல தட்டினார். அவ்வளவுதான் நான் அழ ஆரம்பித்து தொடர்ச்சியாக அழுதுகொண்டே இருந்திருக்கிறேன்.
அப்பா என்னை பள்ளியில் இருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல வந்தபோது நான் அழுதுகொண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அந்த ஆசிரியரிடம் அழைத்துச் சென்று பேசி என்னை சமாதானப்படுத்தினார்.
இப்படி அப்பா எனக்காக ஆசிரியரிடம் சென்று அடித்ததற்கான நியாயம் கேட்டது எனக்கு அப்பா மீதான பிரியத்தைக் கூட்டியது.
அம்மா மட்டும் என்ன சும்மாவா? அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்ததும் நான் என்ன செய்தேன், ஆசிரியர் என்ன செய்தார் என கேட்டு தெரிந்துகொண்டார். இந்தக் கூத்தில் எனக்கு அன்றிரவு ஜூரம் வந்துவிட்டது.
மறுநாள் அம்மாவும் ஆசிரியரிடம் வந்து என் மென்மையான அமைதியான சுபாவத்தை எடுத்துச் சொன்னார்.
அப்பாவும் அம்மாவும் ஆசிரியரிடம் வந்து பேசிச் சென்ற பிறகு எனக்கு பள்ளியில் ராஜ மரியாதைதான் என்று சொல்ல வேண்டுமா?
இப்படி சின்ன சின்ன நினைவுகளை எனக்குள் தேக்கிச் சென்ற அத்தனை ஆசிரிய பெருமக்களுக்கும் இந்த ஆசிரிய தினத்தில் என் வணக்கங்கள்.
நாங்கள் தயாரித்த எங்கள் பெற்றோரின் ‘அன்புள்ள அப்பா அம்மாவுக்கு’என்ற வாழ்க்கை ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ள ஆசிரியர் காட்சியை மட்டும் உங்கள் பார்வைக்கு இணைத்துள்ளேன்.
அனைவருக்கும் இந்த நாள் இனிய நாளாகட்டும்.
அன்புடன்
காம்கேர் கே. புவனேஸ்வரி, CEO
Compcare Software